எம்.ஜி.ஆர். - சிவாஜி AI
சிறப்புக் களம்

நிறம் மாறும் சினிமா 18 | எல்லா சினிமாக்களும் ஆண் சினிமாக்களே!

இப்படிப்பட்ட திமிர் பிடித்த, படித்த பெண்களை அடக்கி, அவர்களுக்குக் 'கலாசாரத்தின் பெருமை'யை உணர்த்தும் 'பெரும்பொறுப்பு' எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இருந்தது.

சுகுணா திவாகர்

வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் வடிவமும் உள்ளடக்கங்களும் மாறியிருக்கின்றன. ஆனால் வைதீக சினிமாக்கள், திராவிட சினிமாக்கள், நிலப்பிரபுத்துவ சினிமாக்கள், இந்துத்துவ சினிமாக்கள், தலித் சினிமாக்கள் என்று சினிமாக்கள் மாறிவந்தாலும் அவை பெரும்பாலும் ஆண்களின் சினிமாக்களாக, ஆண்மைய சினிமாக்களாகவே இருக்கின்றன என்பது ஒரு வருந்தத்தக்க உண்மை.

'கீசக வதம்' - தமிழில் வெளியான முதல் மௌனப்படம். 1917ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு 1918ஆம் ஆண்டு வெளியானது. நடிகைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் பங்களித்தவர்கள் என்று ஒரு பட்டியலிட்டால் டி.பி.ராஜலெட்சுமி, பானுமதி, ஒளிப்பதிவாளர் விஜயலெட்சுமி, இயக்குநர்கள் ஜெயதேவி, (புஷ்கர்) காயத்ரி, மதுமிதா, நந்தினி, சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ரெஹானா, நடன அமைப்பாளர்கள் புலியூர் சரோஜா, பிருந்தா, கலா மாஸ்டர், பாடலாசிரியர்கள் தாமரை, குட்டிரேவதி, கு.உமாதேவி என்று நினைவுக்கு வரும் பெயர்கள் நூறைத்தாண்டாது. நூற்றாண்டைத் தாண்டிய தமிழ் சினிமாவில் இது வெகு வெகு சொற்பம்.

சினிமாவுக்கு முந்தைய நாடக யுகத்தில் பெண்கள் நடிக்க வருவதே அரிதாக இருந்தது. நாடகங்களில் நடிப்பது இழிவானது, ஒழுக்கக்கேடு என்ற எண்ணத்தால் பெண்கள் நடிக்க முன்வராத சூழலில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தது ‘ஸ்திரீபார்ட்’ என்றழைக்கப்பட்டது. சிவாஜி கணேசன் உள்ளிட்ட நடிகர்கள் ஸ்திரீபார்ட் வேடமேற்றவர்களே. சினிமா தொடங்கிய காலத்துக்குப் பின் நடிகைகள் உருவானாலும் அவர்கள் நடிகர்களைவிட கீழானவர்களே நடத்தப்படுகின்றனர். ஓர் உச்ச நடிகையின் சம்பளம் என்பது, டாப் 10 தமிழ் சினிமா நடிகர்களில் 5வது நடிகரின் சம்பளத்துக்கு இணையானது அல்லது அதைவிட குறைவானது. மேலும் பொதுவெளியில் படப்பிடிப்பு நடைபெறும்போது உடைமாற்றுவதில் சிரமம்  முதல் பாலியல் மீறல்கள் வரை நடிகைகள் பல நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. இப்படி நடிகைகளுக்கே தமிழ் சினிமாவில் சமத்துவம் கிடைக்காதபோது, திரைப்படங்களில் பெண்கள் குறித்த சித்திரிப்புகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

கருப்பு – வெள்ளை காலகட்ட திரைப்படங்களில் 'லேடீஸ் கிளப்' என்பது திமிர் கொண்ட, கணவனை மதிக்காத பெண்கள் கூடிப்பேசும் இடமாகவும் அவர்களது அடையாளமாக நவநாகரிக உடைகளும் ஹேண்ட் பேக்கும் சித்தரிக்கப்பட்டன.  குறிப்பாக, திமிர் பிடித்த பெண்களுக்கான அடையாளமாக தமிழ் சினிமாக்களில் ‘ஹேண்ட்பேக்’ சித்திரிக்கப்பட்டது. காலங்காலமாக செல்வமும் தனிச்சொத்தும் ஆண்களின் உடைமைகளாக இருந்தபோது,பெண்கள் வசம் வந்த ஹேண்ட்பேக், அந்த அதிகாரப் படிநிலையைக் குலைக்கும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.

