தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதோடு, பாஜக சட்டமன்றக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கும் உற்சாகத்தில் இருக்கிறார் நயினார் நாகேந்திரன். நான்கு பாஜக எம்.எல்.ஏக்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது… 20 ஆண்டுகளுக்குப் பின் தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக நுழைந்திருப்பது என மகிழ்ச்சியில் இருக்கும் நயினார் நாகேந்திரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்று பெற்றுள்ளீர்களே... எப்படி இருக்கிறது?
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த நெல்லை மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அவர்கள் வீட்டுப் பிள்ளையாகத் தான் பார்த்திருக்கிறார்கள். இதுவரை, நெல்லை தொகுதியில் மூன்று முறை வெற்றிபெற வைத்துள்ளனர். ஒருமுறை 400 வாக்குகள், ஒருமுறை 600 வாக்குகுகள் என குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே இரண்டு முறை தோல்வியடைய வைத்துள்ளனர். இதிலிருந்து, என்னை எப்போதும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். அப்படி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருப்பார்கள்.
தொகுதி முழுக்க 70 கோடி ரூபாயில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தது, மருத்துவமனைகள் கட்டிக்கொடுத்தது, சாலைகள் அமைத்தது, குளங்களை அகலப்படுத்தியது, ரூ.100 கோடிக்கு மேல் பாலங்கள் கட்டியது, எல்லா ஊர்களுக்கும் பேருந்து விட்டது, பள்ளிவாசல், கிறிஸ்தவ தேவாலயங்கள், கோயில்கள் ஆகியவற்றிற்கு என பல்வேறு உதவிகள் செய்திருக்கிறேன். நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேகம் 20 வருடத்திற்குப் பிறகு முதன்முறையாக நான்தான் செய்தேன். அதனால், என்மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கைதான், தற்போது வெற்றிபெற வைத்துள்ளது.
அதேசமயம், இன்னும் எனக்கு ஓட்டு விழுந்திருக்கவேண்டும். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அமமுக, நாம் தமிழர் என பலக் கட்சிகள் எனது வாக்குகளை பிரித்துவிட்டார்கள்.”
அதிமுக உறுப்பினராக சட்டமன்றத்திற்குள் நுழைந்த நீங்கள் தற்போது பாஜக சட்டமன்ற உறுப்பினராக நுழைந்துள்ளீர்களே?
”எல்லாம் மாற்றம்தான். முன்பு அம்மா இருந்தார்கள். இப்போது, இல்லை. அதேபோல, பழைய சட்டமன்றத்தில் இல்லாமல், இப்போது கலைவாணர் அரங்கத்திற்கு சென்றுவிட்டோம். எல்லாமே மாறிப்போச்சி. அதனால், எனக்கு ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. முன்பு கூட்டமாக சட்டமன்றத்திற்குள் நுழைவோம். இப்போது, நான்கு பேரோட இருக்கோம். அவ்ளோதான்.”
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதால்தான் சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்களா?
“என்னை ஏன் தேர்வு செய்தார்கள் என்ற காரணம் தெரியாது. அனைத்தையும் தலைமைதான் முடிவு செய்தது. அதேசமயம், நான் இதுவரை 6 தேர்தல்களை சந்தித்துள்ளேன். எம்.ஆர் காந்தியும், வானதி சீனிவாசனும் பலமுறை தேர்தலில் நின்றுள்ளனர். ஆனால், இருவரும் இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளனர். டாக்டர் சரஸ்வதிக்கும் இதுதான் முதல்முறை. எல்லோரும் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பானவர்கள்தான். ஆனால், ஏற்கெனவே எனக்கு இரண்டுமுறை சட்டமன்ற அனுபவம் இருக்கிறது என்பதாலும் தலைமை நியமித்திருக்கலாம்.”
கட்சியில் புதிதாக சேர்ந்த உங்களுக்கு சட்டமன்றக்குழு தலைவர் பதவியை கொடுத்துவிட்டார்கள் என்ற வருத்தமோ, போட்டியோ மூத்த தலைவரான வானதி சீனிவாசனிடம் இருந்ததா?
”நானும் கட்சிக்கு புதிதல்ல. கட்சியில் இணைந்து 5 வருடம் ஆகிவிட்டது. எனக்கும் வானதி சீனிவாசனுக்கும் எந்த போட்டியும் இல்லை. இருப்பது நான்கு பேர்தானே? நாங்கள் நான்கு பேரும் அமர்ந்திருந்தோம். எங்கள் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் வானதி சீனிவாசன்தான் என்னை சட்டமன்றக்குழு தலைவராக முன்மொழிந்தார். அவ்ளோதான். சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.”
உங்கள் கட்சியின் தேசியத் தலைவர்கள் என்ன சொன்னார்கள்?
