கார்த்திக் சிதம்பரம், அண்மையில் கைது செய்யப்பட்டது - முற்றிலும் எதிர்பாராத நடப்பு இல்லை என்பதே உண்மை. ஆனால், அது நடந்துள்ள விதம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்க முயன்ற நிலையில், நீதிமன்ற உத்தரவு பெற்று வெளிநாடு சென்றவர், அதன் உத்தரவுப்படி, கெடு தேதியில் இந்திய மண்ணில் கால்வைக்க இருந்தபோது, விமான நிலையத்திலேயே கைது செய்ததுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.
கடந்த சில ஆண்டுகளாக, தமிழகத்தின் பல்வேறு துறைகளில் நடந்துவரும் விஷயங்களை கவனித்துவரும் சாதாரண மனிதன் கூட, தனது குறைந்தபட்ச அரசியல் அறிவைக் கொண்டு அலசினால், இது புரியும். இப்போதைக்கு பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் இருக்கக் கூடிய ஒரே மாபெரும் எரிச்சல் - ப சிதம்பரம்தான். அதிமுகவைத் தவிர, அதிலும், தற்போது தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தில்... பதவியில்... பொறுப்பில் உள்ளவர்களைத் தவிர, அந்தக் கட்சித் தொண்டனே கூட, பாரதிய ஜனதாவை ஏற்றுக் கொள்கிறானா என்பது தனி கேள்வி. மறுபுறம், புதிதாக களம் இறங்கும் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தவிர, மற்ற எல்லா தமிழக இயக்கங்களும் மோடியின் பிஜேபியை ஏற்கத் தயங்குகிறார்கள் என்பதுதான் பொதுபார்வை. இதில், ரஜினி இயக்கத்திலேயே கூட, அவரை முதல்வராக முன்னிறுத்தும் தமிழருவி மணியன் போன்ற ஆட்கள், தற்போதைய சூழலில் பாரதிய ஜனதா குறித்து என்ன நிலைப்பாடு எடுப்பார்கள்... ரஜினிக்கு என்ன ஆலோசனை சொல்வார்கள் என்பது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. ஆக, பெருவாரி தமிழகம் பாரதிய ஜனதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் எதிராக இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில் - ப சிதம்பரத்தை மட்டும் குறிவைக்கக் காரணம் என்பது இயல்பான கேள்வி
விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும், கைதான கார்த்திக் சிதம்பரமுமே சொல்வதுபோல, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா என்பது, சாரத்துடன் எழுப்பப்படும் கேள்வி. இன்றைய பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய அரசியல் எதிரிகளின் பட்டியலில், பிரதான இடத்தில் இருப்பவர் ப சிதம்பரம். கடந்த 4 ஆண்டுகளில், மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் - அரசியல் நடவடிக்கையாக இருந்தாலும், பொருளாதார நடவடிக்கையாக இருந்தாலும் அவற்றை ஆணித்தரமான கருத்துகளால், அணு அணுவாக அலசி... துவைத்து காயப் போட்டவர் ப சிதம்பரம்தான். பல தலைமுறை தாண்டியும் காங்கிரஸ் கட்சியால் தீர்க்க முடியாத அரசியல் தலைவலி - நாகா மக்களின் பிரிவினை கோஷம். "இதோ, அதற்கு தீர்வு" என, ஒப்பந்தம் போட்டதாக தம்பட்டம் அடித்துக் கொண்டதை 'அர்த்தமில்லாத கோஷம்' என அலசித் தீர்த்ததில் இருந்து... பின்னர்வந்த பொருளாதார நடவடிக்கைகளான "டிமானிடைசேஷன் (DEMONITISATION)"என்கிற பணமதிப்பு நீக்கல், ஜிஎஸ்டி வரி அமலாக்கம் என, எதை எடுத்துக்கொண்டாலும் - மோடியின் முடிவுகள், சிதம்பரத்திடம் சிக்கித் தவித்தது போல, வேறு எங்கும்... யாரிடமும் மாட்டிக் கொண்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
நீண்டகாலமாக நிதியமைச்சர் பொறுப்பு வகித்த, நிஜமான திறமைசாலி என்பது ஒருபக்கம். அதைத்தாண்டி, தான் ஒரு சிறந்த நிர்வாகி என்பதையும், பல நேரங்களில்... தனது செயல்பாட்டால் சிதம்பரம் நிருபித்திருக்கிறார். அதனால், 2019ம் ஆண்டு தேர்தலைச் சந்திக்க தனது முன்னேற்பாடுகளைத் தொடங்கிவிட்ட மோடி, 'தேர்தலின்போது களத்தில் சந்திக்க வேண்டிய இருக்கும் வலுவான நபர்கள்' என்ற பட்டியலில் உள்ளவர்களை வலுவிழக்கச் செய்யும் உபாயங்களை இப்போதே தொடங்கிவிட்டார் என்பதற்கான சாட்சிகளில் ஒன்றாகத்தான் இந்த கைது நடவடிக்கையை பார்க்க வேண்டியுள்ளது.