இப்படிப்பட்ட திமிர் பிடித்த, படித்த பெண்களை அடக்கி, அவர்களுக்குக் 'கலாசாரத்தின் பெருமை'யை உணர்த்தும் 'பெரும்பொறுப்பு' எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இருந்தது. பின்னாட்களில் 'தம்பிக்கு எந்த ஊரு' தொடங்கிப் 'படையப்பா' வரை இந்தக் 'கடமை'யைச் செவ்வனே ரஜினிகாந்த் நிறைவேற்றினார். எம்.ஜி.ஆரைப் போலவே 'பெண்களில் எத்தனைவகையுண்டு', 'பெண்கள் எப்படி இருக்கவேண்டும்' என்பதுமாதிரியான வரையறைகளையும் அவர் போதித்தார். 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களில் திமிர்  பிடித்த, படித்த பெண்களை அடக்கும் 'கடமை'யைக் கமல்ஹாசன் செய்தாலும் அதை அவர் நீண்டகாலத்துக்குத் தொடரவில்லை. ஆனால் வெவ்வேறுகாலகட்டங்களில் வெவ்வேறு நாயகர்கள், 'திமிர் பிடித்த பெண்ணை அடக்குவது' என்ற 'கடமை'யைத் தொடரவே செய்தனர்.

படித்த, நாகரிக உடைகள் அணிந்த, சுயச்சார்புள்ள, தானாகவே முடிவெடுக்கும் பெண்கள் எப்போதுமே தமிழ் சினிமாக்களில் இடையூறாகவே பார்க்கப்பட்டனர். தாய்ப்பாசம், காதல், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், குடும்ப உறவின் மேன்மை, தேசபக்தி, கலாசார விழுமியங்கள் என்று பல்வேறு அடிப்படைகளை முன்வைத்து எடுக்கப்பட்ட பெரும்பாலான படங்களிலும் ஆண்களே சுயேச்சையாக செயல்படுபவர்களாகவும் பெண்கள் ஆணைச் சார்ந்திருப்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டார்கள். இதற்குச் சீர்திருத்த, முற்போக்கு, தமிழ்ப்பற்றுப் படங்களும்கூட விதிவிலக்கல்ல. 

நீண்டகாலம்வரை வில்லனிடம் சிக்கிக்கொண்ட நாயகிகளும் நாயகனின் தங்கைகளும் ஓர் ஆண்வந்து காப்பாற்றுவதற்காகவே காத்திருந்தனர், ஆண் வந்து மீட்கவேண்டும் என்பதற்காகவே கூக்குரலிட்டு அலறினர், பிறகு தங்களைக் காப்பாற்றிய ஆண்களுக்காகத் தங்களை அர்ப்பணித்தனர். எம்.ஜி.ஆர் காலந்தொட்டு சமீபகாலம்வரை ஆண்கள் மீட்பர்களாகவும் பெண்கள் சார்ந்து வாழ்பவர்களாகவுமே சித்தரிக்கப்பட்டனர்.

தமிழ் சினிமா டூயட் பாடல்களைக் கவனித்தாலும் நமக்கு ஓர் உண்மை விளங்கும். 

