சிறப்புக் களம்

அரசியலுக்கு ஓய்வு என்பது இல்லையே! 94 வயதிலும் தேர்தல் களம் காணும் பிரகாஷ் சிங் பாதல்

அரசியலுக்கு ஓய்வு என்பது இல்லையே! 94 வயதிலும் தேர்தல் களம் காணும் பிரகாஷ் சிங் பாதல்

கலிலுல்லா

இந்தியாவில் ஓர் அரசியல் தலைவர் 94 வயதிலும் களம் காண்கிறார். யார் அவர் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. அதன் அடித்தளமே 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம் என்பதுதான். மேலும், சட்டப்பேரவைகளுக்கு 25 வயது நிரம்பிய நபர் பாலினம், ஏழை, பணக்காரன் என்ற எந்த பாகுபாடுமின்றி போட்டியிடலாம். தற்போது பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, உத்தராகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பஞ்சாப் தேர்தலில் களம் இறங்குகிறார் 94 வயதான நபர் ஒருவர். அவர் யாருமல்ல பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான பிரகாஷ் சிங் பாதல்.

இதற்கு முன்பாக 2016 கேரள சட்டமன்ற தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி எஸ் அச்சுதானந்தன் 92 வயதில் போட்டியிட்டது தான், இதுவரை அதிக வயதில் தேர்தல் களம் கண்டவர் என்ற சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்திருக்கிறார் பிரகாஷ் சிங் பாதல்.

1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி பிறந்த பிரகாஷ் சிங் பாதல் நாடு சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

1970 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக முதல் முறையாக பொறுப்பேற்றபோது மிக இளம் வயதில் ஒரு மாநிலத்தின் முதல்வராக நபர் என்ற பெருமையை பெற்றார். அதன்பிறகு 1977, 1997, 2007, 2012 என ஐந்து முறை பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார் பாதல்.

கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பஞ்சாப் மாநிலத்தை முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலில் வெறும் 15 இடங்களை மட்டுமே பிரகாஷ் சிங் பாதலின் சிரோன்மணி அகாலிதளம். அந்த தேர்தலில் புதிதாக களம் கண்ட ஆம் ஆத்மி கட்சியை விட குறைவான இடங்களையே பெற்றதால் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழந்தது. 3 வேளாண் சட்ட விவகாரத்தில், பாஜகவுடன் கூட்டணியை முறித்த பாதல் மத்திய அரசு வழங்கிய பத்மவிபூஷன் பட்டத்தை விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்காக தூக்கி எறிந்தார்.

தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள தனது கட்சியினரை உற்சாகப்படுத்த ஆறாவது முறையாகவும் 25 ஆண்டுகளாக தனக்கு தோல்வியையே தராத லம்பி சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறார் பாதல். கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாப் மாநில அரசியலில் கிங்காகவும் கிங்மேக்கராகவும் இருந்து வரும் பிரகாஷ் சிங் பாதல் 94 வயதிலும் தளராத உற்சாகத்துடன் இளைஞர்களுக்கு சரிசமமாக ஆற்றலுடன் தேர்தலை சந்திக்கிறார்