ப சிதம்பரம் என்ன அவ்வளவு வலுவான அரசியல் தலைவரா? இத்தனை ஆண்டுகாலம் மத்திய அரசின் மிக வலுவான.... அதிகாரம் கொண்ட பல பதவிகளில், ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தும், தனது சொந்த சிவகங்கைத் தொகுதியில் கூட, தோழமைக்கு கூட்டணியாக ஒரு மாநிலக் கட்சி இல்லாவிட்டால் களத்தில் நின்று போட்டியிடவே தயக்கம் காட்டும் ஒருவரை, எந்த அடிப்படையில் மோடியின் அரசியல் எதிரி என சொல்கிறீர்கள்....
1989ல் தொடங்கி, கிட்டத்தட்ட 25 ஆண்டு காலம் வரை, "இனி தனி ஒரு கட்சியின் தலைமையில் இந்தியாவில் ஆட்சி அமைவது சாத்தியமா?" என்ற கேள்வி இருந்த நிலையை மாற்றி, இந்து மதவாத கட்சி என்ற பிம்பம் கொண்ட ஒரு கட்சியின் மூலமாகவே கூட, மீண்டும் தனி கட்சி மெஜாரிட்டியோடு மத்தியில் ஆட்சி அமைத்த மோடியோடு யாரை ஒப்பிடுகிறீர்கள்....?
2001ல், அவர் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, இன்றுவரை எத்தனையோ நபர்கள்.... என்னென்னவோ யுக்திகளை... எத்தனையோ முறை பயன்படுத்திப் பார்த்தும், 'நரேந்திர மோடியின் தேர்வுதான் இறுதி' என, அம்மாநில மக்களால் தொடர்ந்து ஆதரிக்கப்படும் அளவு அசைக்க முடியாத மக்கள் செல்வாக்கு கொண்ட தலைவராக தொடரும் மோடியோடு யாரை ஒப்பிடுகிறீர்கள்.....
தனித்து நின்றால், ஒரு எம்.பி தொகுதியிலேயே கூட வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாத ப சிதம்பரத்தை, எந்த அடிப்படையில் மோடியின் முக்கிய அரசியல் எதிரிகள் பட்டியலில் முக்கியமானவர் என்று நிறுத்துகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினால், மிகப் பொறுத்தமானது. உண்மையும் கூட!