பெரும்பாலான டூயட் பாடல்களில் நாயகன், நாயகியைப் பாலுறவுக்கு அழைப்பான்; 'எல்லாம் திருமணத்துக்கு அப்புறம்தான்' என்பாள் நாயகி. ஆயிரக்கணக்கான தமிழ் சினிமா டூயட் பாடல்களை இந்த வகைக்குள் அடக்கமுடியும். எப்படியோ, திருமணம் என்னும் புனித ஏற்பாட்டையும் குடும்பம் என்னும் மகத்தான அமைப்பையும் சீர்குலைக்கத் துடிக்கும் ஆண்களை மட்டுப்படுத்தி, புனித நிறுவனங்களை மீட்டெடுக்கும் 'பெரும் பொறுப்பு' பெண்களுக்குத்தான் இருந்தது.

அதேபோல் நவநாகரிக உடைகள் அணிந்த, திமிர் பிடித்த பெண்களை நாயகர்கள் அடக்கி காதல் வசப்படுத்திய மறுகணம் அவர்கள் தழைய தழைய புடவை அணிந்து, தலைநிறைய பூச்சூடிக்கொள்வார்கள். 80களின் டூயட் காட்சிகளைக் கவனித்தால் பட்டப்பகலில் மொட்டைப்பாறையில் நாயகன் ஷூ அணிந்து நடனம் ஆடுவார். நாயகியோ கொதிக்கும் வெயிலில் காலில் செருப்புகூட அணியாமல் ஆடிக்கொண்டிருப்பார்.

நமது நூற்றாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பாலான சினிமாக்களில் பெண்களின் சித்தரிப்பு என்பது இப்படியாகத்தான் அமைந்தது. பாலச்சந்தர், பாரதிராஜா  போன்ற இயக்குநர்கள் பாரதியாரை ஆதர்சமாகக் கொண்டு சில படங்களை எடுத்தார்கள். 'புதுமைப்பெண்', 'மனதில் உறுதி வேண்டும்' என்று படங்களின் தலைப்பும் பாரதியின் அடையாளங்களைத் தாங்கியிருந்தன. சாதி, மதம், குடும்பம், தேசியம் போன்ற பல்வேறு நிறுவனங்களையும் பெண்ணிய நோக்கில் கேள்விக்குட்படுத்திய பெரியாரைத் தங்கள் 'பெண்ணிய'ப் படங்களில் தவிர்த்த இருவரும் மதம், பழமைவாதப் பண்பாடு ஆகிய வரம்புகளுக்குள் பெண்களின் உரிமைகளைப் பேசிய பாரதியாரைத் தங்கள் கருத்தியல் முன்னோடியாக முன்வைத்தனர். அந்தப் படங்களும்கூட இதே சிக்கல்களுடன் மதம், குடும்பம் போன்ற பழமைவாத அமைப்புகளைக் காப்பாற்றுவதாகவே முடிந்தது.

இத்தகைய அரைவேக்காட்டுப் பெண்ணியப் படங்களைவிட பாரதிராஜாவின் 'கருத்தம்மா' முக்கியமான பெண் சினிமா எனலாம். பாலச்சந்தரின் படங்கள் உயர்சாதி, மேட்டுக்குடி மற்றும் நடுத்தரவர்க்க மதிப்பீடுகளையே பிரதிபலித்துக்கொண்டிருந்தபோது 'கருத்தம்மா' பெண்சிசுக்கொலை என்ற அசலான பிரச்னையை எடுத்து, கிராமத்துப்பெண்ணியப் பார்வையில் பேசியது. பாலச்சந்தரின் மற்ற படங்களோடு ஒப்பிடும்போது அவரது 'தண்ணீர் தண்ணீர்' ஓரளவு இயல்போடு பெண்ணை மையப்படுத்திய சினிமா என்று சொல்லலாம். ருத்ரய்யாவின் 'அவள் அப்படித்தான்' படமே இன்றளவும் முக்கியமான பெண்ணிய சினிமாவாகப் பலராலும் நினைவுகூரப்படுகிறது. பழமைவாதச் சிந்தனைகளை மட்டுமல்லாது பாசாங்கான நவீனச் சிந்தனைகளையும் அது கேள்விக்குட்படுத்தியது.

