சிறப்புக் களம்

''செஸ் வரியை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்'' - பிடிஆர் பேசியது என்ன?

''செஸ் வரியை மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்'' - பிடிஆர் பேசியது என்ன?

webteam

டெல்லியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். 

மத்திய பட்ஜெட் இன்னும் ஒரு மாதத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் அதற்கு முன்னதாக மாநில நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''எஃகு, தாமிரம், அலுமினியம், பித்தளை மற்றும் பருத்தி நூல் ஆகியவற்றின் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும்.

இவற்றின் விலைவாசி ஏற்றம் நேரடியாக தாக்கம் ஏற்படுத்தும் என்பதால், இறக்குமதி வரி கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். ஜவுளித் துறையின் ஜிஎஸ்டியை 5-ல் இருந்து 12 சதவீதமாக மாற்றியதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு சிறு குறு தொழில் துறையில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே கடுமையான நிதி சுமையில் உள்ள இந்த துறையினருக்கு, இது மேலும் சுமையை ஏற்படுத்தும்.

கடந்த காலங்களில் மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கான அமைப்புகள் இயங்குவதற்கு தமிழக அரசு இலவசமாகவோ அல்லது சலுகை விலையில் நிலங்களை வழங்கியது. தற்போது அந்த நிறுவனங்கள் தனியார்மயமாகி விட்டதன் காரணமாக, தற்போதைய சந்தை மதிப்பில் நிலத்தின் விலையை செலுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும். பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்க வேண்டிய 17,000 கோடி ரூபாயை உடனடியாக தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில் மாநில அரசுகளின் சுமையை குறைக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். பகிரப்படாத செஸ் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் 6.26 சதவீதத்தில் இருந்த செஸ் வரி தற்போது 19.9% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதில் மொத்தமாக வசூலிக்கப்படும் வரி தொகையை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இதனை அடிப்படை வரியுடன் இணைக்க வேண்டும்.

தமிழத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டியால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பீட்டு பற்றாக்குறை தொகை ரூ.16.725 கோடியை உடனடியாக வழங்க வழங்க வேண்டும். நேரடி வரியைவிட மறைமுக வரிகள் தற்போது அதிகரித்துள்ளன. இது ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. எனவே இதனை போக்கும் வகையில் நேரடி வரி மற்றும் மறைமுக வரியை 60:40 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும். பழைய வாகனங்களை அழிக்கும் 2021 புதிய சட்டத்தின்படி இதற்காக கட்டமைப்புகளை உருவாக்க மாநில அரசுகளுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. எனவே வரும் மத்திய பட்ஜெட்டின் பொழுது இதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதுரையில் அமைய உள்ள NIPER திட்டத்திற்கு மாநில அரசு ஏற்கனவே நிலம் ஒதுக்கீடு செய்து விட்டபோதும், இதுவரை எந்தவிதமான நிதியும் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படவில்லை. எனவே நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்'' என்றார்.

- நிரஞ்சன்