ஆனால், இன்றுள்ள அரசியல் சூழலில் இதுதான் யதார்த்த நிலை. வரவிருக்கும் 2019ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல், குறித்த காலத்துக்கு முன்னதாக வரலாம் என ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதற்கு, நரேந்திர மோடிக்கு எதிரான வெகுஜனக் கருத்து.... அவரது பண மதிப்பு நீக்கல் மற்றும் ஜிஎஸ்டி வரி அமலாக்க நடவடிக்கை ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள்.... தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளுக்கு வலதுசாரி சக்திகள்தான் காரணம்; அவற்றை ஒடுக்கி வைக்க மோடி தயாராக இல்லை என்ற வாதம்.... தனக்கு வேண்டிய சூழலை உருவாக்க சாம, பேத, தான, தண்ட நடவடிக்கைகளில் இறங்க மோடி தயங்குவதே இல்லை; அதற்கு அவரது ஆட்சி அதிகாரத்தின்படியான மிச்ச சொக்கங்களை எல்லாம் எந்த வகையில் வேண்டும்னாலும் பயன்படுத்த சிறிதும் தயங்காதவர் மோடி என்பது போன்ற... அவர் மீதான எதிர்மறை பிம்பங்கள் வலுப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.... முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் வருவதை - கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலும், அதன் பின்னர் வரும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில, வட மாநில தேர்தல் முடிவுகளும்தான் முடிவு செய்யும். ஒருவேளை கர்நாடக மாநிலத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள தேர்தல் பிரச்சார வியூகங்கள் மோடிக்கு சாதகமாக அமையவில்லை என்றால், அவர் இன்னும் விரைவாகவே கூட பொதுத்தேர்தலைச் சந்திக்க தயாராகலாம். அப்படி நடந்தால், மோடிக்கு எதிராக களத்தில் நிறுத்த காங்கிரஸ் கட்சிக்கு வலுவான பிரதமர் வேட்பாளர் ஒருவர் தேவை.
அந்த பிரதமர் வேட்பாளராக, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுலையே முன்னிருத்த - அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் மட்டுமல்ல; சோனியா காந்தியே கூட, தற்போதைக்கு முன்வரமாட்டார். அதனால், ராகுல் இல்லாத ஒரு தலைவர் அந்த கட்சிக்கு இப்போதைக்கு தேவை. அவர் புத்திசாலித்தனமும், நிர்வாகத் திறனும், அறிவுக் கூர்மையும், மிக மிக முக்கியமாக நரேந்திர மோடியை, அவரது களத்தில் நின்று..., அவர் கையில் எடுக்கும் அனைத்து விதமான ஆயுதங்களையும் தானும் எடுத்து போரிடக் கூடிய தலைவர் தேவை. ஏற்கனவே மன்மோகன் சிங் என்ற மூத்த நிர்வாகி, அறிவாளி இருக்கிறாரே என்று சிலர் கருதக்கூடும். ஆனால், "மன்மோகன் சிங் Vs நரேந்திர மோடி" என்பது, சமநிலையற்ற ஒப்பீட்டு தளம். அந்த யுக்தியோடு காங்கிரஸ் கட்சி களமிறங்குமா என்பது குறித்து எனக்கு மிக அதிக சந்தேகம் உள்ளது.
ஏன்... தேர்தல் நெருக்கத்தில் மன்மோகன் சிங்கே கூட, இப்படியான ஒரு போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், தான் விடைபெறுவதாகச் விலகிக் கொள்ள நேரலாம். எனவே, மன்மோகன் சிங் அல்லாத, இன்னொரு வலுவான மாற்று - காங்கிரஸ் கட்சிக்கு தேவை என்பதை, காங்கிரஸ் கணக்கிட்டு இருக்கிறதோ... இல்லையோ, நரேந்திர மோடி கணக்கிட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். வரவிருக்கும் போருக்கு களபலி தருவதற்கு முன்பே, மன்மோகன் சிங் விருப்ப ஓய்வு பெறுகிறாரோ, இல்லையோ.... அதன்பின் வெகு விரைவில் அப்படியான சந்தர்ப்பத்துக்கு... நடப்புக்கு மிக அதிக நாட்கள் இல்லை என்றே நம்புகிறேன். சோனியாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுத்து மாதிரியெல்லாம்.... சோனியா, தன் மீது நம்பிக்கைவைத்து பொறுப்பை அளித்துவிட்டாரே என்பதற்காக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுடனெல்லாம் சமரசம் செய்துகொண்டது போல, மீண்டும் ஒருமுறை ராகுல் காந்திக்காகவும் சமரசம் செய்து கொள்ள - மன்மோகன் சிங்கின் மனநிலையும், உடல்நிலையும் கூட எவ்வளவு நாட்களுக்கு இடம் தரும் என்ற கேள்வி இருக்கிறது. அதனால், ஆட்டத்தைத் தொடங்கி வைத்துவிட்டு "ரிடையர்ட் ஹர்ட்" என, கிரிக்கெட் விளையாட்டின் மட்டை வீரர் விலகுவது போல, மன்மோகன் சிங் விலக நேர்ந்தாலும், அந்த இடத்துக்கு இன்னொரு ஆள் காங்கிரஸ் கட்சிக்கு தேவை.
