சிறப்புக் களம்

செல்போன் வழியே தேடி வரும் மரணம்... சத்தமில்லாமல் காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்..!

செல்போன் வழியே தேடி வரும் மரணம்... சத்தமில்லாமல் காவு வாங்கும் ஆன்லைன் சூதாட்டம்..!

webteam

''ஒரு நாளைக்கு ரூ.50,000 ஜெயிச்சாக்கா மத்த மூனு நாள்ல நம்மக்கிட்ட இருந்து ரெண்டு லட்ச ரூபா வெளில போயிடுது. அது எனக்குப் புரியவே இல்ல. அது புரியாமலே விட்ட காசை புடிச்சிடலாம், இந்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம், அடுத்த டோர்னமெண்டுல அடிச்சிடலாம்னு பல டோர்னமெண்ட் விளையாடிட்டேன் மதி. கடைசி வரைக்கும் அவனுங்க நம்மள வச்சித்தான் செஞ்சானுங்கன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சி''

இது ரம்மி விளையாட்டால் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் வீடியோ பதிவு. சூதாட்டம் வாழ்வை சிதைக்கக் கூடியது என்பதற்கு சமீபத்திய உதாரணமாக ஆகி இருக்கிறார் அந்த இளைஞர். தன் குடும்பத்தின் மீதான அன்பை அவரது வீடியோ தெளிவாக விளக்குகிறது.

பணம் வைத்து விளையாடும் சீட்டாட்டம் எத்தனையோ களேபரங்களை கண்டிருக்கிறது. பணயத்தால் ஏற்படும் வாக்குவாதம் கொலையில் முடிந்த
கதைகளும் உண்டு. இப்படிப்பட்ட சீட்டாட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு தடுக்கிறது. சட்டவிரோதமாக யாராக விளையாடினால் கைது செய்கிறது காவல்துறை. ஆனால் ஆன்லைனில் அதே சீட்டாட்டம் ஆட எந்தத் தடையும் இல்லை. இணையத்தை திறந்தால், டிவியை திறந்தால் சீட்டாட்டம் தொடர்பான விளம்பரங்கள் கொட்டுகின்றன. அதே சூது, அதே பணம் ஆனால் அரசால் சட்டத்தால் தடையில்லையா என்கின்றனர் இணையவாசிகள்.

குறிப்பாக இந்த கொரோனா காலத்து லாக்டவுனை சரியாக பயன்படுத்தி பலரையும் தங்கள் வலையில் விழ வைத்திருக்கிறது சூதாட்ட நிறுவனம். முதலில் கொடுப்பது போல கொடுத்து பின்னர் மொத்தமாக சுருட்டும் பாரம்பரிய சூதாட்ட பார்முலாவைத்தான் இணையதள சூதாட்டமும் செய்கிறது. முதலில் பணத்தை பார்ப்பவர்கள் மெல்ல மெல்ல பணத்தை இழக்கிறார்கள். விட்ட பணத்தை எடுத்துவிடலாம் என கடன் வாங்குகிறார்கள். சிறு துளி பெரு வெள்ளமாய் மாறுவது போல கடன் பெருகி கடைசியில் தற்கொலையில் கொண்டு விடுகிறது இந்த சூதாட்டம்.

ஆன்லைனில் விளையாடுங்கள் வீடு வாங்குகள் என விளம்பரம் ஆசையைத் தூண்டுகின்றன. பொழுதுபோக்குக்காக சமூக வலைதளம் பக்கம் வருபவர்களை எளிதாக தனக்குள் இழுத்து விடுகிறது சூதாட்ட விளம்பரம். சீட்டாட்ட சூதாட்டம் போலவே நடப்பு ஐபிஎல்லை வைத்து நடக்கும் வீரர்களை தேர்வு செய்யும் விளையாட்டும் ஒரு சூதாட்டம் தான் என்கின்றனர் ஒரு தரப்பினர். குறிப்பாக இளைஞர்கள் பலர் கிரிக்கெட்டை ரசிப்பதால் அது தொடர்பான சூதாட்டத்திலும் அவர்களால் எளிதாக போய்விட முடிகிறது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

வீரர்களை கணிப்பது தான், சொற்ப பணம்தான், ஒரு பொழுதுபோக்குதான் என இளைஞர்கள் பல காரணங்களை சாதகமாக சொன்னாலும் ஒரு சூதாட்ட மனநிலைக்கு இது அவர்களை தயார் செய்துவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த தொடக்கநிலை தான் அடுத்தடுத்த பெரிய சூதாட்டங்களுக்கு பாதை போட்டு கொடுக்கிறது என்பதும் உண்மையிலும் உண்மை.

''இப்போக்கூட எனக்கு விளையாடனும்னு தோனுது. அந்த அளவுக்கு அதுக்கு அடிக்ட் ஆகியிருக்கேன். எப்படித்தான் நான் அடிக்ட் ஆனேன்னு தெரியல'' 
என்று தற்கொலை செய்துகொள்ளும் நேரத்திலும் ஒருவரை கூற வைக்கிறது என்றால் சூதாட்டத்தின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
லாட்டரியும் ஒருவித சூதாட்டமே எனக் கூறிய தமிழக அரசு 2003ம் ஆண்டு லாட்டரி விற்பனையை தடை செய்தது. பல ஏழை மக்கள் பெரிதும்
பாதிக்கப்படுவதாக கூறியது அரசு. அதற்குப்பின் லாட்டரி என்பதையே மறந்துபோனார்கள் மக்கள். ஒருநாள் சொற்ப சம்பளத்தில் பாதியை லாட்டரிக்கே கொடுத்து ஏமாந்த எத்தனையோ குடும்பங்கள் அதற்குபின் பெருமூச்சு விட்டன. ஆனால் இன்று ஆன்லைன் சூதாட்டங்கள் குடும்பங்களை கழுத்தை நெரிக்கத் தொடங்கியுள்ளன

பலரையும் செல்போன் வழியாக இழுத்து மரணத்தில் தள்ளிக்கொண்டு இருக்கும் இந்த ஆன்லைன் சூதாட்டத்தையும் அரசு தலையிட்டு தடைசெய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட இளைஞர், தன் மனைவி மதியிடம் மன்றாடும் வார்த்தைகள் இப்படியாகவே இருக்கின்றன.

’’பசங்கள என்னை மாதிரி வாழ விடாத மதி. நீ ஏதாவது பண்ணணும் நினைச்சா, இந்த ஆன்லைன்ல நடக்கற விஷயத்த எல்லாம் தடுக்குறதுக்கு யாருகிட்டயாவது சொல்லு. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் எதுலயாவது போட்டு என் வாழ்க்கை அழிஞ்சி போச்சி, எம்புருஷன் செத்துட்டான்னு போட்டு ஆன்லைன்ல நடக்கற எல்லா கேம்களையும் ஆஃப் பண்ணி விட்டுடு. அது எனக்கு மனத்திருப்தியை அளிக்கும். இன்னைக்கு நான் சாகறதுக்கு முழு காரணமும் அதான். என்னைப் போல பலபேரு அதுல மாட்டிக்கிட்டு இருக்கான். விளையாடிட்டே இருக்கானுங்க. என்ன முடிவுல விளையாடறானுங்கன்னே தெரியல. முடிஞ்ச அளவுக்கு அந்த கம்பெனியை எல்லாம் இழுத்து மூடிடு மதி’’

இது தொடக்கம். முள் மரம் எனத் தெரிந்தும் வளர்ப்பது அறிவல்ல. செடியாக இருக்கும்போதே பிடுங்குவதே ஆகச் சிறந்தது.