பாலுமகேந்திரா

பாலுமகேந்திராவின் படங்கள் கலையம்சத்தில் முக்கியமான நகர்வு என்றாலும் ஆண்களின் பிரச்னைகளையே பேசியவை அவரது சினிமாக்கள். 'மறுபடியும்' படம் மட்டுமே 'தனித்து வாழும் பெண்' என்ற கருத்தாக்கத்தை முன்வைத்த, பாலுமகேந்திராவின் ஒரே சினிமா என்றாலும் முக்கியமான தமிழ் சினிமா. பாலுமகேந்திராவுடன் ஒப்பிடும்போது மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’, ‘மெட்டி’ போன்ற திரைப்படங்கள் ஓரளவு ஆண்மையப் பார்வைகளைத்  தளர்த்திக்கொண்ட சினிமாக்கள் என்று சொல்லலாம்.

சாதிப்பெயர்களை டைட்டிலாகக் கொண்டு சாதிப்பெருமிதங்களை முன்வைத்து டஜன் கணக்கில் சினிமாக்கள் வந்த காலம் தமிழ் சினிமாவின் இருண்டகாலம். சாதியமும் ஆணாதிக்கமும் எப்போதும் நேர்விகிதத் தொடர்புடையது என்பதை நிரூபிப்பதைப் போலவே இந்த சாதிய சினிமாக்களில் பெண்கள் அடிமைகளாகவே சித்தரிக்கப்பட்டனர். 

சாதியத்தின் அத்தனை தீங்கான மதிப்பீடுகளையும் கட்டிக் காப்பாற்றுபவர்களாக இந்த சினிமாப்பெண்கள் இருந்தார்கள். பெரும்பான்மை மதவாத சினிமாக்கள், இட ஒதுக்கீடு என்னும் சமூகநீதிக் கொள்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட சினிமாக்கள், சிறுபான்மையினரைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்த சினிமாக்கள், என்கவுண்டர் சினிமாக்கள் என எல்லாப் பிற்போக்கு சினிமாக்களும் அடிப்படையில் ஆணாதிக்க சினிமாக்களாகவே இருந்தன என்பதை நாம் உணர்ந்துகொள்ளலாம்.

பெண்களுக்கு ஓரளவாவது இடம் தந்த சினிமாக்கள் என்று அம்மன் சினிமாக்கள், பேய்ப்படங்கள், பாம்பு படங்கள் ஆகியவற்றைக் கூறலாம். அம்மன் சினிமாக்கள் என்பவை மூடநம்பிக்கையை வலியுறுத்தக்கூடிய சினிமாக்களாகத்தான் இருந்தன என்றாலும் அவை குடும்பத்துக்குள் ஒடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் பக்கம் நிற்கும் அம்மனைச் சித்திரிக்கும் சினிமாக்களாக இருந்தன என்பது கவனிக்கத்தக்கது.

தன்னைக் கொலை செய்த, அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய ஆணைப் பழிவாங்க தமிழ் சினிமாவில் பெண்கள் பேய்களாகவும் பாம்புகளாகவும் மாறவேண்டியிருந்தது. மற்ற சினிமாக்களில் எல்லாம் அவர்களுக்கும் சேர்த்துப் பழிவாங்கும் பணியை ஆண்களே மேற்கொண்டதால் அவர்கள் பேய்களாகவும் பாம்புகளாகவும் மாறித்தான் ‘விடுதலை’ அடைய முடிந்தது. ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ போன்ற பெண் போலீஸ் சினிமாக்கள் பெண்களை ஆக்‌ஷன் ஹீரோயின்களாக மாற்றின என்றாலும் அவை வழக்கமான ஆக்‌ஷன் கமர்சியல் மசாலா படங்களின் பெண் பதிப்புகளாக இருந்தனவே தவிர, பெண்களின் அசல் பிரச்சினைகளைப் பேசவில்லை. பாரா பணிகளில் ஈடுபடும் பெண் காவலர்கள் சிறுநீர் கழிக்கக்கூட இயலாத நிலையைச் சித்திரித்து, சுரேஷ் காமாட்சி இயக்கி, 2019ல் வெளியான ‘மிக மிக அவசரம்’ என்னும் திரைப்படம் ஒப்பீட்டளவில் ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ போன்ற படங்களைவிட மேலானவை என்று சொல்லலாம்.

