சிறப்புக் களம்

காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் தலைவராவது சாத்தியமா?

காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸின் தலைவராவது சாத்தியமா?

JustinDurai
காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை வகிக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம் என்று தெரிவித்துள்ளார், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
 
காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸின் தலைவராக வரவேண்டும் என்ற ராகுல்காந்தியின் கருத்துக்கு தானும் உடன்படுவதாக தெரிவித்துள்ளார் பிரியங்கா காந்தி. அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பிரியங்கா காந்தியின் இக்கருத்துக் குறித்து ஒருசிலரிடம் பேசினோம்.
 
கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூறுகையில், ‘’இது காந்தி/நேரு குடும்பத்தின் கருத்து. ஆனால் ஒரு காங்கிரஸ்காரியாக இக்கருத்துடன் நான் உடன்படவில்லை. காந்தி குடும்பத்தைப் போன்று நாட்டுக்காக, கட்சியாக தியாகச் செய்தவர்கள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள் வேறு எந்த கட்சியிலும் கிடையாது.
 
மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் பாஜகவுடன் அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார்கள் அல்லது பயந்து மவுனமாக இருக்கிறார்கள். ஆனால் இந்நேரத்தில் ராகுல்காந்தி மட்டுமே மத்திய பாஜக அரசை கடுமையாக எதிர்த்து, பின்வாங்காது உள்ளார். காந்தி குடும்பத்திற்கு பாஜக அரசு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தாலும் அத்தனையும் தாண்டி தேசத்திற்காக நிற்கும் மாறாத மனநிலை அவர்களிடமே உள்ளது.
 
கட்சியில் மோசமான தலைமை இருந்தால் அதை மாற்றுவது குறித்து யோசிக்கலாம். ஆனால் நல்லதொரு தலைமை, நேர்மையான தலைவர்கள், நாட்டுக்காக தியாகம் செய்யக்கூடிய/செய்த ஒரு குடும்பம் இருக்கும்போது அதை ஏன் மற்ற வேண்டும்?
 
காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சேராத தலைமை வரவேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதற்கான யோசனைகளை பாஜக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரப்பி வருகிறது.
 
பதவி, அதிகாரம் மீது ராகுல்காந்திக்கோ, பிரியங்கா காந்திக்கோ ஆசை இல்லை என்பது புரிகிறது. சோனியாகாந்தி பிரதமர் பதவியை உதறித்தள்ளியவர். ராகுல்காந்தியும் பிரதமர் பதவியை அடைய விரும்பியதில்லை.
 
அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் தலைமை வகிக்க வேண்டும் என்பது காந்தி குடும்பத்தினர் சொல்வது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் அது என்னைப் போன்ற காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஏற்புடையது அல்ல’’ என்றார் அவர்.
 
மூத்த பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம் கூறுகையில், ‘’நேரு குடும்பத்தைச் சாராதோர் காங்கிரஸ் தலைமை’ என்ற குரல் முன்பே ஒலித்தவவை தான். 1991 முதல் 1997 வரை இந்த முயற்சி நடந்துள்ளது.
 
நேரு குடும்பத்தின் மீது இந்தியாவில் ஒரு ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் கலைஞர் குடும்பத்தைச் சேராத ஒருவர் திமுகவின் தலைவராக வரமுடியுமா? அதுபோலவே நேரு குடும்பத்திற்கும் அத்தகைய நிலை பொருந்தும்.
 
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அந்த பாரம்பரியத்திலிருந்து தூர விலகி நிற்கும் கட்சி அரசியல் களத்தில் நிலைத்திருக்க முடியாது’’ என்கிறார் அவர்.