90-வது ஆஸ்கர் விருது விழா, ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருதான இதற்காக இப்போதே களைகட்டுகிறது அமெரிக்காவின் ஹாலிவுட்! பிரமாண்டமாக நடக்கும் இத்திருவிழாவில் ஒன்பது படங்கள் காத்திருக்கிறது சிறந்த பட போட்டிக்கு. ’இதுக்குத்தான் விருது, அதுக்குத்தான் விருது’ என்கிற ஆருடம் தொடங்கிவிட்டது அமெரிக்காவில்.
அந்தப் படங்கள் பற்றிய சிறுகுறிப்பு இங்கே:
டன்கிரிக் (Dunkirk) :
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய படங்களில், இது வேற லெவல் படம். ரிலீஸ் ஆன நேரத்திலேயே நோலனுக்கு ஆஸ்கர் விருது நிச்சயம் என சொல்லத் தொடங்கியிருந்தார்கள். ‘டன்கிர்க்’ என்னும் பெயர் இரண்டாம் உலகப் போர் வரலாற்றில் வலுவான இடத்தைப் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது, பிரான்சில் ஊடுருவிய நாஜி படை, நேசப்படையை சுற்றிவளைத்தது. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட இடம், டன்கிரிக் துறைமுகம். சிக்கிக்கொண்ட நான்கு லட்சம் வீரர்களை காப்பாற்ற நடக்கும் முயற்சிதான் படம். ராணுவ வரலாற்றில் மிகவும் அதிசயமான, ‘ஆபரேசன் டைனமோ’ என்ற அந்த நிகழ்வைதான் நோலன் ரத்தமும் சதையுமாகப் படமாக்கி இருக்கிறார்.
டார்க்கஸ்ட் ஹவர் (Darkest Hour):
நோலனின் ’டன்கிர்க்’ படத்தின் அடுத்த பாகம் போல வெளியான படம் இது. பிரான்சை வீழ்த்தி, ரஷ்யாவை முற்றுகையிட்டன, நாஜி படைகள். தடுக்க முடியாத நாஜி படைகளின் தாக்குதல் காரணமாக இங்கிலாந்து நடுங்கி கொண்டிருந்தது. மன்னன் நான்காம் ஜார்ஜின் அவநம்பிக்கை, சொந்தக்கட்சிக்காரர்கள் சதி, டன்கிரிக்கில் தவிக்கும் 4 லட்சம்
வீரர்கள் என நெருக்கடியானச் சூழலில், பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் நிலைமையை பதிவு செய்திருக்கும் படம். ஜோ ரைட் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சர்ச்சிலாக நடித்திருக்கும் கேரி ஓல்டுமேனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கண்டிப்பாக கிடைக்கும் என்கிறார்கள்.
கெட் அவுட் (Get Out):
அமெரிக்காவின் ஒரு கிராமத்தில் இருக்கும் தன் காதலியின் வீட்டுக்கு வருகிறான் கருப்பினத்தைச் சேர்ந்த ஹீரோ. அங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை பீதியோடு சொல்லும் படம். ஹாலிவுட்டின் காமெடி நடிகர் ஜோர்டான் பீலே, இதன் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். ஒரு த்ரில்லர் பின்னணியில் நிற அரசியலைப் பேசியிருக்கும் ’கெட் அவுட்’ முக்கியமான படம் என்கிறது ஹாலிவுட்.
த ஷேப் ஆஃப் வாட்டர் (The Shape of Water):
அமெரிக்க, ஃபேன்டசி படம். அறுபதுகளில் நடக்கிறது கதை . சிறுவயதிலேயே பேச முடியாத இளம்பெண்ணுக்கு விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஒன்றின் ரகசிய பரிசோதனைக் கூடத்தில் இரவு நேரப் பணி. நீரிலும் நிலத்திலும் வசிக்கும் மனிதனைப் போன்ற உயிரினம் ஒன்று ஆய்வுக்காகப் பரிசோதனைக் கூடத்துக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைப் பராமரிக்கும் பொறுப்பு அவளுக்கு. அது அவள் வாழ்க்கையை மாற்றுகிறது. அதனுடன் பழகும் அவள், ஒரு கட்டத்தில் பரிசோதனை முயற்சியில் இருந்து அதை விடுவிக்கக் கடுமையாக முயற்சிக்கிறாள். அதில் அவள் வென்றாளா என்பதை சொல்லும் படம். சேலி ஹாகின்ஸ், மைக்கேல் ஷானன், ரிச்சர்ட் ஜென்கின்ஸ் நடித்துள்ள இந்தப் படத்தை குல்லெர்மோ டெல் டோரா இயக்கியுள்ளார்.