2000க்குப் பின்னான தமிழ் சினிமாக்களின் நிறமும் முகமும் மாறியிருக்கிறது. புதிய பணிவாய்ப்புகள், பொருளாதார உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பெண்கள் அதிகமும் படிக்கவும் வேலைக்குச் செல்லவும் ஏற்பட்ட நிலை, மேற்கத்தியக் கலாசாரம் நமது அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்கள், காட்சி ஊடகங்களின் பெருக்கம் என்று பல்வேறு விஷயங்கள் தமிழ் சினிமாக்களிலும் பிரதிபலிக்கத் தொடங்குகின்றன. கட்டுப்பெட்டித்தனமாகப் பெண்களைக் காட்டுவது என்பதுபோய் பெண்கள் ஓரளவுக்குச் சுதந்திரமுள்ளவர்களாகவும் சுயச்சார்புள்ளவர்களாகவும் காட்டப்படுகின்றனர். குஷ்பு 'திருமணத்துக்கு முன்பான பாலுறவு' பற்றிப் பேசிவிட்டார் என்பதற்காகப் போராட்டம் நடந்த தமிழ்மண்ணில்தான் திருமணத்துக்கு முன்பான பாலுறவைக் காட்சிப்படுத்திய '7ஜி ரெயின்போ காலனி' வெற்றிகரமாக ஓடியது. பெண்கள் ஆண்களை அழைக்கும் முறை, பழகும் முறை, குடிப்பது, சிகரெட் குடிப்பது, ஏ ஜோக் அடிப்பது, பாலியல்ரீதியிலான விஷயங்களையும் பகிர்ந்துகொள்வது என பெண்கள் குறித்த சித்தரிப்புகள் ரொம்பவே மாறியிருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி', ராமின்  'தரமணி' போன்ற சினிமாக்கள் ஆண்களை மையப்படுத்திய, ஆண்களின் கதைகளைப் பேசும் சினிமாக்களாக இருந்தாலும் பெண்களின் பிரச்னைகளைக் கவனத்தில் எடுத்த சினிமாக்களாகவும் இருந்தன. சாதி ஒழிப்பையும் ஆணாதிக்க எதிர்ப்பையும் இணைத்துக் கருத்தியல் தெளிவோடு வந்த படம் பிரம்மா இயக்கிய 'மகளிர் மட்டும்' (2017).  குடும்பச் சிறைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால், எப்படிப்பட்ட விடுதலை வெளி விரிந்திருக்கிறது என்பதை அரசியலையும் கலையையும் இணைத்து பேசிய திரைப்படம் அது.

தலித் சினிமாக்களின் காலகட்டத்தில் அந்த திரைப்படங்களின் பெண்கள் ஒப்பீட்டளவில் அதற்கு முந்தைய திரைப்படங்களைவிட சுயச்சார்புள்ள பெண்களாக, ஆண்களைவிட ஆளுமை கொண்டவர்களாக இருந்தனர். குறிப்பாக இயக்குநர் பா.இரஞ்சித்தின் திரைப்படங்களின் பெண் பாத்திரங்கள் சுயேச்சையானவர்கள். அவரது திரைப்பெண்களின் உச்சம் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் ரெனே பாத்திரம்.  

ஆண்களே நாயகர்களாகத் திரையில் ஆக்கிரமித்த தமிழ் சினிமாவில் ஒரு பெண்ணை மக்கள் நாயகியாக முன்னிறுத்திய, கோபி நயினாரின் 'அறம்' படத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். அதேபோல் மணிரத்னம், கௌதம் மேனன் திரைப்படங்களின் அரசியல் என்பது அதிகார வர்க்க அரசியலாக இருந்தபோதும் அந்தப் படங்களின் பெண் பாத்திரங்கள், முற்போக்கு படங்களின் பெண் பாத்திரங்களைவிட கூடுதலான சுயச்சார்பு கொண்டவர்களாக (சமயத்தில் கொஞ்சம் அதீதமாக இருந்தாலும்கூட) இருந்தது வினோதமான உண்மை.  ச.தமிழ்ச்செல்வனின் சிறுகதையை அடிப்படையாக கொண்ட, இயக்குநர் சசியின் ‘பூ’ ஒரு பெண்ணின் அக உணர்வையும் ‘நூறுசாமி’ விதவைகள் மறுமணத்தையும் அழுத்தமாகப் பேசிய திரைப்படங்கள்.

