சிறப்புக் களம்

பேசாத ஜோ பைடன், காத்திருக்கும் இம்ரான் கான்... - மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

பேசாத ஜோ பைடன், காத்திருக்கும் இம்ரான் கான்... - மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

நிவேதா ஜெகராஜா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்னும் தொடர்புகொண்டு பேசவில்லை என்பதை மையப்படுத்தி பாகிஸ்தான் நெட்டிசன்கள் ட்விட்டரில் மீம்ஸ்கள் மூலம் ரகளை செய்து வருகின்றனர்.

ஜனவரி 20, 2021 அன்று அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன். பொறுப்பேற்றதிலிருந்து ஆறரை மாதங்கள் கடந்துவிட்டன. இந்த காலகட்டத்தில் இந்திய பிரதமர் மோடி உட்பட பல நாட்டு தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் போன் மூலமாக பேசிய பைடன் இன்னும் பாகிஸ்தான் பிரதமர் மோடி உடன் பேசவில்லை.

இந்த நிலையில்தான் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேசிய பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், "அமெரிக்காவின் அதிபர் ஒரு முக்கியமான நாட்டின் பிரதமரிடம் பேசவில்லை. இந்த சமிக்ஞையைப் புரிந்துகொள்ள நாங்கள் போராடுகிறோம்" என்று பேசியிருந்தார். இவரின் இந்தப் பேட்டி பாகிஸ்தான் அரசியலில் புயலைக் கிளப்பி கொண்டிருக்க, இது தொடர்பான விவாதங்கள்தான் தற்போது அந்நாட்டு ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளன.

அதேநேரம், மறுபுறம் அந்நாட்டு நெட்டிசன்கள் #BidenMujhayCallKaro என்ற ஹேஷ்டேக் மூலம் இந்த விஷயத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தை மையப்படுத்தி அமிதாப் பச்சன் பாடல் 'இன்டேசர்' பாடல் முதல் குரங்கு, ஆடு வரை மீம்ஸ்களாக தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பத்திரிகையாளரும், இம்ரான் கானின் முன்னாள் மனைவியுமான ரெஹாம் கான் கூட ஸ்வீதாஜ் பிரார் மற்றும் யோ யோ ஹனி சிங்கின் பாடல் வரிகளுடன் ஒரு புகைப்படத்தை ட்வீட் செய்து கலாய்த்திருக்கிறார். ஷர்ஜீல் சர்வர் என்ற மற்றுமொரு பயனர், 1999-ல் ப்ரீத்தி ஜிந்தா, அக்‌ஷய் குமார் நடித்த 'முஜே ராத் தின்' பாடலின் கிளிப்பைப் பகிர்ந்து கிண்டலடித்துள்ளார்.

இன்னொரு பயனர் அமிதாப் பச்சன் நடிப்பில் 1984-ல் வெளியான ஷராபி திரைப்படத்தின் "இன்டெஹா ஹோ கயி இன்டேசர் கி" என்ற பாடலை பதிவிட்டுள்ளார். "நான் காத்திருந்தேன்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் "நாங்கள் உறுதியாக இருக்கிறோம்... நம்பிக்கை இழக்காதீர்கள்.. காத்திருங்கள்" என்று வரிகள் வரும். இதனைப் பதிவிட்டுதான் இம்ரான் கானின் நிலைமையை கிண்டலடித்துள்ளனர். கேலி, கிண்டல்களுக்கு மத்தியில் சிலர் இந்த தருணத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை நியாபகப்படுத்தி பதிவிட்டிருந்தனர்.

ஏனென்றால், நவாஸ் ஷெரீப் காலத்தில் வெளிநாட்டு ராஜதந்திரங்களில் பாகிஸ்தான் சிறப்புற்று இருந்தது. அண்டை நாடுகளுடன் இணக்கம் காட்டியது. ஆனால், தற்போது இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு இதில் தோல்வியற்றத்தாக பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதனை மேற்கோள்காட்டி, இந்தத் தருணத்தில் நவாஸ் ஷெரீப்பின் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

நவாஸ் ஷெரீப்பின் கட்சி பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (N)-இன் மூத்த துணைத் தலைவர் சர்தார் நவுமான் என்பவர், "நட்பு நாடுகளின் நம்பகத்தன்மையை பாகிஸ்தான் ஏற்கெனவே இழந்துவிட்டது. இது நமது ராஜதந்திரத்தில் ஒரு புதிய பின்னடைவை பிரதிபலிக்கிறது. இந்த தருணத்தில் உங்களை நினைவுகூர விரும்புகிறேன்" என நவாஸ் ஷெரீப்பை நினைவுகூர்ந்துள்ளார்.