இப்போது இருப்பதைப் போன்ற, தலைவர்களுக்கான பற்றாக்குறை இல்லாத நிலை காங்கிரஸ் கட்சியில், நிஜமாகவே ஒரு நேரத்தில் இருந்தது. உதாரணமாக ராஜேஷ் பைலட், மாதவராவ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி போன்ற பல தலைவர்கள் - தத்தமது மாநிலங்களில் மக்களால் நன்கு அறியப்பட்டு, ஆதரவு பெற்று, நிர்வாகத்திறமையும், அறிவுக் கூர்மையும், ஆளுமைத்திறனும் பெற்றவர்களாக இருந்தார்கள். அந்த நேரத்தில், அவர்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்தாலும், தேவையானால் டெல்லிக்கு அழைக்கும் பட்சத்தில்... அங்கேயும் சிறப்பாக பங்காற்றக் கூடியவர்களாக நம்பிக்கைத் தந்தார்கள். ஆனால், இன்று காங்கிரஸ் கட்சியின் நிலை அதுவல்ல. நம்பிக்கைத் தந்த அந்த தலைவர்கள் பலரும், சாலை விபத்து முதல், விமான விபத்து வரை சிக்கி அகால மரணமடைந்து விட்டனர்.
மாநில அளவில் தேடினால், தற்போதைக்கு கர்நாடகத்தில் சித்தரமைய்யா.... மல்லிகார்ஜூன கார்கே (இவர்கள் இருவருக்குமே, "தில்லி அதிகாரம்", என்பது 'குருவி தலையில் பனப்பழத்தை வைப்பது போல'. அத்தகைய ஒரு பிம்பத்தைத்தான் அவர்களே வளர்த்து வைத்திருக்கிறார்கள்), பஞ்சாப்பில் அம்ரீந்தர் சிங்.... (பஞ்சாப் மாநிலத் தலைவர் பதவியை மீட்கவே கொஞ்சம் போராட்டம் நடத்தியவர், என்றாலும், இப்போது அங்கே மாநில முதல்வராக, அவர் செய்ய வேண்டிய காரியங்கள் நிறையவே உள்ளன. பஞ்சாப்பில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு அவர் அதிக எண்ணிக்கை சீட்களைப் பெற்றுத் தந்தால் அதுவே போதும்)... இன்னும் கொஞ்சம் மேலே நகர்ந்தால், ஜம்மு காஷ்மீரின் குலாம் நபி ஆசாத் (இவர் போதுமான நிர்வாகத்திறனும், தொலைநோக்கு பார்வையும், ராஜ தந்திரமும் கொண்டவராக இருந்திருந்தால், இந்திரா காந்தி காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவராக தில்லியில் இருந்ததில் - காஷ்மீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.) இவர்களைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லும்படியான, மக்களால் அறியப்பட்ட, அனுபவமும், செயல்திறனும், அறிவுக் கூர்மையும் கொண்ட ஒரு தலைவரை காட்டக் கூட காங்கிரஸ் கட்சியிடம் இப்போது சரக்கு இல்லை. அதனால், வேறு வழியில்லாமல், ராகுல் சார்ந்திருக்கப் போவது ப சிதம்பரத்தின் மீதுதான் என்பது எளிமையான அரசியல் கணக்கு. அதனால், அடுத்து வரும் பொதுத் தேர்தலுக்குமுன் ப சிதம்பரத்தை எந்த அளவு வலிவிழக்க செய்ய முடியுமோ, அந்த அளவு செய்து விடுவதுதான் தற்போது மோடியின் நோக்கம்.
