சிறப்புக் களம்

மழையோடு கரையும் கண்ணீர்

மழையோடு கரையும் கண்ணீர்

webteam

கடந்த ஆண்டு வறட்சி ஏற்படுத்திய வடுக்களை மழை, தனது ஈரத்தால் ஆற்றிக்கொண்டிருக்கிறது. மழைக்காலம் பலருக்கும் பரவசத்தை தந்து கொண்டிருக்க மேலும் சிலருக்கோ வேதனையை தந்து‌கொண்டிருக்கிறது.

சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தை ஒட்டிய‌ சாலையில் பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் பரபரக்கின்றன. இந்த பரபரப்புக்கு ‌மத்தியில்தான் 47 குடும்பங்கள் இந்த சாலை ‌ஓரத்தையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டிருக்கின்றன. பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, முதியவர்கள் வரை மழைச்‌‌சாரலிலும், கன மழையிலும் ஒடுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.‌ பிறந்த நாளில் இருந்து இதுவரை வீடு என்ற ஒன்றில் வசித்ததே இல்லை என்கிறார்கள்.

மழைக்காலத்தில் ஒதுங்க இடம் இன்றி, இருக்கவும் முடியாமல்,சமைக்கவும் முடியாமல் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. குறிப்பாக இரவு நேரத்தில், தூங்க முடியாமல் அங்கும் இங்கும் அலைந்து புகலிடம் தேடுவதே இவர்களின் வேலையாக இருக்கிறது.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வருபவர்‌கள், நிரந்தர வீடு தருவதாக வாக்குறுதி தருவதாக கூறும் இந்த மக்கள், பல தேர்தல்களை கடந்த பின்னும்‌ சாலையோரங்களையே வாழிடமாகக்கொண்டுள்ளனர். நடைபாதையில் வாழும் மக்களின் நலன்களை பாதுகாக்க உச்சநீதிமன்றம் வலியுறுத்திய போதிலும், பல மழைக்காலங்கள் இவர்களின் வாழ்க்கை வெள்ளத்தை அடித்துச்சென்று கொண்டேதான் இருக்கின்றன‌.