சிறப்புக் களம்

அதிகாரத்திடம் கைகட்டும் ! சாமானியர்களிடம் கை நீட்டும் ! - அதுதான் காவல்துறை ?

அதிகாரத்திடம் கைகட்டும் ! சாமானியர்களிடம் கை நீட்டும் ! - அதுதான் காவல்துறை ?

"காவல் நிலையங்களுக்குப் புகார் அளிக்க வருபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்" இது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் மாநாட்டில் அறிவுறுத்திய விஷயம். முதல்வர் பேசிய சில மணி நேரத்துக்கு பின்பு திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவரின் வெறிச் செயலால் கர்ப்பிணி உஷா பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறை அதிகாரிகளின் வரம்பு மீறும் செயல்கள் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்தாண்டு திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். அப்போது ஒரு பெண்ணை காவல்துறை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் அடித்ததில், அந்தப் பெண்ணின் செவித் திறன் பாதிக்கப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்ட கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு, டிஎஸ்பி-யாக பதவி உயர்வு கொடுத்து அழகுப் பார்த்தது அரசு.

அதேபோல திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் மீது, பகலில் கடை வீதியில் பலரும் பார்த்திருக்க காவல் துறையினர் மூன்று பேர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மக்களை அதிர வைத்தது. நகை வாங்கச் சென்ற கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிவிடச் சென்ற காவலர்கள், தங்கள் பேச்சை அவர்கள் கேட்காததால் தாக்கியதாகக் காரணம் சொல்லியிருக்கிறார்கள்.
 இதேபோல, சென்னை  திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் காவலரால் தாக்கப்பட்டார். அதிர்ச்சியில் சிகிச்சை பெறாமல் வீடு திரும்பிய அப்பெண்ணுக்கு, வழியிலேயே பஸ்ஸில் பனிக்குடம் உடைந்தது. காவல் துறையினர் இதற்கும் காரணமும் பதிலும் வைத்திருந்தார்கள். அண்மையில் கன்னியாகுமரியில் ஹெல்மெட் போடாமல் சென்ற ஒருவரை தாக்கி மண்டையை உடைத்து போலீஸ்.

இதெல்லாம் ஊடங்களால் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள். இன்னும் மக்கள் வெளியே சொல்லாமல் காவல் துறையினரால் தினம் தினம் நடக்கும் சம்பவங்கள் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் போலீஸாரால் அவமானங்கள் நிகழ்கின்றன. சிக்னலை தாண்டி கவனக்குறைவாக பைக்கை நிறுத்திவிட்டால் போதும், தகாத வார்த்தைகள் அர்ச்சனையாக நம் காதில் விழும்.  இதுபோன்று காவல் துறையினரின் மனிதத்தன்மையற்ற, மிருகத்தனமான தாக்குதலுக்கு உள்ளானவர்களின் வலி மிகுந்த வார்த்தைகளைக் கேட்கக் கூடிய
மனசாட்சி உள்ள எவரும், "நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும்” என்று மனம் வெதும்பி சொல்வார்கள். ஆனால், இதுவரை இதுபோன்ற சம்பவங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது பெரிய அளவிலெந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இல்ல. மக்களை துன்புறுத்திய இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்பட்ச தண்டனை "பணியிடம் மாறுதல்" அல்லதுபணியிடை நீக்கம் அவ்வளவே.அனைத்து காவலர்களும், காவல்துறை அதிகாரிகளும் ஒட்டுமொத்தமாக நாம் குறை சொல்லவில்லை. ஆனால், பெரும்பாலான காவலர்களும், அதிகாரிகளும் அப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது மக்கள் ஒரு ஸ்மார்ட்போஃன் வாங்குவதாக இருந்தாலும் அது "யூசர் ஃப்ரண்ட்லி"யாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் சட்டத்தையும், மக்களையும் காக்கக் கூடிய காவல்துறை ஃப்ரண்லியாக இல்லை என்பதே உண்மை. இதை எதிர்பார்த்து எதிர்பார்த்த மக்கள், "காவல் துறை உங்கள் நண்பன்" என்கிற வாசகம் வெறும் வெற்று எழுத்துக்கள் மட்டுமே. நடைமுறையில், பரம எதிரி போலத்தான் சாமானியர்களிடம் காவல்துறை நடந்துக்கொள்கிறது.

காவலர்களுக்கு போதிய விடுப்பு கொடுப்பதில்லை இதனால் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இதனால் பல காவலர்கள் மன உளைச்சலில் இரவு பகலாக வேலை பார்ப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காரணங்கள் அனைத்துமே உண்மைதான் இவற்றையெல்லாம் நாம் புறந்தள்ளிவிட முடியாது. ஆனால், இவையெல்லாம் காவல்துறை மற்றும் அதனை நிர்வகிக்கும் அரசின் பிரச்சனை. தனியார் நிறுவனத்தில் ஒரு ஊழியர் மன உளைச்சலில் இருந்தால் அதனை நிர்வாகம் பார்த்துக்கொள்ளும், அதைவிட்டு சாமானியர்களை தாக்க அனுமதிக்காது. அதுபோலவே காவலர்கள் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர வேண்டிய பொறுப்பும் காவல் துறை வசமே இருக்கிறது.  