லேடி பேர்ட் (Lady Bird):
டீன் ஏஜ் மகளுக்கும் அவள் அம்மாவுக்கும் நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை. மகளுக்கு வரும் காதல், அதனால் ஏற்படும் சின்ன சின்னப் பிரச்னை, அதை அம்மா எதிர்கொள்ளும் விதம் என திரைக்கதை வேறொரு இடத்துக்குச் செல்லும் இந்த காமெடி டிராமா கதையில் சாயோர்ஸ் ரோனனின் நடிப்பு பேசப்பட்ட ஒன்று. கிரெட்டா கெர்விக் இயக்கிய இந்தப்
படத்தை, கடந்த வருடம் வெளியான சிறந்த பத்து படங்களில் ஒன்றாக ’டைம்’ குறிப்பிட்டுள்ளது. சிறந்த படத்துக்கான கோல்டன் குளோப் விருதையும் இது பெற்றிருப்பதால் அகாடமி விருதும் இதற்கு கிடைக்கும் என்கிறார்கள்.
பாண்டம் திரெட் (Phantom Thread):
லண்டனில் ஃபேஷன் டிசைனர் ஒருவர், தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். இவருக்கு பணிப்பெண் ஒருவருடன் காதல் வருகிறது. பெரும் போராட்டத்துடன் இவர்கள் வாழ நினைக்கையில் ஏற்படுகின்ற பிரச்னைதான் கதை. 1950-களில் நடக்கும் பீரியட் டிராமா கதையான இதை பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியிருக்கிறார். ஹீரோவாக நடித்துள்ள டேனியல் டே-லெவிஸின் நடிப்பு அதிகமாகப் பாராட்டப்பட்டது.
தி போஸ்ட் (The Post) :
பத்திரிகை சுதந்திரம் பேசும் ஸ்பீல்பெர்க் படம். வழக்கமாக பத்திரிகைகளின் பெருமை பேசும் படங்கள்தான் அதிகம் வந்திருக்கின்றன. அதற்குள் நடக்கும் அரசியல் மற்றும் செயல்பாடு பற்றி வெளிப்படையாக பேசியிருக்கும் படம், ’தி போஸ்ட்’. வியட்நாம் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கிடைக்கிறது. அந்த ஆவணங்கள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையால் கைப்பற்றப்படுகிறது. ஆனால், இதை வெளியிடலாமா வேண்டாமா என்று குழம்புகிறது ஆசிரியர் குழு. பிறகு என்ன நடக்கிறது. அந்த ஆவணங்களை வெளியிட்டதால் சந்திக்கும் பிரச்னைகள் என கதை நகர்கிறது. மெர்லின் ஸ்ட்ரீப், டாம் ஹாங்ஸ், சாரா பால்சன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி (The billboard outside ebbing missouri) :
பிளாக் காமெடி டிராமா படமான இதை மார்ட்டின் மேக்டோனா இயக்கியுள்ளார். பிரான்சிஸ் மேக்டார்மண்ட், வுடி ஹாரல்சன், சாம் ராக்வெல் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் கோல்டன் குளோப் விருதை வென்றிருக்கிறது. டிராமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளதால் ஆஸ்கரிலும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
கால் மி பை யுவர் நேம் (Call Me by Your Name):
ஆண்ட்ரே அசிமேனின் நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். அப்பாவுக்கும் மகனுக்குமான உறவுதான் கதை என்றாலும் திரைக்கதையை உணர்வு பூர்வமாக்கி இருக்கிறார்கள். லுகா குவாடங்னினோ இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆர்மி ஹம்மர், திமோதி சலாமத், மைக்கேல் உட்பட பலர் நடித்துள்ளனர்.