ஆனால், இதெல்லாமே புதிதாக எழுந்த விஷயங்கள்... குற்றச்சாட்டுகள் இல்லை. நீண்ட காலமாக இருப்பவைதானே... அப்படியிருக்க, அந்த நேரத்தில் எல்லாம் இல்லாமல், ப சிதம்பரத்தை இப்போது ஏன், சிக்க வைக்க வேண்டும் என்பதும் சரியான கேள்விதான். ஆனால் காரணம் இருக்கிறது. ஒன்றல்ல. பல காரணங்கள்.
1. மற்ற பல விஷயங்கள் போலவே, இந்திய மக்கள் மறதியில் மன்னர்கள் என்பது மோடியின் நம்பிக்கையாக இருக்கலாம். அதனால், தேர்தலைச் சந்திக்க வேண்டிய நேரத்திற்கு சற்றுமுன் போட்டுத் தாக்கினால்தான், அதன் சூடு தேர்தல் வரை இருக்கும். முன்னதாகவே தொடங்கப்படும் நடவடிக்கை தேர்தல் நெருக்கத்தில் தண்ணீரில் நனைந்த பட்டாசு போல பிசிபிசித்து போகக் கூடாது என மோடி நினைத்திருக்கலாம்.
2. ஏற்கனவே, "ப சிதம்பரம்... நளினி சிதம்பரம்... கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் குறித்த செய்திகளைக் கையாள்வதில் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் மிக கவனமாகவே இருக்கின்றன. பலரும்....., தவிர்க்கவே இயலாத சூழலில்தான் அவற்றை வெளியிடுகிறார்கள். முடிந்தவரை மேடையேற்றாமல், பள்ளத்தில் தள்ளி மறைத்துவிடுகிறார்கள்" என்று ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தபடியே, பாஜக சார்பான ஊடகங்கள் ஒரு பிரச்சாரத்தை அண்மையில் தொடங்கியுள்ளன. சமூக ஊடகங்களில் பாஜகவின் வீச்சும், கையும் மிக நீளம் என்பதால், அதில் இப்போது சற்று கூடுதல் வேகத்துடனே அவர்கள் காரியம் ஆற்றி வருகிறார்கள்.
3. "மன்மோகன் சிங் விலகினாலும், விலகாவிட்டாலும் - தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்கு தேவையான மோடி அரசின் தவறுகள் குறித்த அஸ்திரங்களை உருவாக்கும் போதும், அதை வலுவாக ஊடகங்களில் முன்வைக்கும் போதும் - தற்போதைக்கு ப சிதம்பரத்தை விட்டால் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு இணையாக வேறு ஆட்கள் இல்லை. அதனால், 'மோடியைக் குறை சொல்ல, ப சிதம்பரத்துக்கு எந்த அடிப்படை சித்தாந்த வலுவும் இல்லை. அவர் தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, தனது மகன் மூலமாக, ஏராளமாகச் சம்பாதித்து, பல வெளிநாடுகளில் இந்திய பணத்தை கோடிக்கணக்கில் கொட்டி வைத்திருக்கிறார்' என்ற கருத்தைப் பரப்பி விட்டால்...? அந்த கருத்து - மேல்தட்டு மக்களைத் தாண்டி, அடிமட்டம் வரை ஊடுருவ... கால அவகாசம் தேவை. அதைத் தருவதற்காகத்தான், இப்போதே கார்த்திக் சிதம்பரம் மீதான விசாரணையில், முன்எப்போதும் இல்லாத வேகமும், தீவிரமும் காட்டப்படுகிறது" என்று சொல்லப்படும் கருத்திலும் சாரம் உள்ளது.
