சென்னையின் தெருக்கள், சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு பிளாஸ்டிக் குப்பைகள் பெரும் தடையாக உள்ளன. பருவமழை காலங்களில் வடிகாலில் அடைந்துள்ள நெகிழி குப்பைகளினால் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
சென்னையில் பெருமழையால் பல பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீர் முட்டி அளவிற்கு தேங்கி இன்னமும் வடியாமல் உள்ளது. இந்நிலையில் சென்னையின் மழைநீர் வடிகால் அமைப்பு குறித்து பலர் விமர்சித்து வரும் நிலையில், 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வடிகாலில் நெகிழி கழிவுகள் அடைந்திருந்துள்ளதால் தண்ணீர் தேங்கியுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னையில் மழைநீரானது நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி வழியே இயற்கையாக வெளியேறுகிறது. தேங்குகின்ற மழைநீர் நீர்நிலைகள் மூலமே அதிக அளவு வெளியேற்றப்படும் நிலையில், சென்னையில் 16 கண்மாய்கள் உட்பட, 348 கிளை வடிகால்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படும் வகையில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளியேற்றப்படும் நீரானது சென்னையின் முக்கிய ஆறுகளான கூவம், அடையாறு, கொசஸ்தலை வழியே வந்து வங்கக்கடலுக்கு வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் தெருக்கள், சாலைகளில் நீர் தேங்கியிருப்பதற்கு வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்பு ஏற்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முக்கியமாக மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருந்ததற்கு வடிகால் குழாய்கள், கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்திருந்ததே காரணம். நேற்று வரை 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகளினால் ஏற்பட்ட அடைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்புகள் அதிக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுவரை 180 டன் நெகிழி குப்பைகள் மேற்கு மாம்பலம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
5 செ.மீ நீளம் கொண்ட பிளாஸ்டிக் முதல் 50 செ. மீ அளவிளான பிளாஸ்டிக் குப்பைகள் சாலையில் உள்ள வடிகாலில் அடைப்பை உண்டாக்குகின்றன. முக்கியமாக மேற்கு மாம்பலம், ஜி.என்.செட்டி சாலைகளில் உள்ள வடிகால் பிளாஸ்டிக் குப்பைகளினால் அடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் வடியாமல் தேங்கியதாக கூறப்படுகிறது. தற்போது வரை 400க்கும் மேற்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு வடிகால்களில் நீர் செல்லும் வகையில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகளின் வழியே வெளியேற்றப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அளவும், வேதி கழிவுகளும் அதிக அளவில் வங்கக்கடலில் கலப்பது தெரியவந்துள்ளது.
இதனால் வங்கக்கடல் நீல நிறம் மாறி கருப்பு நிறமாக காட்சியளிக்கின்றது. பிளாஸ்டிக் குப்பைகள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது சென்னையில் மழைநீர் வடிகாலில் அடைப்பு ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றி வருவது, அனைத்து விதமான பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.
- பால வெற்றிவேல்