"நான் ஒரு முதல்வராக இருந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை" என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி மூலம் உரையாடும்போது 'ஆக்சிஜன் பற்றாக்குறை' குறித்த தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
"டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்கள் வழியிலேயே திருப்பி விடப்படுகின்றன. என்னால் இதை தடுக்க முடியவில்லை" என்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தும்போது கெஜ்ரிவால்
தெரிவித்தார்.
பொதுவாக, முதல்வர் போன்ற முக்கியப் பதவிகளில் உள்ளவர்கள் தங்கள் இயலாமை குறித்து இவ்வளவு வெளிப்படையாக பேசுவதில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர், "என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை" என்று பிரதமரிடம் சொல்லும் அளவுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருப்பதைக் காட்டும் வகையில் கேஜ்ரிவாலின் பேச்சு இருந்தது.
வேறொரு மாநிலத்திலே டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனம் தடுத்து நிறுத்தும்போது, அதை எப்படி பத்திரமாக டெல்லிக்கு கொண்டுவருவது என்பதற்கான வழியை மத்திய அரசுதான் தெரிவிக்க வேண்டும் என்பதே கேஜ்ரிவாலின் வலியுறுத்தலாக இருந்தது.
"யாருகிட்ட போவேன்!"
"டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டால் நான் மத்திய அரசில் யாரைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்?" என கேஜரிவால் காணொலியை ஆலோசனையின்போது கேட்டார். ஆகவே, மறைமுகமாக மத்திய அரசுதான் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்க வழி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
ராணுவ கட்டுப்பாடு...
"நாட்டில் உள்ள அனைத்து ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் இந்திய ராணுவம் வசம் ஒப்படைக்க வேண்டும். டெல்லிக்கு பிரச்சனையின்றி ஆக்சிஜன் ஏற்றிவரும் வாகனங்கள் வந்து சேர மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். நாடு முழுவதும் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளில் இருந்து புறப்படும் வாகனங்களை ராணுவத்தினர் பாதுகாப்புடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
'டெல்லி நகரிலே பெரிய ஆக்சிஜன் தொழிற்சாலை எதுவும் இல்லாததால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிற மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே அப்படி ஆக்சிஜன் கொண்டு வரும் வாகனங்கள் டெல்லி வந்து சேரும் முன்பே பல்வேறு மாநிலங்களில் திருப்பி விடப்படுவதால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் புகார் கூறி வருகிறார்.
ஹரியானா அல்லது உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் வழியே மட்டுமே சாலை மார்கமாக டெல்லி சென்றடைய முடியும். ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தேவை கடுமையாக அதிகரிப்பதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பல மருத்துவமனைகள் இன்னும் ஒரு மணி நீரம் அல்லது இரண்டு மணி நேரத்தில் தீர்ந்துவிடும் என வெளிப்படையாக தெரிவித்து, நோயாளிகளை எச்சரித்து வருகின்றன. இந்தச் சூழலில்தான் 'டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டுவரும் வாகனங்களை எந்த மாநிலத்திலாவது தடுத்து நிறுத்தினால், நான் மத்திய அரசில் யாரை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்' என கெஜ்ரிவால் பிரதமரை கேட்டார்.
டெல்லியைச் சேர்ந்த சில மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, எங்களுக்கு உடனடியாக ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆக்சிஜன் கிட்டாவிட்டால் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றுவது கடினம் என அவர்கள் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மருத்துவமனைகளுக்கு சரியான முறையிலே ஆக்சிஜன் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை சேர்ந்த உயர் அதிகாரிகள் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு விநியோகத்தை அதிகரிக்கும் முயற்சி செய்து வருகிறார்கள்.
பிரதமருடன் நடைபெற்ற காணொலி ஆலோசனையில் அரவிந்த் கேஜ்ரிவால் நிலைமை இன்னும் சீரகவில்லை என்பதை வலியுறுத்தினார். ரயில் மூலமும் ஆக்சிஜன் விநியோகம் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மத்திய அரசு இந்திய விமானப்படை போக்குவரத்து விமானங்கள் மூலம் ஆக்சிஜன் ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஆக்சிஜன் தொழில்சாலைகள் அமைந்துள்ள இடங்களுக்கு கொண்டுசென்று விநியோகத்தை விரைவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. ஆக்சிஜன் தொழில்சாலைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதித்து, ஆக்சிஜன் வாகனங்களின் போக்குவரத்தி தடுக்க கூடாது என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
டெல்லிக்கு குறைந்த விலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்தார். மத்திய அரசுக்கு என்ன விலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி கொடுக்கப்பட்டதோ, அதே விலையிலேயே டெல்லி அரசுக்கும் தர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மே மாதம் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடலாம் என அறிவிக்கப்பட்டு இருப்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி தேவை அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
- கணபதி சுப்ரமணியம்