பெண்களுக்கான வெளி சினிமாக்களில் உருவாகியிருக்கும் அதேநேரத்தில் பெண் வெறுப்புப் பாடல்களும் பெண்வெறுப்பு வசனங்களும் கணிசமான வரவேற்பு பெறுவது குறித்தும் சிந்திக்கவேண்டும். பெரும்பாலும் குடித்துவிட்டு குத்தாட்டம் போடுகிற இத்தகைய பாடல்களும் இளைஞர்களைக் குறிவைத்து நாயகர்கள் பேசும் வசனங்களும் பெண்களைக் காதலித்து ஏமாற்றுபவர்களாகவும் ஆண்களை அப்பாவிகளாகவும் சித்தரிக்கின்றன. வீட்டுச்சிறை தாண்டி வெளியே வந்து படிக்கத் தொடங்கும், பணிபுரியத் தொடங்கும், தனக்கான துணையைத் தானே தேர்ந்தெடுக்கத் தொடங்கும் பெண்களைக் கண்டு அஞ்சும் ஆண்களின் மனநிலைதான் இது. ஒருவகையில் படித்த பெண்களைத் திமிரானவர்களாகச் சித்தரித்த பழைய சினிமா  மனநிலைதான் இது.

இன்னொருபுறம் பெண்களை மரியாதைக்குரியவர்களாக, சக உயிரிகளாக சித்திரிக்க வேண்டிய அவசியமும் தமிழ் சினிமாவில் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். உச்சநட்சத்திரங்களான விஜய், அஜித் போன்றவர்கள்கூட பெண்களை முதன்மைப்படுத்திய ‘பிகில்’, ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய திரைப்படங்களில் நடித்தது வரவேற்கத்தக்கது. குறிப்பாக ‘பிங்க்’ இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’, நவீனப் பெண்கள் மீது கட்டமைக்கப்படும் ஆண்மையப் பார்வைகளைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியது. இப்படிப்பட்ட திரைப்படத்தில் அஜித் போன்ற உச்ச நடிகர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

என்றாலும் ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ போன்ற முழுமையான பெண்ணிய சினிமாக்கள் தமிழில் உருவாக முடியாதது, விவாதிக்க வேண்டிய சிக்கலே. பெண் இயக்குநர்கள் இயக்கும் திரைப்படங்கள்கூட முழுமையாகப் பெண்களின் உலகத்தை சித்திரிப்பவையாகவோ பெண்களின் பிரச்சினைகளைப் பேசுபவையாகவோ இல்லை. ஹலிதா ஷாமிமின் ‘சில்லுக்கருப்பட்டி’ அந்த திசை நோக்கி நகர்ந்த திரைப்படம்.

பெண்ணியப் பார்வையை கலை அழகியலுடன் நுட்பமாக முன்வைக்கும் இயக்குநர் என்று பி.எஸ்.வினோத்ராஜைச் சொல்லலாம். வினோத்தின் முதல் படமான ‘கூழாங்கல்’ ஆண் திமிரை அம்பலப்படுத்திய படம் என்றால் இரண்டாவது திரைப்படமான ‘கொட்டுக்காளி’, சாதிமறுப்பு, பெண்ணியம், மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்தது. இரண்டு திரைப்படங்களும் உரத்த குரலிலான பிரச்சாரத் தொனியைத் தவிர்த்து, நுட்பமான அழகியலை முன்வைத்தது. அந்தவகையில் நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் பெண்ணிய சினிமாவை உருவாக்கிய தனித்துவமான இயக்குநர் என்று ‘கூழாங்கல்’ வினோத்ராஜை சொல்லலாம்.