நாம் இதுவரை என்றைக்கும் மன அழுத்தத்தில் உள்ள காவலர் ஒரு அரசியல்வாதியை அடித்தார், அட்லீஸ்ட் ஒரு வார்டு கவுன்சிலரின் கன்னத்தில் அறைந்தார், மாவட்ட செயலாளரை எட்டி உதைத்தார் , அமைச்சரின் உறவினரைத் தாக்கினார் என்ற செய்திகளை நாம் பார்த்ததும் இல்லை படித்ததும் இல்லை.  அப்போது காவல்துறையின் கரங்களும், கால்களும் "இடம் பொருள் ஏவல்" பார்த்துதான் நீட்டுகின்றனவா ? சாமானியர்களை அடித்தால் யாரும் கேட்கமாட்டார்கள், அதிலும் பெண் என்றால் இன்னும் கேவலம் அப்படிப்பட்ட நோயுற்ற மனநிலையில்தான் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

இதுபோன்ற சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அதிகாரிகள், இன்னமும் சிறு சலனமும் காட்டாமல்,  இந்நிகழ்வுகளைக் கடக்க முயற்சிக்கிறார்கள்  என்றால், அது கீழே இருக்கக்கூடியவர்களுக்கு என்ன மாதிரியான சமிக்ஞைகளைக் கொடுக்கும் என்பது உயரதிகாரிகளுக்குப் புரியாதா ?

ஆங்கிலேயர் காலத்தில் அரசின் அடியாளாகப் பழக்கப்பட்ட காவல் துறைக்கு மனித உணர்வூட்டுவது தொடர்பாக, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். 1964 காவல் துறைத் தலைவர்கள் மாநாட்டிலேயே ‘பிரம்படி’ தொடர்பாக தெளிவான விதிகள் வலியுறுத்தப்பட்டன.
அதன்படி, நம் அண்டை மாநிலமான கேரளத்தில் காவலர்களுக்கு அந்நாட்களில் பிறப்பிக்கப்பட்ட நிலை ஆணை இங்கு நினைவுகூர வேண்டியது. “ஓரிடத்தில் தடியடி நடத்த வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் உருவாகும்போதுகூட, காவலர்களின் தடிக்கும், கூட்டத்தினரின் உடலுக்கும் இடையே அரை அடி இடைவெளி இருக்க வேண்டும்” என்பது அந்த விதிகளில் ஒன்று. அதாவது, பொதுமக்களை ஓங்கி அடிப்பதுகூடத் தவறு. அதேபோல, தலையிலோ, எலும்புகளிலோ தாக்கக் கூடாது என்பதும் தெளிவான வரையறை. திருச்சியில் உஷாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டவர்கள் மீது எப்படிப்பட்ட தாக்குலத் நிகழ்த்தப்பட்டது என்பதற்கு காணொலி சாட்சிகள் இருக்கின்றன.

தமிழகத்தில் ஆண்டுக்குச் சுமார் 700 தடியடிச் சம்பவங்கள் நடக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 32 லட்சம் குற்றங்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குகளாகப் பதிவாகின்றன. இவற்றில், சுமார் 10 சதவித சம்பவங்கள் தமிழகத்தில் நிகழ்கின்றன. ஆனால், காவல் துறை மீதான வழக்குகள் பதிவாவது அரிதினும் அரிதாகவே நடக்கிறது. அண்டை மாநிலமான கேரளத்தோடு ஒப்பிட்டால், அங்கு ஆண்டுதோறும் காவலர்களுக்கு எதிராக சுமார் 4,000 புகார்கள் பெறப்படுகின்றன. அவற்றில் சுமார் 400 சம்பவங்களில்  வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் காவல் துறைக்கு எதிராகப் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கையே வெறும் 400-க்குள்தான் இருக்கிறது. இவற்றில் 20 சம்பவங்கள்கூட வழக்காகப் பதியப்படுவதில்லை. 

மக்களுக்காகத்தான் இயங்குகிறது காவல் துறையும், அரசும். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள். மக்களின் அமைதி, மக்களின் பாதுகாப்பு, மக்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதே காவல் துறையின் அடிப்படைக் கடமை. இந்த உணர்வைக் காவல் துறையிடம் வளர்த்தெடுக்க வேண்டும் என்றால் காவல்துறையின் "சிஸ்டம்" சீர் செய்யப்பட வேண்டும் ! காவலர்களின் மன நிலையில் பிரச்சனையா உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும் ! அதற்கான முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் ! எளியோர்களை இன்னும் எள்ளி நகையாட காவல்துறை நினைத்தால் கடுமையான பாதிப்புகள் காவல்துறைக்கும் அரசுக்கும்தான் என்பதை அதிகாரவர்க்கம் மறந்துவிடக் கூடாது !