சிறப்புக் களம்

தடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..!

தடைகளை உடைத்து தேர்வில் சாதனை படைத்த ப்ரீத்தி..!

webteam

படுகர் இனத்தை சேர்ந்த மாணவி முதல் முறையாக குரூப் 4 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்து உள்ளார். கோவையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து கடின உழைப்பால் வெற்றியை பெற்று உள்ளார்.

கோத்தகிரி பகுதியில் வாழும் படுகர் இனத்தை சேர்ந்த மலைவாழ் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. இவர் கோவையில் வேளாண் படிப்பு முடித்த பிறகு, ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்தார். போக்குவரத்து தொழிலாளியான இவரது தந்தை ஓய்வு பெற்ற நிலையில், இவரது படிப்பு செலவிற்கு உதவ முடியாத நிலையில் இருந்ததால், பணம் படிப்பை நிறுத்த கூடாது என்ற நோக்கத்தில் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்து அங்கேயே பணியின் போது படித்து வந்து உள்ளார்.

முதல் கட்டமாக குரூப் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த இவர், தற்போது குரூப் 4 தேர்வை எழுதி உள்ளார். அதிலும் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து உள்ளார். இரவு பகலாக தான் படித்து வந்ததாகவும், தனது படிப்பிற்கான செலவிற்கு, குடும்பத்தையே நம்பி இருக்காமல்  தான் வேலைக்கு சென்று படித்ததாகவும், கடின உழைப்போடும் படித்ததால் தற்போது இந்த இடத்தை பிடிக்க முயன்றதாக கூறுகிறார் ப்ரீத்தி. தனது வெற்றிக்கு தனது குடும்பமே காரணம் எனக் கூறும் ப்ரீத்தி, எந்தவித விசேஷங்களிலும் பங்கு பெறாமல் முழு ஈடுபாட்டோடு படித்ததாலேயே இதுபோன்ற வெற்றியை பெற முடிந்ததாக கூறுகிறார். தனது மகளின் கடின உழைப்பை கண்டு பல முறை வருத்தப்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் இந்த வெற்றியை பார்க்கும்போது தற்போது பெருமை அளிப்பதாக கூறுகிறார் அவரது தந்தை சுப்பிரமணி.


கோத்தகிரி பகுதியில் படுகர் இனத்தை சேர்ந்த மாணவி, இதுபோன்ற தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்து உள்ளது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதோடு இல்லாமல், தொடர்ந்து அடுத்தடுத்த தேர்வுகளுக்கும் அவர் தயாராகி வருகிறார். படிப்பதற்கு எப்போதும் பணம் ஒரு தடையாகவே இருக்க கூடாது என்பதை நிரூபித்து, தனது கடின உழைப்பால், தானே சம்பாதித்து அரசு தேர்வில் வெற்றியை பெற்ற இவர், தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து படித்து வருகிறார்.