சிறப்புக் களம்

ஓராண்டில் ஆளுநர் சந்தித்த சவால்கள்: அரசியலின் போக்கை மாற்றிய முடிவுகள்

ஓராண்டில் ஆளுநர் சந்தித்த சவால்கள்: அரசியலின் போக்கை மாற்றிய முடிவுகள்

webteam

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பும், அடுத்தடுத்து பல திருப்பங்களும் அரங்கேறி வருகிறது. பரபரப்பான இந்த காலகட்டத்தில் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார். அவருடைய பதவிக் காலத்தில் அவர் எடுத்த பல முடிவுகள் தமிழக அரசியலின் போக்கையே மாற்றியுள்ளன.

மஹாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ள சி.எச்.வித்யாசாகர் ராவ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மும்பையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த வித்யாசாகர் ராவ், நேராக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது, மருத்துவர் பிரதாப் ரெட்டியுடன் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டுக்கே சென்று பார்த்தாகவும், அவருக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்‌ விளக்கியதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மீண்டும் அக்டோபர் 22ஆம் தேதி அவர் மருத்துவமனைக்கு சென்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். டிசம்பர் 5-ல் ஜெயலலிதா உயிரிழந்ததையடுத்து அன்றைய தினம் நள்ளிரவே ஓ.பன்னீர்செல்வத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சராக பதவி பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பின்னர் அதிமுகவிற்குள் ஏற்பட்ட உட்கட்சி அரசியலில் அதிமுகவின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக பிப்ரவரி 5ஆம் தேதி தேர்வு செய்யப்பட்ட சசிகலா ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க நேரம் கோரியிருந்தார். ஆனால் அவரை சந்திக்க பிப்ரவரி 9ஆம் தேதிதான் ஆளுநர் நேரம் ஒதுக்கிகொடுத்தார். எனினும் சசிகலாவை ஆட்சியமைக்க அழைக்கவில்லை. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வர வாய்ப்பு இருந்ததால் ஆளுநர் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் வித்யாசாகர் ராவ். அதிமுக இரண்டாக பிளவுபட்டு ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என தனித்தனியாக செயல்பட்டபோதும் உட்கட்சி பிரச்னை என மவுனம் காத்தார் ஆளுநர்.

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்து தனித்தனியே கடிதம் அளித்தனர். அதில் முதல்வரை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கு தொடர்ந்து வலியுறுத்தின. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் எம்எல்ஏக்களோடு செப்டம்பர் 10ஆம் தேதி ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தார். இதற்கிடையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து ஆகஸ்ட் 21ஆம் தேதி தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது முதல்வர் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் தன்பக்கம் இழுத்து கைகளை இணைத்து வைத்தார். இது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்த ஓராண்டில் பொறுப்பு ஆளுநராக இருந்த விதியாசாகர் ராவ் இன்றுடன் விடைபெறுகிறார்.