சிறப்புக் களம்

ஆன்லைனில் விளையாடும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள்: இதுக்கெல்லாம் முடிவே இல்லையா...?

subramani

சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு இளைப்பாறுதேலே பண்டிகை கால பயணங்கள்தான். குறிப்பாக தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர் நோக்கி பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து துறையில் முழுமையாக தன்னிறைவு அடையாத நமக்கு சொந்த ஊருக்குப் போவது நிலாவுக்கு போவதை விடவும் கடினமான காரியமாக மாறியிருக்கிறது.

தனியார் பேருந்து கட்டணங்களை நினைத்தாலே பகீர் என்கிறது. சாதாரண நாள்களில் 700ரூபாய் முதல் இருக்கும் ஆம்னி பேருந்து பயண கட்டணங்கள் பண்டிகை காலங்களில் ஆயிரத்தில் இருந்து 3000, 4000 ரூபாய் வரையிலும் கூட அதிகரிக்கிறது. இதற்கான காரணத்தை கேட்டால், “சாதாரண நாள்களில் பத்து பயணிகளுக்காக கூட பேருந்தை இயக்க வேண்டியிருக்கிறது. அது எங்களுக்கு இழப்பு. பண்டிகை காலங்களில் தாங்கள் நிர்ணயிக்கும் டிக்கெட் விலைதான் மற்ற நாளில் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்கிறது.” என்கின்றன சில தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள். ஆனால் இது நுகர்வோருக்கு எதிரான செயல் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

இந்த தனியார் ஆம்னி பேருந்துகளில் இடம்பிடிக்க 90 சதவிகிதம் பேர் பயன்படுத்துவது ஆன்லைன் ஆப்களையே. இதில் தொழில்நுட்பரீதியாக பலவிசயங்களை ஆம்னி நிறுவனங்கள் கண்காணிக்க முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு முறைக்கு இருமுறை ஒரு பயண தளத்திற்குள் நுழைத்து குறிப்பிட்ட ஊருக்கான கட்டண விவரங்களை சோதனை செய்து விட்டு வெளியேறினால், உங்களுக்கு கட்டாய பயண தேவை இருப்பதை பேருந்து சேவை வழங்கு நிறுவனங்கள் உறுதி செய்யும். அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து நீங்கள் அதே இணையத்துக்குள் நுழைந்தால் முன்பை விடவும் இருபது முப்பது ரூபாய் அதிகமாக காண்பிக்கும்.

இரண்டொரு முறை இது நிகழும் போது ‘அடடே இன்னும் தாமதித்தால் டிக்கட் விலை அதிகமாகும்’ என்ற உளவியல் நெருக்கடி உங்களுக்கு உருவாகும். நீங்கள் இணையம் காட்டும் விலைக்கு டிக்கெட்டை புக் செய்துவிடுவீர்கள். கூடவே Fast Filling என சிவப்பு நிறத்தில் உங்களுக்கு காண்பிப்பதன் மூலம், இருக்கும் டிக்கட்டுகள் சீக்கிரம் விற்பனையாகின்றன என்றும் உங்களுக்கு ஒரு நெருக்கடி கொடுக்கப்படும்.

உண்மையில் Fast Filling என்பது உண்மைதானா என்றால் பலசமயங்களில் இது ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. சமீபத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு டிக்கெட் புக் செய்திருந்த பயணிக்கு., பயண நேரத்திற்கு 3 மணி நேரம் முன்னதாக போன் செய்த பேருந்து ஆம்னி சேவை நிறுவனமானது “சார் நீங்க போக இருந்த பஸ்ல மொத்தமா ரெண்டு டிக்கட் தான் புக் ஆகியிருக்கு. நீங்க கொஞ்சம் டிக்கெட்ட கேன்சல் பண்ணிக்க முடியுமா...?” என கேட்டிருக்கிறார்கள். “நான் புக் செய்யும்போது ரெண்டு சீட்டுகள் தான் காலியாக இருந்ததாக காட்டியதே.” என பயணி கேட்டதற்கு முறையான பதில் இல்லை. ஆனால் அவர்களது நிறுவனத்தில் வேறு நேரத்தில் கிளம்பும் ஒரு பேருந்தில் இடம் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆறுதல். இப்படி எல்லாம் செய்யும் போது ஒரு பயணி தன் பயணத்தை எப்படி திட்டமிடமுடியும்...? என்பதே பயணிகள் பலரது கேள்வி.

