சிறப்புக் களம்

ஓடிடி திரைப் பார்வை 4: Axone - ஒடுக்குமுறையின் வலியைப் பாய்ச்சும் 'வடகிழக்கு' வசீகர சினிமா

கலிலுல்லா

இங்கே எல்லாமே பிரச்னையாகத்தான் இருக்கிறது. விரும்பிய உணவை உண்பது தொடங்கி, பிடித்த நிறத்தைக்கொண்டு தலைமுடியில் கலரிங் செய்துகொள்வது வரை எல்லாமே சிக்கல்தான். தனி மனிதனின் எல்லா விருப்பங்களுக்கும் மற்றவர்களின் அனுமதி தேவைப்படுகிறது. அவர்களிடம் விண்ணபிக்க வேண்டியிருக்கிறது. அந்த விண்ணப்பங்களை நிராகரிக்கும் முயற்சிதான் Axone (ஆக்ஸொன்) திரைப்படம்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் டெல்லியில் வீடெடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கு திருமணம். இதற்காக, தங்களுக்குப் பிடித்த தங்களின் பிராந்திய உணவான 'அக்குனி' என்று அவர்கள் அழைக்கும் 'ஆக்ஸொன்' என்னும் உணவை சமைக்கப் போராடுகிறார்கள். இறுதியில் அந்தப் போராட்டம் வெற்றியடைந்ததா என்பதுதான் Axone படம்.

ட்விஸ்ட், சண்டைக்காட்சிகள், டூயட் சாங்க்ஸ் என எந்த வித மசாலாக்களும் கலக்காமல், வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், அவர்கள் எதிர்கொள்ளும் இன வெறுப்பு, அவர்கள் மீதான பொதுசமூகத்தின் பார்வை என 1.30 மணி நேரத்தில் முக்கியமான பிரச்னையையும், பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது Axone திரைப்படம்.

இதை வெறும் வடகிழக்கு மாநில மக்கள் மீதான ஒடுக்குமுறையுடன் சுருக்கிப் பார்க்க முடியாது. ஒடுக்குமுறைகளுக்கு தனித்தனி மொழிகள் எல்லாம் கிடையாது. ஒரே மொழிதான். அது ஒடுக்குதல். இதை படத்தில் வரும் ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். டெல்லியில் தங்கியிருக்கும் வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண்டாங் என்பவர் தனது முடியை கலரிங் செய்திருப்பதால் கிண்டலுக்கு உள்ளாகிறார். அதன் நீட்சியாக அவர் மீது கொடூரத் தாக்குதலும் நிகழ்த்தப்படுகிறது. அதிலிருந்து அவரால் எளிதில் வெளியே வர முடியவில்லை. அந்தச் சம்பவம் அவருக்கு உளவியல் ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இறுதிவரை ஏதோ ஒரு மன அழுத்ததிலேயே அந்த கதாபாத்திரம் வலம்வரும்.

இதை வடசென்னை மக்களுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியும். 'புள்ளிங்கோ' என்ற தவறான பதங்களை பயன்படுத்தி அவர்களை ஒதுக்கி வைக்கும், தள்ளிவைத்து பார்க்கும் சம்பவங்களும், அவர்களின் தலைமுடி நிறங்களையும், உடைகளையும் வெறுப்பு பிரசாரத்திற்கு உள்ளாக்குவது நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. வடசென்னையைத் தாண்டி திண்டுக்கல்லில் சமீபத்தில் நடந்த சம்பவம் இங்கே குறிப்பிடத்தக்கது.

தனி நபரின் விருப்பங்களின் மீதான தாக்குதல்களும் கிண்டல்களும் பொதுசமூகத்திற்கான தீனியாக மாறியிருப்பதையும், குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மக்களின் உளவியல் பாதிப்புகளையும் Axone அப்படியே பதிவு செய்திருக்கிறது.

அதேபோல படத்தில் வரும் மற்றொரு காட்சியும் வெகுவாக கவனிக்கவைக்கிறது. டெல்லியில் தங்கியிருக்கும் மணிப்பூர் பெண்ணை அங்கிருக்கும் இளைஞர் கன்னத்தில் அறைந்துவிடுவார். அந்த இளைஞரின் குடும்பத்தின் முன்பு மணிப்பூர் பெண் நியாயம் கேட்டுக்கொண்டிருப்பார். அந்தக் காட்சியில், 'என் மகனா தப்பு பண்ணான். நீதான் தப்பானவ' என இளைஞருக்கு ஆதரவாக அவரது தாய் பேசிக்கொண்டிருப்பார். உடனே அவரை அவரது கணவர் கன்னத்தில் அறைந்துவிடுவார். அந்தக் காட்சியைப் பார்க்கும் நமக்கும் அது சரியெனவே தோன்றும்.

ஆனால், இறுதியில் அந்த மணிப்பூர் பெண், 'இப்போதான் தெரியுது உங்க மகனுக்கு அந்தப் பழக்கம் எங்கிருந்து வந்ததுன்னு' என கேட்கும் காட்சி நம்மை உலுக்குகிறது. நம்மை திருந்தச் சொல்கிறது. ஒரு அடி எதையும் நியாயப்படுத்தாது. குறிப்பாக பெண்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்தும் மனநிலையே தவறானது. தன் மகன் அறைத்ததை நியாயப்படுத்திப் பேசும் தாயை அடிக்கும் தந்தை செய்வதும் தவறே. அடிப்பது ஒருபோதும் நியாயமாகாது என்று நம் முகத்தில் அறைகிறது Axone.

அதேசமயம் வடகிழக்கு மாநில மக்களுக்குள்ளாகவே நிலவும் பிரிவினைகளையும் காட்சிப்படுத்த தவறவில்லை. அவர்களுக்குள் நிலவும் முரணும் முக்கியமானவைதான் என்கிறது படம். தவிர, அம்மக்களின் உணவு, உடை, கலாசாரம் ஆகியவை வியக்க வைப்பது மட்டுமின்றி சுவாரஸ்யமாக இருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை நிக்கோலஸ் கார்கோங்கோர் இயக்கியிருக்கிறார். இந்த படத்தையும் சேர்த்து மொத்தமாகவே 3 படங்களை மட்டுமே இயக்கியிருக்கும் அவரது படைப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. இசையும், கேமிராவும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

பெரிய பட்ஜெட், லோகேஷன்ஸ், பிரமாண்டங்கள் என எதுவுமில்லை. போகிற போக்கில் எதார்த்தமாக நடக்கும் நிகழ்வுகளை காட்சிப்படுத்தி நம்மை அந்த நிகழ்வுகளுடன் கனெக்ட் செய்வதுதான் ஒரு படைப்பின் வெற்றி. அந்த வகையில் Axone உங்களை ஏமாற்றாது. சிறந்த திரை அனுபவம் நிச்சயம்.

-கலிலுல்லா