எனவே, வரும் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் வலுவான சக்திகள் அனைத்தையும் காலி செய்யும் மோடியும் ஒரு யுக்திதான் - கார்த்திக் சிதம்பரத்தின் மீதான விசாரணையில் தற்போது காட்டப்படும் வேகம்.
இப்படிச் சொல்வதன் மூலம் - ப சிதம்பரத்துக்கு, 'புனிதர்' பட்டம் கொடுக்க முனைவதாகப் புரிந்துகொள்ளக் கூடாது. அவர் மீதும், அவரது மகன், மனைவி மீதும் சொல்லப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள், இந்தமுறை ஒரு கட்டம் முன்னேறி, அவரது மருமகள் ஸ்ரீநிதி சிதம்பரம், பேத்தி அதித்தி வரை நீண்டுள்ளது மட்டுமல்லாமல், கார்த்திக் சிதம்பரத்தின் பினாமிகள் என 4 பேர் கொண்ட பெயர் பட்டியலும் கூட ஊடகங்களில் உலா வரத் தொடங்கிவிட்டன. இதை அனைத்தும், ஆதாரமற்ற.... அரசியல் காரணங்களுக்காக.... போலியாகப் புனையப்பட்ட குற்றச்சாட்டு என வாதிடவும், அதை அவ்வாறு நிருபிக்கவும் வேண்டிய அவசரமும், அவசியமும் உள்ளவர்கள் ப சிதம்பரத்தின் குடும்பத்தினர்தான். சிபிஐயின் விசாரணை... அதுமுன் வைக்கும் ஆதாரம் என எல்லாமே உண்மைக்கு புறம்பானவை என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்துவதும், அதன்மூலம் ப சிதம்பரத்தின் குடும்பத்தினர் குற்றமற்றவர்கள் என நிறுவுவதும், அத்தரப்பின் வழக்கறிஞர்களது பொறுப்பு... கடமை. வழக்கறிஞர் தம்பதிகளான சிதம்பரங்களும், அவர்களது சகாக்களும் இதைச் செய்ய மாட்டார்கள் என சொல்வதற்கில்லை. இந்தியாவில் எதற்கும் வாய்ப்புகள் உண்டு என்பதுதான், நிதர்சனமான உண்மை.
காரணம், சிபிஐ விசாரணை, வழக்கு, தீர்ப்பு, தண்டனை என்பதெல்லாம் எத்தனை ஆண்டுகள் நீளக் கூடியது என்பது நாம் அறிந்ததுதான். பணமதிப்பு நீக்கம் தொடர்பான விவாதம் ஒன்றில் ப சிதம்பரமே சொன்னபடி, "......விசாரணை.... நீதிமன்றத்தில் வழக்கு என்று போய்விட்டாலே, எல்லாம் முடிந்ததாகி விடாது. ஒரு கட்டத்தில் தீர்ப்பு பாதகமாக வந்தாலும், அடுத்து மேல்முறையீடு... இப்படியே படிப்படியாக முன்னேறி, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை செல்ல முடியும். அங்கே தீர்ப்பு வரும்வரை சம்மந்தப்பட்டவர் - குற்றம்சாட்டப்பட்டவர்தான்; குற்றவாளி அல்ல" என்பதுதானே இந்தியாவில் யதார்த்தம்.
அதனால், இப்போது நடப்பது, ஒரு அரசியல் விளையாட்டு! ஆம்... அரசியல் விளையாட்டு தானேயன்றி வேறொன்றுமில்லை. எப்போது... என்னென்ன திருப்பங்கள்... கடைசியில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யம்.