சரி இப்போது விசயத்திற்கு வருவோம். இரண்டு சீட்டுகள் மட்டுமே புக் ஆன ஒரு பேருந்தில் எப்படி 90 சதவிகித சீட்டுகள் புக் செய்யப்பட்டதாக காண்பிக்கப்பட்டது...? அது தான் தொழில் நுட்பத்தின் வாயிலாக செயற்கையான டிமாண்ட் உருவாக்கும் யுத்தி. பேருந்து காலியாக இருப்பதாக காண்பித்தால் கடைசி நேரம் வரை டிக்கெட் விலை குறையட்டும் என பயணி காத்திருப்பார். இது ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் பயணிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் இடையே நடக்கும் ஆன்லைன் கேம். சூதாட்டம் போன்றது.

பயண சீட்டு விலை நிர்ணயம் மட்டும் இங்கு பிரச்னை அல்ல. ஆம்னி பேருந்து சேவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் நிறையவே உள்ளன. அதில் இன்னொன்றை பகிர்கிறோம். சென்னையிலிருந்து ஒருவர் மதுரைக்குப் போகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் மேலூரில் இறங்க வேண்டும் என்றால் வண்டி ஊருக்குள் போகாது எனச் சொல்லி பைபாஸில் இறக்கிவிட்டு விடுவார்கள். காரணம் உள்ளூருக்குள் நுழைந்து வெளியேரும் போது கூடுதலாக சில கிலோமீட்டர் தூரம் அதிகரிக்கும். டீசல் கொஞ்சம் அதிகமாக செலவாகும். இதனால் பயணிகளை பைபாஸில் இறக்கிவிட்டுவிடுவார்கள். இந்த பிரச்சனை தமிழகத்தின் பல வழித்தடங்களில் உள்ளன. தற்போது இந்த குறை கொஞ்சம் இணையதளம் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது என்றாலும். சில ஆம்னி பேருந்து நிறுவனங்கள் இடையில் இருக்கும் முக்கியமான ஊர்களுக்குள் செல்வதில்லை. இந்த சிக்கல் ஒரு பயணியை இறக்கிவிடும் போது மட்டுமே. பிக்அப் செய்யும் போது உங்கள் வீட்டு வாசலுக்கே கூட ஆம்னி பேருந்து வந்து நிற்கலாம்.

ஆம்னி பேருந்து கட்டணங்களை முறைபடுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், எழிலகத்தில் உள்ள போக்குவரத்துத் துறை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து கட்டணங்கள் ஏழைகளை பாதிக்காது என்று பேசியது பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஏழைகளை பாதிக்கும் விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவோம் என்பதா இதன் அர்த்தம்.

அமைச்சர் சொல்வது போல ஆம்னி பேருந்து கட்டணம் ஏழைகளை பாதிக்காது என வைத்துக் கொள்வோம். ஆனால் ஆம்னி பேருந்தி பயணம் செய்யும் எல்லோரும் பெரும் பணக்காரர்கள் இல்லையே. பெரும் பணக்காரர்களின் தேர்வு பெரும்பாலும் விமானமாகவோ கார் போன்ற சொந்த வாகனமாகவோ உள்ளது. இந்த ஆம்னி பேருந்து கட்டண விசயத்தில் பெரும்பாலும் பாதிப்புகளை சந்திப்பது நடுத்தர வர்க்க மக்களே.

பேருந்து கட்டண முறைப்படுத்தல் குறித்து அமைச்சரின் பதிலை ஒரு கோணத்தில் ஏற்பதாக இருந்தால், சமயத்திற்கு ஏற்ப ஆன்லைன் தொழில்நுட்பத்தை பயன் படுத்தி ஆம்னி பேருந்து நிறுவனங்கள் செயற்கையான டிமாண்டை உருவாக்குவதில்லை என உறுதிபடக் கூற முடியுமா...? இது ஏமாற்று வேலை இல்லையா...? இதனை அரசு எப்படி கண்காணிக்கப் போகிறது...? அதற்கென்று ஏதேனும் முறையான குழு உள்ளதா...?

