சிறப்புக் களம்

கே.சி பழனிசாமியின் நீக்கமும்... அதிமுக சொல்லும் உண்மையும்

கே.சி பழனிசாமியின் நீக்கமும்... அதிமுக சொல்லும் உண்மையும்

webteam

அதிமுக-வின் செய்தி தொடர்பாளர் கே.சி பழனிசாமியை அதிரடியாக நீக்கி அறிக்கை ஒன்றை நேற்று மாலை வெளியிட்டு உள்ளது அதிமுக தலைமை. இது அதிமுக-வில் மட்டுமல்லாது பல தரப்பிலும் விவாதத்தை உருவாக்கி உள்ளது .

வடிவேல் ஒரு படத்தில் ‘ அரசியல்ல இது எல்லாம் சாதாரணம்பா’ என்ற வசனம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ். அப்படிதான் ஒரு அரசியல் கட்சியில் ஒருவரை நீக்குவதும்.. ஓரு ஆண்டு, இரு ஆண்டுகள் கழித்து விளக்க கடிதம் கொடுத்தார்கள்; அது கட்சி தலைமையால் ஏற்றுக்கொள்ள பட்டுவிட்டது என மீண்டும் சேர்த்து கொள்வதையும் நாம் காலம் காலமாய் பார்த்து வருவதுதான். இதற்கு கடந்த கால உதாரணம் கூட பல உண்டு. ஏன் ஜெயலலிதா இருக்கும் வரை அமைச்சர்களே காலையில் எழுந்து இன்னைக்கு நமக்கு அமைச்சர் பதவி இருக்கிறதா ..? இல்ல இரவோடு இரவாக நீக்கீட்டாங்களா..? என்று தினமும் பார்க்கும் நிலையில்தான் பலர் இருந்தார்கள். எதற்கு அமைச்சர் பதவி பறிச்சாங்க, எதற்கு மீண்டும் கொடுத்தாங்க என இன்றுவரை தெரியாது. அவரவர்களின் யூகங்கலே அதற்கு பதிலாய் இருந்து வந்தது. ஆனால் இது ஜெயலலிதா இருக்கும் வரை..

அதற்கு பிறகு அரசியலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் இருக்கும் அமைச்சர்களையும், சட்ட மன்ற உறுப்பினர்களையும் இன்று எப்படி பாதுகாப்பது நாளை எப்படி பாதுகாப்பது என்ற எண்ணத்திலே அதிமுக தலைமை ஒவ்வொரு நாளையும் நகர்த்தி கொண்டு இருக்கிறது. அதற்காக அதிமுக-வில் யாரையும் நீக்கவே இல்லை என்று சொல்லவில்லை ! ஆம் நீக்கினார்கள்..... அப்படி நீக்கியவர்கள் எல்லாம் யார் ? அதிமுக-வில் இருந்து நேரடியாக தினகரனை ஆதரித்தவர்கள். ஆனால் இப்போது நீக்கி இருக்கும் கே.சி பழனிசாமி அதிமுகவின் ஒருகிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். பதவி பறிக்கபட்டு 'தர்மயுத்தம்' தொடங்கிய பன்னீருக்கு ஆதரவு கரம் நீட்டியவர்களில் கே.சி பழனிசாமியும், கே.பி முனுசாமியும் முக்கியமானவர்கள். அதன் பிறகே பொன்னையன், மதுசூதனன் ஆகியோர் அணிவகுத்தனர். அப்படி பன்னீரின் வலதுகையாகவும், சசிகலாவை எதிர்ப்பதில் முதன்மையானவருமாக இருந்த கே.சி பழனிசாமியின் அதிரடி நீக்கம் என்பது பல்வேறு கேள்விகளையும், இதுவரை யூகங்களாக பார்க்க பட்டவைகளுக்கு பதில் தருவது போலவும் இருக்கிறது.

