சிறப்புக் களம்

ஓபிசி திருத்த மசோதாவை ஒருமனதாக ஆதரித்த எதிர்க்கட்சிகள்... பின்புலம் என்ன?

ஓபிசி திருத்த மசோதாவை ஒருமனதாக ஆதரித்த எதிர்க்கட்சிகள்... பின்புலம் என்ன?

நிவேதா ஜெகராஜா

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தும் மசோதா திங்கள்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதா உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு காட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தங்களுடைய மாநிலத்திலேயே ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்த போதிலும், உச்ச நீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் அளித்த தீர்ப்பில் மகாராஷ்டிரா மாநிலம் அறிவித்த இடஒதுக்கீட்டை ரத்து செய்திருந்தது.

இதுகுறித்து சட்டத்தில் தெளிவு இல்லாததே உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு காரணம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆகவே மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தங்களுடைய ஓபிசி இடஒதுக்கீடு பட்டியலை இறுதி செய்வதற்கான அதிகாரம் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையிலேயே புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கட்கிழமையன்று தாக்கல் செய்தது.

இந்த மசோதா குறித்து ஏற்கெனவே மத்திய அரசு எதிர்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முன்வந்துள்ளன.

மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்திலிருந்தே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வரும் நிலையில், ஓபிசி மசோதாவுக்கு ஆதரவாக விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பின்னர், ஒருமனதாக அந்த மசோதாவை இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் உறுதி அளித்திருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டாலும், அவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கம் எழுப்பியதாலும் மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு நடந்ததாலும், விவாதம் நடைபெறவில்லை. ஆனால், அமளிக்கிடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமையன்றும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என முழக்கங்களை எழுப்பி, அவைகளை முடக்கினர். இரண்டு அவைகளிலும் பலமுறை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டாலும் பின்னர் மாநிலங்களவையில் பல முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திடீர் வாக்கெடுப்பு: தீர்ப்பாயங்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் "இந்த மசோதாவை கூட்டு நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்" என வலியுறுத்தினர். ஆனால், அரசு அதை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் "இந்த மசோதா மீது முழுமையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என வலியுறுத்தியதால், இந்தக் கூட்டத்தொடரில் முதல் முறையாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பத் தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. பின்னர் மசோதாவுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

திமுக உள்ளிட்டோர் வெளிநடப்பு: முன்தேதியிட்டு வரி வசூல் செய்யும் சட்டம் தொடர்பான மசோதாவையும் இன்று மாநிலங்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது. அதைத் தொடர்ந்து திமுக மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

அதேபோலவே மத்திய பல்கலைக்கழகங்களுக்கான சட்டம் தொடர்பான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெற்றது. திங்கள்கிழமை காலையிலேயே எதிர்கட்சிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பான விவாதத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் வேறு அலுவல்களுக்கு அனுமதியில்லை எனவும் முடிவு செய்த காரணத்தால், இரண்டு அவைகளும் மீண்டும் முடங்கின.

ஓபிசி பட்டியலை முடிவு செய்வதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உண்டு என்பதை தெளிவுபடுத்தும் மசோதா மட்டுமே விவாதத்திற்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்பது எனவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்ந்திருப்பதால், பிற அலுவல்கள் தொடர்ந்து இரு அவைகளிலும் எதிர்ப்பை சந்திக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்ரமணியம்