கேமரா கண்டுபிடிக்கப்பட்ட போது அதன் முன் நிற்கவே பயந்த நாட்கள் உண்டு; இன்னும் சிலர் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்றார்கள். சிலர் கேமராவை பார்த்தாலே ஓடி விடுவார்கள். ஆனால் அதன் பின்பு புகைப்படங்களை பார்க்க பார்க்க, கேமரா பார்த்தாலே அட்டேன்ஷனில் நிற்க ஆரம்பித்தவர்கள் எல்லாம் உண்டு. மதராசப்பட்டிணம் படம் பார்த்தவர்களுக்கு இது ஞாபகம் இருக்கலாம்.
இப்படி வாழ்வின் முக்கிய அங்கமாக முழுமையாக மாறிப் போயிருப்பதுதான் புகைப்படங்கள். குழந்தைக்கு பெயர் வைத்தல், காதணி விழா, திருமணம், பிறந்தநாள் விழா, சுற்றுலா, கூடும் பொழுதுகள் என எந்த நிகழ்விலும் புகைப்படம் எடுப்பதற்கென்றே ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். புகைப்படக்காரர் இல்லாத எந்த நிகழ்வையும் பார்க்க முடியாது. இப்போது இறப்பு நிகழ்வுகளும் கூட புகைப்படமாகிவிட்டது.
எல்லாவற்றையும் புகைப்படம் எடுக்கும் நாம், குழந்தை பிறப்பை ஏன் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என யோசித்தார் ஒரு புகைப்படக்காரர். அதன் விளைவு பல நாடுகளில் இப்போது பிறப்பின் நிகழ்வு புகைப்படங்கள் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் ஒரு தாய், அறுவை சிகிச்சை செய்த இடத்திற்கு அருகே தனது குழந்தையைக் கிடத்தி எடுத்த புகைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம். உலக அளவில் மிகப்பெரிய அளவில் அந்தப் புகைப்படம் பேசு பொருளானது.
இந்நிலையில், நாகரிகத்திற்கு தங்களை உட்படுத்திக் கொண்டாலும் மிகுந்த நாணத்தோடு இன்னும் பயணிக்கிற, இந்திய பெண்களிடம் இது சாத்தியமா ? சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார் ஒரு புகைப்படக்காரர். இப்போது இந்தியாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் “பிறப்பு புகைப்படங்கள்”. ஒரு தாய் மகப்பேறு அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதில் இருந்து, குழந்தையை வெளியே எடுத்தல் அல்லது குழந்தை பிறத்தல், தொப்புள் கொடியை நீக்குதல், கிளிப் மாட்டி குழந்தையை கிடத்துதல் , தாயின் மார்பில் கிடைக்கும் அரவணைப்பு இப்படி பலவற்றை புகைப்படமாக்கும் போட்டோகிராஃபிக்கு பெயர் “பர்த் போட்டோகிராஃபி”.
''மாயன்'' இந்தியாவில் பிறப்பு புகைப்படங்களை அதிக அளவில் எடுத்து வரும் நபர். அவரிடம் பேசியபோது இந்தியாவில் இதை சாத்தியப்படுத்தியது குறித்து நிறைய பகிர்ந்து கொண்டார். மற்ற நாடுகளை போல, இந்தியாவில் பிறப்பு புகைப்படங்களை எடுப்பது எளிதில் சாத்தியமாகவில்லை , முதலில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் சம்மதம் அவசியம், அடுத்து மருத்துவமனை. இவர்கள் இருவரும் சம்மதித்தால் மட்டுமே இதனை சாத்தியப்படுத்த முடியும் என்றார் மாயன்.
இது தொடர்பாக மாயன் அணுகி, புகைப்படம் எடுக்க சம்மதம் தெரிவித்தவர் ப்ரியங்கா மெகன். தன்னுடைய 2வது குழந்தையின் பிறப்பை முழுமையான ஆவணமாக மாற்ற எண்ணினார் ப்ரியங்கா. மாயனின் ஐடியா அவரை முழுமையாக கவர்ந்தது. ஒரு தனியார் மருத்துவமனையும் சில கட்டுப்பாடுகளோடு இதனை ஏற்றுக் கொண்டது. ஆனால், மாயனுக்கு இன்னும் சில கட்டுப்பாடுகளை விதித்தார் ப்ரியங்கா. குழந்தையை மருத்துவர் தனது கையில் ஏந்தும் போது மட்டுமே முதல் புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்றார். மாயனும் இதனை ஒத்துக் கொண்டார்.
தனது கட்டுப்பாட்டை மகப்பேறு அறைக்கு கொண்டு சென்ற அடுத்த நிமிடம் தளர்த்தினார் பிரியங்கா. அவர் சொன்ன காரணம் அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. இத்தனை ஆண் மருத்துவர்கள், ஆண் உதவியாளர்கள் சேர்ந்து எனக்கு மகப்பேறு பார்க்கும் போது , எந்த விதமான வேறு எண்ணமும் இல்லாமல், என்னை தாய்மை எண்ணம் கொண்டே பார்க்கும் நிகழ்வே பிறப்பு. அத்தகைய சூழலில் எந்த ஆணின் மனமும் ஒரு தாயை தவறாக பார்க்க நினைக்காது; புகைப்படம் எடுக்கும் மாயனும் அவ்வாறே இருப்பார். எனவே பிறப்புறுப்பில் இருந்து குழந்தை வருவதை மாயன் புகைப்படம் எடுக்கலாம் என்றார்.
இப்படித்தான் தனது முதல் பிறப்பு புகைப்பட ப்ராஜெக்டை முடித்தார் மாயன். ஆனால் அதற்கு பின்னும் மற்ற பெண்கள் எளிதில் அனைத்திற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. பலர் நிபந்தனைகளோடே அனுமதித்தனர். சிலர் முழுமையாக ஏற்றுக் கொண்டனர். இப்போது அதிக அளவில் பிறப்பு புகைப்படங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்படுகின்றன. சில மருத்துவமனைகளே இதனை பெற்றோருக்கு தெரியப்படுத்துகின்றன. ஆக, தாயில் வயிற்றில் இருந்து வெளியே வரும் நிகழ்வு முதல் உயிர் பிரிந்து இறுதி நிகழ்வுகள் நடைபெறும் வரை புகைப்படங்கள் மனிதனை ஆக்கிரமிக்க போகிறது.
Source : Hindustan Times