சிறப்புக் களம்

சாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..!

சாதாரண மனிதரின் வியக்க வைக்கும் சாதனை: பிரமிக்க வைக்கும் சுபாஷினி மிஸ்திரி..!

Rasus

தனது அரிய சாதனைகளால் சாதாரண வாழ்வை பிரமிப்பானதாக மாற்றிக் காட்டியவர்கள் சிலரே.. அவர்களில் ஒருவர்தான் சுபாஷினி மிஸ்திரியும்.. அவர் குறித்து தெரிந்துகொள்வோம்.

2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷினி மிஸ்திரிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தில் பிறந்த சுபாஷினி மிஸ்திரியின் அரிய செயலும், விடா முயற்சியும், அதற்காக அவர் மனதில் எடுத்த சபதமுமே அவருக்கு இன்று பத்மஸ்ரீ விருதை வாங்கி கொடுத்துள்ளது. விருதுக்காக அவர் எதையும் செய்யவில்லை. தன் போன்ற ஏழைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக அவர் செய்த அசாதாரண நிகழ்வே சுபாஷினி மிஸ்திரிக்கு மகுடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் 1943ஆம் ஆண்டு சாதாரண விவசாய கூலித் தொழிலாளியின் மகளாய் பிறந்தவர் சுபாஷினி மிஸ்திரி. கொல்கத்தா அருகில் உள்ள குல்வா என்ற இடத்தில்தான் சுபாஷினி மிஸ்திரியின் தந்தை விவசாய தொழில் செய்து வந்தார். வீட்டு வறுமை சுபாஷினி மிஸ்திரியின் குடும்பத்தை அதிகம் துரத்தியிருக்கிறது. மகளுக்கு மூன்று வேளை உணவளிக்கக் கூட அவரது தந்தை சிரமப்பட்டிருக்கிறார். காரணம், சுபாஷினி மிஸ்திரியின் குடும்பத்தில் அவருடன் சேர்த்த மொத்தமாக 14 குழந்தைகள்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் சுபாஷினி மிஸ்திரியின் 12 வயதில் பெற்றோர்கள் பார்த்து அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். திருமணம் முடிந்து வீடு மாறினாரே தவிர சுபாஷினி மிஸ்திரியின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வறுமை மீண்டும் அவரை வாட்டி எடுத்திருக்கிறது. சுபாஷியினின் கணவர் சந்திராவும் விவசாயிதான். சந்திராவின் மாத வருமானம் 200 ரூபாய். சுபாஷினியோ சமையல் செய்து கொடுப்பது, அக்கம்பக்கத்தினர் வீட்டுக்கு வேலை செய்து கொடுப்பது என சிறிது சிறிதாக சம்பாதித்து தனது குடும்ப வண்டியை ஓட்டிக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் விதி வலியது. 1971-ஆம் ஆண்டில் சுபாஷியின் கணவர் சந்திரா இரப்பை குடல் அழற்சி காரணமாக உயிரிழந்திருக்கிறார். அந்த நேரத்தில் அங்கிருந்த அரசு மருத்துவமனையும் கூட சந்திராவுக்கு சிகிச்சை அளிக்க மறுத்திருக்கிறது.

இந்தச் சம்பவம் சுபாஷினியின் நெஞ்சில் வடுவாய் அமைந்துவிட்டது. நம்மை போல எத்தனை ஏழைகள் இருப்பார்கள்? அவர்களுக்கு வரும் நோய் நொடிகளுக்கு என்ன செய்வார்கள்..? என்று மனம் நொந்த சுபாஷினி, ஏழைகளுக்காக ஒரு மருத்துவமனையைக் கட்டி முடிக்க வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறார்.

இதற்காக வீடு வீடாக சென்று காய்கறி விற்றிருக்கிறார். வீடு கழுவுவது, சுத்தம் செய்வது, செங்கல் சூளையில் வேலை என பல அவாதரம் எடுத்து கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறார். ஒருநாள் இரண்டு நாட்கள் அல்ல. இருபது வருடம். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து இறுதியில் ஏழைகளுக்காக 1993ஆம் ஆண்டு மருத்துவமனையைக் கட்டி முடித்து சபதத்தை நிறைவேற்றிவிட்டார் சுபாஷினி மிஸ்திரி. அவருக்கு 5 குழந்தைகள். அவர்களில் ஒருவரை மருத்துவம் படிக்க வைத்து மருத்துவராக்கிவிட்டார். இந்நிலையில் அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

மனிதன் நினைத்தால் எதனையும் முடித்துக் காட்டலாம் என்பதற்கு சுபாஷினி மிஸ்திரி சிறந்த ஒரு உதாரணம்..