சிறப்புக் களம்

பக்ரீத் பரிசு.. ஏழை இஸ்லாமிய மாணவனுக்கு பந்தய சைக்கிளை பரிசாக வழங்கிய குடியரசுத் தலைவர்!

Veeramani

பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ஏழை இஸ்லாமிய சிறுவன் ரியாஸிக்கு, பந்தய சைக்கிளை பக்ரீத் பரிசாக வழங்கியுள்ளார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். ஜனாதிபதி மாளிகையில் சைக்கிளை பெற்றுக்கொண்ட ரியாஸ் மகிழ்ச்சியுடன் சைக்கிளை ஓட்டிச்செல்லும் காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது. ரியாஸின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை கதை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

டெல்லி  சர்வோதயா பால் வித்யாலயா பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் ரியாஸின் தந்தை சமையல்காரராக மிக சொற்பமான ஊதியத்தில் பணியாற்றுபவர். இவருக்கு இரண்டு சகோதரிகள் மற்றுமொரு சகோதரியும் உள்ளனர். அதனால் குடும்ப வறுமை காரணமாக ரியாஸ் தன்னுடைய படிப்பு செலவுக்காக ஓய்வு நேரத்தில் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறார். ஆனால் ரியாஸின் ஆர்வம் முழுக்கவும் சைக்கிள் ஓட்டுவதில்தான். இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த டெல்லி மாநில சைக்கிள் ஓட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் தேசிய அளவிலான சைக்கிளிங் சாம்பியன் போட்டியிலும் நான்காம் இடம் பிடித்துள்ளார். இத்தனை சாதனைகள் செய்தும் ரியாஸிக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லை. டெல்லி இந்திராகாந்தி தினமும் பயிற்சி பெறும் இவர், ஒருவரிடம் சைக்கிளை கடன் வாங்கிதான் பயிற்சி  எடுத்துவருகிறார். ரியாஸின் கனவை நனவாக்க அவரின் தற்போதைய உடனடி தேவை பந்தய சைக்கிள்தான் என்பதை  ஊடக செய்திகள் வாயிலாக குடியரசுத் தலைவர் அறிந்துகொண்டார்.

ரியாஸின் கதை மிகுந்த தன்னம்பிக்கைக்கு உரியது, அதனால் அவர் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார். ரியாஸ் போன்ற இளைஞர்களால்தான் சிறப்பான தேசத்தை கட்டமைக்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.