தென்கொரியாவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு இணைய சேவை நிறுவனத்தால் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. இந்த வழக்கின் போக்கும், நெட்ஃபிளிக்ஸ் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஓடிடி சேவை நிறுவனங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
'தென்கொரியாவில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஏன் சர்வதேச அளவில் தாக்கத்தை செலுத்தக்கூடியது?' என்பதை புரிந்துகொள்ள இந்த வழக்கின் பின்னே உள்ள பிரச்னையை கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
ஓடிடி - ஸ்டிரீமிங் சேவையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நெட்ஃபிளிக்ஸ் சர்வதேச அளவில் செயல்பட்டு வருவது தெரிந்த விஷயம்தான். ஆசிய நாடான தென்கொரியாவில் நெட்ஃபிளிக்ஸிற்கு மிகப்பெரிய சந்தை இருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸில் வெளியாகும் பல படங்கள் மற்றும் தொடர்கள் கொரியாவில் பெரும் வரவேற்பை பெறுகின்றன. இப்படித்தான் அண்மையில் 'ஸ்குவிட் கேம்' (Scuid Game) எனும் வெப் சீரிஸ் கொரியாவில் பயனாளிகள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. (இந்தத் தொடர் உலக அளவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருவது வேறு கதை).
'ஸ்குவிட் கேம்' வெப் தொடரின் வெற்றிதான் நெட்ஃபிளிக்ஸிற்கு வில்லங்கமாக மாறியுள்ளது. உள்ளூர் இணைய சேவை நிறுவனம் இந்தத் தொடரை காரணமாக குறிப்பிட்டு, நெட்ஃபிளிக்ஸிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.
'இந்தத் தொடர் அதிக பயனாளிகளால் பார்க்கப்படுவதால், இதனால் ஏற்படும் பாதிப்புக்கு ஈடு செய்யும் வகையில் இணைய சேவை உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு செலவுக்கு நெட்ஃபிளிக்ஸ் பணம் செலுத்தவேண்டும்' என வழக்கில் கோரப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டான தொடருக்காக அந்நிறுவனம் ஏன் இணைய சேவை நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என கேட்கத் தோன்றலாம். இங்குதான் விஷயமே இருக்கிறது.
ஓடிடி சேவைகள் தொடர்பாக இணையத்தில் ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இணைய சேவை நிறுவனங்களின் உள்கட்டமைப்பை அதிகம் பயன்படுத்திக்கொள்ளும் வீடியோ மற்றும் ஓடிடி சேவை நிறுவனங்கள், அதற்கு தனியே கட்டணம் செலுத்த வேண்டும் எனும் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்னை அமைந்துள்ளது.
அதாவது, செய்திகளை படிப்பது, இணையத்தில் உலாவுவது போன்ற வழக்கமான பயன்பாடுகளை விட, வீடியோ அல்லது திரைப்படம், வெப்சீரிஸ் போன்றவற்றுக்கு அதிக இணைய வேகமும், கொள்ளளவும் தேவைப்படுவதால், இத்தகைய சேவைகளுக்கு என தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய சேவை நிறுவனங்கள் வாதிட்டு வருகின்றன.
ஆக, சாதாரண வேகத்திற்கு ஒரு கட்டணமும், அதிக வேகம் தேவைப்படும் சேவைகள் என அதற்கு ஏற்ப அதிக கட்டணமும் செலுத்த வேண்டும் என இதைப் புரிந்துகொள்ளலாம். இப்படி செய்வது இணைய சேவையில் பாகுபாடு காண்பிக்க வழிசெய்யும் என்று இணைய ஆர்வலர்கள் மற்றும் வல்லுநர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெடித்த இணைய சமநிலை விவகாரத்திற்கும் இந்தப் பிரச்னைதான் அடிப்படை. இந்தப் பின்னணியில் இருந்து தென்கொரிய வழக்கை பார்த்தால், அதன் முக்கியத்துவம் எளிதாக புரியும்.
நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் திரைப்படங்களையும், இணையத்தொடர்களையும் பார்க்க வழி செய்து வருவாயை அள்ளி வருகின்றன. இதனால், இணையவாசிகள் பயனடைந்தாலும், இணைய சேவை நிறுவனங்கள் வெறுத்துப் போயின. வீடியோ பயன்பாட்டிற்கு ஏற்ப இணைய வேகத்தின் தேவை பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், இதன்மூலம் லாபம் பார்ப்பது என்னவோ ஒடிடி மேடைகள்தான் என்பதே இணைய சேவை நிறுவனங்களின் அதிருப்திக்கு காரணம். இதற்கு தீர்வாகத்தான், இணைய வேகத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது ஒடிடி நிறுவனங்கள் தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என இணைய சேவை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாதாடி வருகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் இது தொடர்பாக விதவிதமான அணுகுமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில், தென் கொரியாவில் கடந்த ஆண்டு யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் அதிக இணையப் பயன்பாட்டால் இணைய சேவை நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமையை ஈடுகட்டும் வகையில் உரிய தொகை செலுத்த வேண்டும் என அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து அமேசான், ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இணைய சேவை நிறுவனங்களுக்கு தனியே கட்டணம் செலுத்தி வருகின்றன. ஆனால், யூடியூப் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இதை செய்யாமல் இருக்கின்றன.
இதை எதிர்த்து தென்கொரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.கே.பிராட்பேண்ட் நிறுவனம்தான் நெட்ஃபிளிக்ஸிற்கு எதிராக வழக்கு தொடுத்தது. 2018-ம் ஆண்டு முதல் நெட்ஃபிளிக்ஸிற்கு என்று தனியே அதி வேக இணைப்பை வழங்கி வரும் நிலையில், அதன் உள்ளடக்க பயன்பாட்டால் தனக்கு ஏற்படும் சுமைக்கு ஈடான தொகையை செலுத்த வேண்டும் என இந்த வழக்கில் கோரப்பட்டிருந்தது.
நெட்ஃபிளிக்ஸ் விடாமல் நீதிமன்றம் சென்று உள்ளட்டகத்திற்காக கட்டணம் செலுத்த வேண்டுமா என விளக்கம் கேட்டது. உள்கட்டமைப்பு சேவையை வழங்கும் நிறுவனங்கள் அதிகரிக்கும் தேவையை ஈடு செய்யும் பொறுப்பை கொண்டுள்ளன எனும்போது தாங்கள் ஏன் அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என நெட்ஃபிளிக்ஸ் வாதிட்டது.
இந்த வழக்கில் சியோல் நீதிமன்றம், நெட்ஃபிளிக்சிற்கு எதிராக தீர்ப்பளித்தது. இணைய சேவை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு பயன்பாட்டிற்கு ஏற்ப ஓரளவு போதுமான தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில்தான், 'ஸ்குவிட் கேம்' தொடர் செம ஹிட்டாக, இந்தத் தொடரால் பயனாளிகள் குவிவதன் எதிரொலியாக எழும் வெப் டிராஃபிக் என்பது பல மடங்கு அதிகரிப்பதாகவும், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புக்கு நெட்ஃபிளிக்ஸ் தனியே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
நெட்ஃபிளிக்ஸின் இந்தத் தொடரால் எந்த அளவு இணைய வேகம் அதிகமாக தேவைப்படுகிறது என தென்கொரிய நிறுவனம் புள்ளிவிவரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
தென்கொரிய நிறுவனத்தின் கோரிக்கையை கவனித்து வருவதாக கூறியுள்ள நெட்ஃபிளிக்ஸ் தனது சேவையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கம் மற்றும் வேலைவாய்ப்புகளை பட்டயலிட்டுள்ளது.
ஆக, நீதிமன்ற பலப்பரீட்சைக்கு நெட்ஃபிளிக்ஸ் தயாராகி வருகிறது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு எப்படி இருந்தாலும், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமையும் என்றே கருதலாம்.
| தொடர்புடைய செய்தி: “'ஸ்குவிட் கேம்' வேற லெவல் தொடராக மாறும்” - நெட்ஃப்ளிக்ஸ் இணை சிஇஓ நம்பிக்கை |