வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் வழக்கம் போல் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டிந்தனர். அப்போது சிறுத்தை ஒன்று ஊருக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. யாரும் எதிர்பாராத நேரத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த பாரதி என்பவரை சிறுத்தை தாக்கியது. அத்துடன் அவரைக் காப்பாற்ற சென்ற அலுமேலு அம்மாள் என்பவரையும் சிறுத்தை தாக்கியது.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் சிறுத்தை பதுங்கிக்கொண்டது. சிறுத்தை இருப்பதை அறிந்த மக்கள் அதனை பார்க்க அதிக அளவில் குவிந்தனர். அப்போது பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென வேகத்துடன் வெளியே வந்து, வேடிக்கைப் பார்த்த மக்களை விரட்டி சென்று கடுமையாக தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் வேடிக்கை பார்க்கச் சென்ற சந்தோஷ் மற்றும் கமல் ஆகியோர் காயமடைந்தனர். ஆந்திராவின் வீரணமலை பகுதியில் இருந்து வழிதவறி இந்தச் சிறுத்தை ஊருக்குள் வந்திருக்கலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்களை அச்சுறுத்தி கிராமத்திற்குள் பதுங்கியுள்ள அந்தச் சிறுத்தையைப் பிடிக்க 20 வன ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் புதிய தலைமுறைக்கு தெரிவித்துள்ளார். சிறுத்தையின் தாக்குதலால் அந்தக் கிராமமே பரப்பரப்புடன் காணப்படுகிறது. இந்தப் பிரச்சனை மேற்குத் தொடர்ச்சி மலையொட்டியுள்ள காடுகளிலும், பல மலை பிரதேசங்களிலும் சிறுத்தை பிரச்சனை பல ஆண்டுகாளமாக காணப்படுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சனை இருந்து வருகிறது. உதாரணமாக ஜிம் கார்பெட் எழுதிய "ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லி சிறுத்தை" என்ற நூலில் விரிவாகவே எழுதப்பட்டிருக்கும்.
சிறுத்தையின் குணாதிசயங்கள்
சிறுத்தைகள் கூச்ச சுபாவமுள்ள விலங்கு அவை பொதுவாக காட்டுப்பகுதிகளிலேயே சுற்றித்திரிந்து இரைதேடுகின்றன. மனிதர்கள் உள்ள பகுதிகளில் உலாவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சிறுத்தையும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுற்றிஅலைந்து இரைதேடவும், தமது துணையை கண்டுகொள்ளவும் செய்கின்றன. இது ஆண் சிறுத்தைக்கும் பெண் சிறுத்தைக்கும் வேறுபடும். இவை சுற்றித்திரியும் இடத்தின் எல்லையை தமது சிறுநீரால் குறிக்கின்றன. சிறுத்தைகள் பெரும்பாலும் தங்களது வாழிட எல்லைக்குள்ளேயே சுற்றி திரிகின்றன. ஒரு சிறுத்தை தனது வாழிட எல்லையைவிட்டு இடம்பெயர்ந்து செல்ல நேரிடின் அந்த இடத்தை வயதில் குறைந்த வேறோரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
சிறுத்தை இந்தியா முழுவதும் பரவி காணப்படும் ஒரு உயிரினம். அடர்ந்த மழைக்காடுகளிலும், இலையுதிர் காடுகள், புதர்காடுகள், காட்டை ஒட்டிய கிராமப்புறங்களிலும், ஓரினப்பயிர்கள் மிகுந்துள்ள (காபி, தேயிலை, மற்ற விளைநிலங்கள்) இடங்களிலும் இவை சுற்றித்திரியும். ஆனால் காடுகள் அழிக்கப்பட்டதாலும், தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதாலும் அவை வசிக்கும் இடம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதுதான் சிறுத்தைகள் ஊருக்கு வரும் சம்பவம் அதிகரிக்க காரணம்.
கூண்டு வைத்து பிடித்துவிட்டால் பிரச்னை முடிந்ததா ?
சிறுத்தைகளை பொறிவைத்துப் பிடித்து வேறு இடங்களில் சென்று விடுவிப்பதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. மாறாக இது பிரச்சனையை மேலும் அதிகரிக்கும் என சொல்கிறார் காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப.ஜெகன்நாதன். இதற்கு முக்கியமாக 5 காரணங்களையும் முன்வைக்கிறார் அவர் "ஒரு இடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்துவிட்டால் அச்சிறுத்தை உலவி வந்த பகுதியை வேறொரு சிறுத்தை வந்து ஆக்கிரமித்துக்கொள்ளும். இவ்வாறு பொறிவைத்து சிறுத்தைகளை பிடிப்பதால் அந்த இடத்தில் சிறுத்தைகளின் எண்ணிக்கை பெருகும் வாய்ப்புகள் அதிகம். இடம்பெயர்க்கப்பட்ட சிறுத்தை, அது விடுவிக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஊரிலும் சென்று கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்கக்கூடும்.சிறுத்தைகளை ஓரிடத்தில் பிடித்து வெகுதூரத்தில் விடுவித்தாலும் அவை தாம் பிடிக்கப்பட்ட பகுதியை நோக்கியே திரும்ப பயணிக்கும் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது" என்கிறார் ஜெகன்நாதன்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர் "சிறுத்தைகளை அவற்றிற்கு பழக்கப்படாத இடத்தில் விடுவிப்பதால் அவை பலவித தோல்லைகளுக்கு ஆளாகின்றன. அவை தாம் வாழ்ந்த இடத்தை நோக்கி பயணிக்கும் போது வழியில் பெரிய நீர்நிலையோ, மிகப்பரந்த வறண்ட நிலப்பகுதியோ, மனிதர்கள் அதிகம் வாழும் பகுதியோ இருப்பின், அவை வழிதெரியாமல் அவற்றின் பூர்வீகத்தை அடையமுடியாமல் வரும் வழியிலேயே ஏதோ ஒரு இடத்தில் தஞ்சம் புக நேரிடுகிறது. இது அப்பகுதியில் சிறுத்தை-மனிதர் மோதலுக்கு காரணமாக அமைகிறது. பெரும்பாலும் சிறுத்தை-மனிதர் மோதல் உள்ள இடங்களிலேயே பொறிவைத்து சிறுத்தை பிடிக்கப்படுகிறது. ஆயினும் மனிதர்களை தாக்கிய சிறுத்தைதான் அப்பொறியில் சிக்கியது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இருக்காது" என அதிரவைக்கிறார் ஜெகன்நாதன்.