நேற்று தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய கே.சி.பழனிசாமி நெறியாளரின் கேள்விக்கு பதில் தருகையில் ‘காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எதிர்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும்’ என்றார். அதுவே அதிமுக-வின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பளராக பங்கேற்கும் கடைசி விவாதம் என்பது அப்போது அவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

மாலையே கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை மீறி செயல்பட்டதாக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டார். அவரை நீக்குவது அதிமுகவின் கட்சி உள்விவகாரம்தான். ஆனால் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது, கே.சி.பழனிசாமியின் கருத்தை மட்டுமே. அப்படி அவர் என்ன தவறாக சொல்லிவிட்டார் ...? ஒரு அரசு என்பது மக்களுக்கான அரசாகதானே இருக்க வேண்டும். அதுவும் தமிழகத்தின் ஜீவாதார பிரச்னையில் மத்திய அரசுக்கான அழுத்தத்தை கொடுத்து அதைப் பெற்றால் என்ன தவறு..? அது அதிமுகவுக்கு தானே மக்களிடம் நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கும். அப்படியானால் மக்களின் நலனைவிடவும், அடுத்து வர போகிற தேர்தலை விடவும் இன்று ஆட்சியை தக்க வைக்க மத்திய அரசின் உதவி அவர்களுக்கு தேவைபடுகிறது என்பதை தானே இவையெல்லாம் காட்டுகிறது. சரி அவர் சொன்னது கட்சி கட்டுபாடுகளை மீறியதாக கூட இருந்துவிட்டு போகட்டும். இன்னும் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் விதித்த கெடு இரண்டு வாரம் இருக்கிறது; பொறுத்து இருந்து பார்போம், அவர் கூறியது அவருடைய தனிபட்ட கருத்து என்று கூட ஒரு சப்பைகட்டு கட்டி இருக்கலாம். 

ஆனால் அதையெல்லாம் விடுத்து எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியில் முக்கிய நபராக இருந்த ஒருவரை அதிரடியாக நீக்குவது என்பது யாரை குளிர்ச்சிபடுத்த..? இல்லை மத்திய அரசை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை கூட பேசிவிட கூடாது என்பதற்கான சமிக்கையா இது...? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை விடவும் மத்திய அரசை யாரும் எதிர்த்து பேசிவிட கூடாது என்பதைதானே இந்த நடவடிக்கை காட்டுகிறது. ஆனால் இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் குரல் எழுப்புவதுதான் உச்சபச்ச காமெடி. இது ‘நான் அடிப்பது போல் அடிப்பேன்; நீயும் அழுவது போல் அழ வேண்டும்’ என்பது போலதான் இருக்கிறது. உண்மையாகவே காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்புமானால், மத்திய அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருக்கும் அழுத்தத்தை கனகட்சிதமாக பயன் படுத்திகொள்ள பார்க்கலாம்.

 தற்போதைய சுழலில் எதிர்கட்சிகள் எல்லாம் மத்திய அரசுக்கு எதிராக ஒர் அணியில் திரலும் நிலையில், மக்களவையில் மத்திய அரசை ஆதரிக்கும் பெரிய கட்சிகள் என்றால் யாரும் இல்லை. இதையே ஒரு காரணமாக வைத்து கூட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம், ஏன் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே பிரதமரை எளிதாக சந்தித்த பன்னீர் செல்வத்தால் இப்போது இந்த பிரச்னைக்காக ஏன் சந்திக்க முடியவில்லை?. ஒரு வேலை அவர் சந்திக்க மறுத்தால் அதை மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்து அரசு மீது விழும் கலங்கத்தை துடைக்க முயற்சிக்கலாமே. 

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஜகவுக்கு பயந்துதான் ஓபிஎஸ்-இபிஎஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என கே.சி.பழனிசாமி நேரடியாகவே குற்றம்சாட்டியிருக்கிறார். அதோடு, நிர்ணயிக்கப்பட்ட 6 வார காலத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்துவிட்டால் அரசியல் வாழ்க்கையில் இருந்தே விலக தயார் என்றும் சவால் விடுத்திருக்கிறார். அப்படியானால் இருக்கிற  மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்ற கெடு முடிவதற்குள் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க போவது இல்லை என்பதை மறைமுகமாக சொல்ல வருகிறாரா என்பதற்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.