"நிர்மலா சீதாரமன், ஜே.பி நட்டா உள்ளிட்டவர்கள் என்னை போனில் தொடர்புகொண்டு ’சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்’ என்றார்கள்."
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் 20 வருடங்கள் கழித்து தமிழக சட்டமன்றத்திற்குள் பாஜக நுழைந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
“அப்படியும் எடுத்துக்கலாம். ஒண்ணும் தப்பில்லை. அதேசமயம், கூட்டணி என்று வரும்போது, இது இந்தக் கட்சியின் ஓட்டு என்று குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களைப் பொருத்து வெற்றி, தோல்வி மாறும். மேலும், பிரதமர் மோடி தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்டுள்ளார். அதனால்தான், திருக்குறள், அவ்வையார் பற்றியெல்லாம் பேசுகிறார். அவரின் அக்கறையை கடந்த தேர்தல்களில் மக்கள் புரிந்துகொள்ளவில்லை. இப்போது, புரிந்துகொண்டார்கள். இனிமேல் உண்மைகளை மறைக்க முடியாது. பாஜக நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
முன்பு நெல்லையில் தாமரையை யாருக்கும் தெரியாது. இப்போது 92,000 பேர் ஓட்டு போட்டுள்ளார்கள். போனதடவை நான் வாங்கியது 84,000 ஓட்டுகள். இப்போது தாமரையை யாரும் தெரியாது என்று சொல்ல முடியாது. இனிமேல், வலுவான இடத்திற்கு பாஜக வரும். மேற்கு வங்கத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 3 இடங்களில் வென்ற பாஜக, இப்போது 77 இடங்களை கைப்பற்றியுள்ளது. மூன்று 77 ஆக மாறும்போது நான்கும் 100 ஆக மாறுவதற்கு ரொம்பநாள் ஆகாது.”
ஆனால், அதிமுகவிலிருந்து நீங்கள் வந்ததால்தான் வெற்றிபெற்றுள்ளீர்கள் என்று சொல்லப்படுகிறதே?
“கடந்த 2001 ஆம் ஆண்டிலிருந்து நான் இந்தத் தொகுதியில்தான் நிற்கிறேன். அம்மா எனக்கு பெரிய மரியாதை கொடுத்திருந்தார். மக்களுடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதனால், அதிமுகவின் ஓட்டு இல்லைன்னு சொல்லவே முடியாது. அதிமுக பின்னணியும் எனது வெற்றிக்கு முக்கிய காரணம்.”
சட்டமன்றத்தில் 4 தூண்களாக பாஜக எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என்று எல்.முருகன் கூறியிருக்கிறாரே? எப்படி செயல்படப் போகிறீர்கள்?
“அவர் பேச்சு வாக்கில் அப்படி சொல்லியிருக்கலாம். ஆனால், அதுக்கும் எங்கள் செயலுக்கும் சம்மந்தம் இருக்காது. இது கொரோனா காலகட்டம். இப்போது, அரசியல் எல்லாம் பார்க்க முடியாது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து மக்களின் உயிரை காப்பாற்றுவதுதான் முதல் கடமை. ஒற்றுமையோடு இருந்து பொதுமக்களுக்கு உதவவேண்டும் என்று நினைக்கிறோம். எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகரிகமுடன் நடந்துகொள்வோம். கடுகளவுகூட நாகரிகமற்று இருக்காது.”
திராவிடக் கட்சியான அதிமுகவில் இருந்துவிட்டு தற்போது பாஜக எம்.எல்.ஏவாக நுழைந்துள்ள நீங்கள், தமிழக அரசு கொண்டுவரும் கொள்கை ரீதியிலான முடிவுகளை எப்படி எதிர்கொள்வீர்கள்?
”பாஜகவுக்கென்று இந்திய அளவில் தனிக்கொள்கைகள் உள்ளன. அந்தக் கொள்கைகளுடன் ஒத்த கருத்துடன் இருந்தால் நாங்கள் கூட்டணி கட்சிகளோடு தமிழக அரசின் முடிவுகளை ஆதரிப்போம். மாறுபாடுகள் இருந்தால் எதிர்க்கவும் செய்வோம்.”
உங்கள் கட்சியின் எல்.முருகன், அண்ணாமலை, குஷ்பு, ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளார்களே?
“1989 ஆம் ஆண்டுக்குப்பிறகு தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் அதிமுக அரசுதான் ஆட்சியில் இருந்தது. இப்போது, அம்மா இல்லை. அதனால், திமுக வரவேண்டும் என்று மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கும். பல கட்சிகள் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்துவிட்டன. இதுவும் தோல்விக்கு காரணம். எங்கள் தலைவர் முருகன் வெறும் 1000 வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றுள்ளார். அது பெரிய தோல்வியல்ல.”
- வினி சர்பனா