Hornbill bird
Hornbill bird R. Saravana Babu
சிறப்புக் களம்

எந்நாளும் உன்னாலே... இறக்கும்வரை இணைந்தே வாழும் இருவாச்சிப் பறவைகள் - ஓர் தொகுப்பு

Snehatara

உருவ அமைப்பை போன்றே பறவையினங்களில் தனித்துவமான வாழ்வியல் முறையைக் கொண்டது இருவாச்சி என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பறவை. தனது வாழ்வில் ஒரே ஒரு இணையை தேடிக்கொள்ளும் இருவாச்சி பறவைகள், இரை தேடுவதில் ஆரம்பித்து இளைப்பாறுவது வரை எங்கு சென்றாலும் ஆண் பறவையும் பெண் பறவையும் இணைந்தே செல்கின்றன. இனப்பெருக்க காலத்தில் அடர்ந்த மழைக்காடுகளில் இருக்கிற உயரமான மரங்களில் இயற்கையாய் அமையும் மரபொந்துகளை தேடி அலைந்து மரக்கூட்டை இவை அமைத்துக்கொள்கின்றன.

பொந்திற்குள் சென்ற பெண் பறவை தன் இறகுகளை உதிர்த்து உட்பகுதியை மெத்தை போல் மென்மையாக்கி விடுகிறது. ஆண் பறவையோ பெண் பறவை உள்ள மரப்பொந்தை தன்னுடைய உமிழ் நீர், ஈரமான மண் மற்றும் மர சிதவைகளைக்கொண்டு மூடிவிட்டு, உணவு கொடுக்க மட்டும் சிறு துவாரத்தை உருவாக்கி விடுகிறது. தன் இயற்கையான இறகுகள் மற்றும் பொலிவை இழந்து மெலிந்துவிடும் பெண் பறவை அக்கூட்டுகுள்ளேயே இரண்டிலிருந்து மூன்று வரை முட்டைகளையிடும். பெண் பறவை அதனை ஏழு வாரங்கள் வரை அடைகாக்கிறது.

Hornbill bird

பெண் பறவையின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கும் அதே வேளையில் ஆண் பறவை காடெங்கும் தேடியலைந்து தனது அலகுகளுக்குள் சேமித்து எடுத்து வரும் உணவை கூட்டின் துவாரம் வழியே பறவைக்கு ஊட்டி விடுகிறது. இரை தேடி செல்லும் ஆண் பறவை வேட்டையாடப்படுவது போன்ற ஏதேனும் ஒரு காரணத்தால் இறந்துவிட்டால் பெண் பறவை தன் குஞ்சுகளோடு உயிர் விடுவதை தவிர வேறு வழியில்லை. குஞ்சுகள் பிறந்ததும் கூட்டை உடைக்கின்ற ஆண் பறவை பெண் பறவையை வெளியில் கொண்டு வருகிறது. பறக்க இயலாமல் போகும் பெண் பறவையின் உடல்நலம் தேறும் வரை அதற்கு உணவளித்து உதவுகிறது.

மனிதர்கள் எளிதில் காண இயலாத அடர்ந்த மழைக்காடுகளில் மட்டுமே இருவாச்சி பறவைகள் இனப்பெருக்கம் செய்யும். கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அரசு தோட்டக்கலை பழப்பண்ணயில் உள்ள ஒரு உயரமான இலவம்பஞ்சு மரப்பொந்தில் இருவாச்சி பறவை குஞ்சு பொரித்து அடைகாத்து வருவது பறவையியல் வல்லுனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நூற்றாண்டை கடந்தும் இதுவரை நிகழாத அதிசயமாக இங்குள்ள மரத்தை இருவாச்சி பறவை தேர்வு செய்துள்ளது வியப்பாகவே பார்க்கப்படுகிறது.