அணில்களால் மின்தடை ஏற்படுவதாக, தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா பொதுமுடக்கக் காலத்தில், மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில், பராமரிப்புப்பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாகத் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். இதையடுத்து மீண்டும் பராமரிப்புப் பணிகள் தொடங்கிய நிலையில், மின்தடை குறித்து பொதுமக்கள் பலர் புகார்களைத் தெரிவித்து வரும் சூழலில் அமைச்சர் அளித்த விளக்கம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
அமைச்சரின் இந்த பதிலுக்கு பலர் எதிர்வினையாற்றி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் 'மீம்ஸ்கள்' பறந்து வருகின்றன. அணில் படங்களை வைத்தும் அமைச்சரின் கருத்துக்கு எதிரான விமர்சனப் பதிவுகளும் உலா வருகின்றன. அதே நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கருத்துக்கு ஆதரவாகவும் சிலர், மின்கம்பிகளுக்கு அணில்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த செய்திகளையும் கட்டுரைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, அணில் மட்டுமே காரணம் என தான் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர், அணில் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதை ஒரு காரணமாகக் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மின்சாதனங்களில் அணில் ஒன்று இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் மின் தேவை தொடர்பான தகவல்கள்:
தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் தேவை 14,000 மெகாவாட் முதல் 15,000 மெகாவாட்டாக உள்ளது. மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மாநில அரசின் அனல் மின் நிலையம், காற்றாலை மூலம் கிடைக்கிறது. அனல் மின் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 4000 மெகாவாட், எரிவாயு மூலம் 500 மெகாவாட் கிடைக்கிறது. மத்திய அரசின் தொகுப்பாக ஒரு நாளைக்கு 4000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.
கூடங்குளம் அணுமின், நெய்வேலி அனல் மின் நிலையங்கள், மத்திய அரசின் அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் வாங்கப்படுகிறது. தனியாரிடம் நீண்ட காலம் மற்றும் குறுகிய கால அடிப்படையில் 4000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. 2000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
காற்றாலை மூலம் 2000 மெகாவாட், தனியார் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் கிடைக்கிறது. கோடைக் காலங்களில் சூரிய மின்சக்தியும், காற்று அதிகம் வீசும் காலங்களில் காற்றாலை மின்சாரமும் கிடைக்கின்றன
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற மின்துறை அதிகாரி காந்தி கூறும்போது, "பறவைகள் மற்றும் விலங்குகளால் ஏற்படக்கூடிய இடர்பாடு என்பது உண்மைதான். ஆனால் அதை பெரும்பகுதியான மின்தடைக்கான காரணமாக நாம் எடுத்துக் கொள்ள முடியாது. அணிலுக்கான வால் நீளமாக இருக்கும்போது, ஒரு லைனில் இருந்து இன்னொரு லைனுக்கு தாவினால் மின்தடை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அணில் மட்டுமல்ல காக்கை போன்ற பறவைகளால் கூட மின்தடை வரும். ஆனால் அதுவே மின்தடைக்கான காரணமாக சொல்லமுடியாது.
மின்சார தட்டுபாடு என்பது இன்றைக்கு எங்கும் இல்லை, மின் குறைகள்தான் இருக்கின்றன மின்வெட்டு அல்ல. மின்வெட்டு என்று சொன்னால் மாநிலம் முழுவதும் தேவையான மின்சார தேவைக்கு குறைவான உற்பத்தி இருக்குமேயானால் அதை மின்வெட்டு என்ற சொல்லலாம். ஆனால், இப்போது தேவையும் உற்பத்தியும் சமமாகத்தான் இருக்கிறது. தேவை அதிகரித்தாலும் அதை சந்திக்கக் கூடிய அளவிற்கு மின்உற்பத்தி இருக்கிறது. ஆங்காங்கே ஏற்படக்கூடிய மின்தடைகள் தான் குறைபாடு. நம் வீட்டில் மின்சாரம் இருக்கிறது, அது திடீரென போய்விட்டால் அது நமது வீட்டிற்கு மட்டும் ஏற்படும் தடை, அதைத்தான் மின்தடை என சொல்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறது. கோடை வெயில் அதிகமாக இருந்துவிட்டு திடீரென மழைபெய்யும் போது மின்தடை அதிகமாகும். இந்த கோடையில் திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்தது. இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. அது ஒருமணி நேரம் வரை மட்டுமே நீடித்ததாக தெரிகிறது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டும் இருக்கிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள், கடந்த ஆட்சியின் போதும் இருந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் இருந்திருக்கிறது. அப்போதும் மின்தடை என்றே சொன்னார்கள். இது 2011,12,13 ஆம் ஆண்டுகளில் இருந்தது போன்ற மின்வெட்டு அல்ல இது, மின்தடை" என்றார்.