சிறப்புக் களம்

காடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. !

காடுகளின் ஆக்கிரமிப்பும்.. பலியான 100 புலிகளும்.. !

jagadeesh

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வன விலங்குகளுக்குத்தான், அவற்றை விட கொடியவர்களுக்கு அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் சூழலியல் தொடர்பான வழக்கில் ஓர் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளது. ஆம், இந்தியா முழுவதும் ஏராளமான வளமான காடுகள் இருக்கிறது. மிக முக்கியமாக குஜராத்தில் தொடங்கும் மேற்குத் தொடர்ச்சி மலை தொடர் தமிழகம் வரை நீண்டு செழுமையுடன் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தக் காடுகளை ஒட்டிய பகுதிகளில் சொல்ல முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகளில், ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

காடுகளின் ஆக்கிரமிப்புகளில் மிக முக்கியமாக பாதிக்கப்பட்ட விலங்கு என்றால் அது தேசிய விலங்கான புலி மட்டும்தான். இந்தியாவின் பெருமையாக கருதப்படும் புலிகள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே பெருமைக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டன. பின்பு, புலியின் தோலுக்காகவும் பல்லுக்காகவும் கடத்தல்காரர்களால் கொன்று குவிக்கப்பட்டன. புலி வேட்டைக்கும் கடத்தலுக்கும் தடை இருந்தபோதிலும் புலிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வந்தது. இதனையடுத்து 2006-ஆம் நடந்த கணக்கெடுப்பில் இந்திய காடுகளில் 1411 புலிகள் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதனையடுத்து மத்திய அரசு புலிகளை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் விளைவாக 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் முடிவில் 2226 புலிகள் காடுகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எண்ணிக்கை கணிசமாக தொடர்ந்து உயர்ந்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், 2018-ஆம் ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 100 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் மத்தியபிரதேச காடுகளில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளது. இதற்கடுத்து மகாராஷ்டிராவில் 20, கர்நாடகாவில் 14, தமிழகத்தில் 6 புலிகளும் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை மொத்தம் 24 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் மொத்தம் இரண்டு புலிகள் ஆள்கொல்லியாக கருதப்பட்டு வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. மேலும், 10 புலிகள் தமிழக வனப்பகுதியில் விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன. மேலும், 2014-ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சில புலிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களிலும், வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன. 2016-ஆம் ஆண்டு மார்ச் 17-ஆம் தேதி வரை மூன்று புலிகள் உயிரிழந்துள்ளன. 

தமிழகத்தில் எண்ணிக்கை உயர்வு...

தமிழகத்தில் கடந்த 12 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 76-இல் இருந்து 264-ஆக மூன்று மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆனைமலை, களக்காடு முண்டந்துறை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் மற்றும் பல்வேறு வனக் கோட்டங்களில் கடந்த 2006-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை 76-ஆக இருந்தது. வனத் துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, 2010-இல் 163-ஆகவும், 2014-இல் 229-ஆகவும் உயர்ந்தது. அதுவே, 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 35 புலிகள் அதிகரித்து 264 புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், புலிகள் பாதுகாப்பில் சிறந்த மேலாண்மைக்கான விருதை சத்தியமங்கலம் புலிகள் காப்பகமும், சிறந்த பராமரிப்புக்கான தரவரிசையில் ஆனைமலை புலிகள் காப்பகம் 89 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.