GOIBIBO, Red Bus போன்ற இணையதளங்கள் பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்கள் அல்ல. பேருந்து சேவை வழங்கும் நிறுவனங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பன. தங்கள் இணையதளம் மூலம் விற்கப்படும் டிக்கட்டுகளுக்கு கமிசன் அடிப்படையில் லாபம் பெறுவன. எளிமையாகச் சொல்வதானால் நீங்கள் ஒரு காய்கறி வியாபாரி உங்களுக்கென்று சொந்தமாக கடை இல்லை என்று வைத்துக் கொள்வோம். சொந்த இடம் வைத்திருக்கும் ஒருவர் உங்களது காய்கறிகளை விற்க வசதியான இடம் தருகிறார். அதற்கென்று கட்டணங்களை அவர் பெறுகிறார். அதுபோலத்தான் இயங்குகின்றன இந்த இணையதளங்கள்.

இந்த பயண தளங்களோடு இணைந்து கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கென்று தனியாக Login, account வசதிகளை இணையதளங்கள் ஏற்படுத்தித்தரும். அதன் மூலம் ஆம்னி நிறுவனங்கள் தங்கள் பேருந்து சேவை, புறப்பாடு நேரம், டிக்கெட் விலை ஆகியனவற்றை பதிவு செய்துகொள்ளலாம். இதில் தங்களுக்கென்று அவர்களே கணிசமான சீட்டுகளை புக் செய்து கொண்டு தேவைப்படும் போது கேன்சல் செய்து சீட்டுகளை ரிலீஸ் செய்யமுடியும். இந்த தொழில்நுட்ப விளையாட்டுதான் ஆன்லைன் சூதாட்டம் போல தொடர்ந்து நிகழ்கிறது.

பயண இணைய தளங்கள், ஆம்னி பேருந்து நிறுவனங்கள், கடன் அட்டை வழங்கும் வங்கிகள் இவை மொத்தமாக இணைந்து சரியான நேரத்தில் பயணியின் பாக்கெட்டை பதம் பார்ப்பது தான் துயரம். இதை முறைபடுத்துவது எப்படி என்று அரசு சிந்திப்பதைவிட்டு விட்டு நடுத்தர மக்களுக்கு எதிராகவும் ஆம்னி நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் பேசுவது துன்பம்.

ரேஷன் பொருள்களைப் போல பயணம் என்பதும் ரொம்பவே அத்தியாவசியமான ஒன்று. மில்லியன்களில் சம்பாதிக்க முடியும் எனத் தெரிந்தும் அரசு ஏன் தனக்கென்று மென்பொருள் நிறுவனங்களை உருவாக்கிக் கொள்ளவில்லை. லட்சக்கணக்கான மென்பொறியாளர்களை கொண்டுள்ளது தமிழகம். இந்த அறிவு வளத்தை முறைப்படுத்தினால் ஒரு சர்வதேச மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க இயலாதா...? துயரம் என்னவென்றால் அரசின் பல இணையதளங்களை டெவலப் செய்வதும் நிர்வகிப்பதும் தனியார் மென்பொருள் நிறுவனங்களே.

டாஸ்மாக்கை மூடுவது அல்லது கட்டுப்படுத்துவது குறித்த விமர்சனங்கள் எழும் போதெல்லாம், வருமான இழப்பு குறித்து மறைமுகமாக அறிவுத்தும் சில அரசியல்வாதிகளுக்கு மென்பொருள் நிறுவனங்கள் மூலம் ஈட்ட முடிந்த வருமானத்தை விட டாஸ்மாக் வருமானம் பெரிதல்ல என்பது தெரியாமல் இல்லை. இப்படி மென்பொருள் மற்றும் இணைய சேவைத் துறையில் அரசு இறங்கும் போது மில்லியன் கணக்கில் வருமானம்., பொறியாளர்களுக்கு அரசு வேலை ஆகியன கிடைக்கும். கூடவே பொதுமக்களுக்கு நேரடியா சேவை வழங்கும் தனியார் இணையதளங்கள் சில செய்யும் மோசடியும் தடுக்கப்படும்.

படியிலயே நிக்காம மேல ஏறி வாங்க பாஸ்...!

சத்யா சுப்ரமணி