சிறப்புக் களம்

சென்னையின் வளர்ச்சியில் அதிகம் பங்காற்றிய நவாப்கள் - ஒரு பார்வை

கலிலுல்லா

சென்னை நகரத்தின் ஆரம்பகால வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் ஆற்காடு நவாப்கள், ஆங்கிலேயர்களுக்கு இணையாக பங்காற்றியுள்ளனர். 382-வது சென்னை தினத்தை கொண்டாடும் இன்றைய தினத்தில் மத நல்லணக்கம் போற்றிய நவாப்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் கிழக்கு கடற்கரை பகுதியில் 1639-ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை கட்டிய பின், அதனைச் சுற்றி குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு மதராஸ் நகரம் உருவானது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் ஆங்கிலேயர்கள் தங்களின் வணிகத்தை கடந்து, உள்நாட்டு அரசியலிலும் கவனம் செலுத்த தொடங்கினர். அப்போது ஆற்காடு நவாப்பாக இருந்தவர் சதாத்துல்லா கான். இவர் கோவளத்தில் ஒரு துறைமுகத்தையும், கோட்டையையும் அமைத்து, அடையாறின் வடக்கு கரையில் சதாத்துல்லா கான் ஜும்மா மஸ்ஜித் என்கிற பள்ளிவாசலையும் கட்டினார்.

அந்த பகுதி சதாத்துல்லா கானின் இயற்பெயரான முகமத் சயீத் பெயரில் சயீத்தா பாத் என்று அழைக்கப்பட்டது. அதேபோல் சென்னையில் அவர்களால் உருவாக்கப்பட்ட சைதாபாத் தான் நாளடைவில் சைதாப்பேட்டை ஆனது. இது தான் ஆற்காடு நாவப்கள் சென்னை நகருக்குள் பதித்த முதல் தடம். அதன் பின்னர் முகமது அலி வாலாஜா மதாரஸில் ஜார்ஜ் கோட்டைக்கு தெற்கே சேப்பாக்கத்தில் 300 ஏக்கர் வளாகத்தில் கலசா அரண்மனையை கட்டினார். 

பொதுவாக நவாப்கள் மதநல்லிணக்கதையும், மனித நேயத்தையும் பேணி வந்தார்கள் என்றே வரலாற்று பக்கங்கள் சொல்கின்றன. நவாப் அரச வம்சம் இசுலாமியர்களாக இருந்தாலும், அவர்களின் தளபதிகள், அமைச்சர்கள், காப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. வரலாறுகள் ஒருபுறமிருக்க நவாப்களின் ஆட்சிமுறை குறித்து விவரிக்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

மசூதிகள் மட்டுமின்றி நூலகம், பள்ளிக்கூடம், கூவம் கரையோரத்தில் பூங்காக்களை சென்னையில் நவாப்கள் உருவாக்கினர். வாலாஜாவிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த நவாப்கள் ஆற்காட்டில் இருந்து சென்னைக்கு குடி பெயர்ந்தனர். இந்திய அரேபியா கட்டட வடிவமைப்பில் நவாப்களால் அமைக்கப்பட்டுள்ள கலசா மஹால், ஹுமாயூன் மஹால், அமீர் மஹால் போன்றவை சென்னையில் நவாப்களின் கட்டட கலையை பறைசாற்றும் விதத்தில் உள்ளது.