சிறப்புக் களம்

வடகொரிய ஆட்சிக்கட்டிலில் முதன்முறையாக பெண் வாரிசு? மகளை வாரிசாக்கப்போகிறார் அதிபர் கிம்?

webteam

வடகொரியாவில் அடுத்த அதிபராய் கிம் ஜாங் உன்னின் மகள் வர இருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

வல்லரசு நாடான அமெரிக்காவுக்கே அடிக்கடி கிலி ஏற்படுத்தும் நாடாக இருக்கிறது, வடகொரியா. அமெரிக்கா மட்டுமல்ல, அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதே பயம்தான் உள்ளது. ’பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல’ என்று நடிகர் ரஜினி சொல்வதுபோல, வடகொரியா பேரைக் கேட்டாலே அந்த நாடுகளுக்கு நடுக்கம்தான் ஏற்படுகிறது.

காரணம், அது எந்த நேரத்தில் என்ன செய்யும் எனத் தெரியாததுதான். அந்நாட்டின் ரகசியங்கள் மற்ற நாடுகளைப் போன்று உடனே வெளியில் தெரிவதில்லை. அப்படியான கொடூர கட்டுப்பாடுகளைத் தன் குடிமக்களுக்கு விதித்துள்ளது வடகொரியா.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு (2022) இறுதியில் மட்டும் தொடர்ந்து பல ஏவுகணைகளை ஏவி அண்டை நாடுகளை அச்சுறுத்தியது வடகொரியா. பொருளாதாரத் தடையால் வடகொரியா சரிவைச் சந்திக்கும்வேளையிலும், அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் அணுஆயுத தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்திவருகிறது.

இந்தச் சூழலில்தான் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்குப் பிறகு அந்நாட்டை யார் வழிநடத்துவார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கான முயற்சியில் கிம் ஜாங் உன்னின் மகள் செயல்பட இருப்பதாகவும் அந்நாட்டு உளவுத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது குடும்ப உறுப்பினர்கள் விவகாரத்தில் இறுக்கத்தை கடைப்பிடிக்கும் கிம் ஜாங் உன், கடந்த ஆண்டு (2022) நவம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற ஏவுகணை சோதனையின்போது தனது மகளை அழைத்து வந்துள்ளார். கிம்முக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும் அதில் மூத்தவர் மகன் என்றும், இளையவர் மகள் என்றும் சொல்லப்படுகிறது. இதில் இரண்டாவது குழந்தையான சூ-ஏவைத்தான் கிம் அழைத்துவந்து ராணுவத் தளவாடங்களைப் பார்வையிட வைத்துள்ளார்.

இதுகுறித்த படங்களை வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சூ-ஏ, கிம்மின் மகள்தான் என்பதை தென்கொரியாவின் தேசிய புலனாய்வு நிறுவனமும் ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. கிம் முதல்முறையாக, தனது குழந்தைகளில் ஒருவரை பகீரங்கமாக வெளியில் அழைத்து வந்தது இதுதான் முதல்முறை. இதையடுத்துத்தான் கிம்முக்குப்பிறகு அவரது மகள் சூ-ஏ வாரிசாக வரலாம் என யூகங்கள் கிளம்பியுள்ளன.

கிம்முக்கு முன்பு அவரது தாத்தாவும், தந்தையும் பதவியில் இருந்தனர். தற்போது அவர் அதிபராக இருக்கிறார். இதனால் அடுத்த அதிபர் பதவியில் மகனைவிட மகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து ஆண் வாரிசு பதவியில் இருப்பதால், மக்கள் வெறுப்பில் இருப்பதாலும், அதை மாற்றும் வண்ணம்தான் தன் மகளை அவர் இந்தப் பதவிக்குக் கொண்டுவர இருப்பதாகவும் அந்நாட்டு உளவுத் துறை செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக சூ-ஏவை, அவர் பொது நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம்தான் இந்தப் பேச்சு கசியத் தொடங்கியிருக்கிறது.

வடகொரியாவைப் பொறுத்தவரை அனைத்து தலைமைப் பொறுப்புகளையும் ஆண்களே வகித்து வந்தாலும், சில பெண்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சோன் ஹுய் மற்றும் வெளியுறவு செய்தியாளர் ரி சுன் - ஹீ ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். அதுபோல், கிம்மின் சகோதரியான கிம் யோ-ஜாங்கும் அந்நாட்டின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இவர்கள் அனைவரும் சமீபகாலமாக தென்கொரியாவுக்கு எதிராகச் செயல்பட்ட வடகொரியாவின் வீரப்பெண்மணிகளாகக் கருதப்படுகின்றனர்.

இந்த நம்பிக்கையில்தான் கிம் ஜாங் உன், தன் மகளை அடுத்த அதிபர் பதவிக்குக் கொண்டுவரலாம் எனவும், தனது தந்தை செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கிம் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில்தான், கிம் தன் மகளைச் சமீபகாலமாக வெளியுலகுக்கு அழைத்து வருகிறார் என வடகொரியா நாட்டு யூகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

“வடகொரியாவின் அடுத்த அதிபர் சூ-ஏதான் என்பதை அந்நாட்டு மக்களுக்கு நினைவூட்டும் வகையிலேயே, கிம் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்திருக்கலாம். இது அவருடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக்கூட இருக்கலாம்” எனவும் செஜாங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள கிம் குடும்பத்தின் நீண்டகால ஆராய்ச்சியாளரான சியோங் சியோங்-சாங் கூறியுள்ளார்.

சமீபத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இறந்துபோனதாகவும் செய்திகள் பரவின. அந்தச் சமயத்தில் கிம் குறித்த எந்த செய்திகளையும் வடகொரியா ஊடகம் உறுதிப்படுத்தவில்லை. கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களுக்குப் பிறகே அவர் மீண்டும் அரசுப் பணியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. அப்போது அவருக்கு, என்ன ஆயிற்று, இத்தனை நாட்கள் ஏன் அவர் தலைமறைவாக இருந்தார் என்பது குறித்த எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான், வடகொரியாவின் அடுத்த வாரிசாய் தன் மகளை இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், கிம். என்ன நடக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

- ஜெ.பிரகாஷ்