சிறப்புக் களம்

'ஆப்' இன்றி அமையா உலகு 21: ‘நம் வீடு’ சகல தகவலையும் கொடுக்கும் மொபைல் போன் செயலி!

EllusamyKarthik

பெரும்பாலானவர்களுக்கு வீடு கட்ட வேண்டுமென்ற பெருங்கனவு இருக்கும். அந்த கனவை நிஜமாக்குவதற்காக ‘ஓடி.. ஓடி’ உழைப்பவர்களும் உண்டு. சிறுக.. சிறுக.. சேமித்து, நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று, உடமைகளை அடமானம் வைத்து என வீடு கட்டுபவர்களும் உண்டு. இந்நிலையில் வீடு கட்டுபவர்களுக்கு உதவும் நோக்கில் ‘நம் வீடு’ என்ற கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் வீடு கட்டுவது தொடர்பான A டூ Z தகவல் கிடைக்கிறது. அது குறித்து இந்த வார 'ஆப்' இன்றி அமையா உலகு தொடரின் அத்தியாயத்தில் பார்க்கலாம். 

‘நம் வீடு’ செயலி!

> நித்ரா ஆப்ஸ் நிறுவனம் இந்த செயலியை வடிவமைத்துள்ளது. வீடு கட்டுவதற்கு முன், வீடு கட்டும் போது, வீடு கட்டிய பின், மனை வாங்க மற்றும் வீடு கட்ட கொடுக்கப்படும் கடன் குறித்த விவரங்கள். அரசின் திட்டங்கள் என இந்த செயலியில் வீடு கட்ட தேவையான அனைத்து விதமான தகவல்களும் கிடைக்கிறது. 

> வீட்டு மனை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியவை, DTCP ஒப்புதல் பெறுவதற்கான வழிமுறைகள், தடையில்லா சான்றிதழ், வீட்டு மனைக்கான வில்லங்க சான்றிதழ் பெறுவது, வீடு கட்டும் முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள், கட்டுமான செலவை குறைக்க உதவும் டிப்ஸ், கட்டுமான பொருள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை, வீடு கட்டும் முறைகள், எம்-சாண்ட் பயன்பாடு, மின் இணைப்பு பெறும் முறை, மழைநீர் சேகரிப்பு முறை, பழைய வீட்டை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்பது மாதிரியான விவரங்கள் டிப்ஸ்களாக இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

> வாஸ்து தகவல்கள், மனையடி சாஸ்திரம் மாதிரியான தகவல்களும் இந்த செயலியில் கிடைக்கின்றன. இது தவிர கட்டுமானம் சார்ந்த மேலும் சில சேவைகளை இந்த அப்ளிகேஷன் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடு அல்லது மனை விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு உள்ளது குறித்த விவரங்களையும் இந்த செயலியின் மூலம் பெறலாம். 

> இந்த டிப்ஸ்கள் அனைத்தும் எளிய மொழி நடையில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்து தகவல்கள் கேள்வி பதில் வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சொந்த வீடு கட்ட வேண்டும், மனை வாங்க வேண்டுமென விரும்புபவர்களுக்கு தெளிவான வழிகாட்டல் கிடைக்கிறது. 

> தமிழ் மொழியில் இயங்கும் இந்த செயலியை ஆண்ட்ராய்டு தளத்தில் இலவசமாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியை பயன்படுத்திய பெரும்பாலான பயனர்கள் பாசிட்டிவான ரிவ்யூ கொடுத்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தும் போது விளம்பரங்கள் கொஞ்சம் குறுக்கிடுகின்றன. அதிலிருந்து விடுபட மொபைல் போனில் இணையதள இணைப்பு இல்லாமல் பயன்படுத்தி பலன் பெறலாம்.