பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பாலா. அவர் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர தயாராக உள்ள படம் ‘நாச்சியார். ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஜோதிகாவுக்குதான் முக்கியமான கதாப்பாத்திரம் என்றும், ‘நாச்சியார்’ என்பது அவருடைய கதாப்பாத்திரத்தை குறிக்கும் பெயர்தான் என்றும் தெரியவருகிறது.
இந்தப் படத்தின் டீசர், சமூக வலைத்தளங்களில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. காவல்துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஜோதிகா, ‘தே... பயலே’ என்ற வார்த்தையைப் பேசுகிறார். இந்த டீசரில் ஜோதிகா பேசும் வார்த்தை குறித்து ஆதரவாகவும், பெருமளவு எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. எத்தனையோ படங்களில் இந்த வார்த்தை சாதாரணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் பேசாதவர்கள் ஏன் இதை பெரிது படுத்துகிறார்கள் என்றும், படத்தில் வரும் வசனத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், எந்த சூழ்நிலையில் அவர் அப்படி பேசுகிறார் என்று பார்க்காமல் ஜோதிகாவையும், இயக்குனர் பாலாவையும் விமர்சிப்பது ஏன் என ஒரு சாரார் கேள்வி எழுப்புகின்றனர்.
மற்றொருபுறம், ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாக்கு ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகா, இனி பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சொன்னதோடு, பெண்களை வெறும் கவர்ச்சி பொம்மையாக மட்டும் பயன்படுத்தாதீர்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை இயக்குனர்கள் உருவாக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார். அவர் இப்படி ஒரு ஆட்சேபனைக்குரிய வார்த்தையை பேசியிருக்கத் தேவையில்லை. அவர் பேசுகின்ற வார்த்தையும் கூட பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தையே என்றும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரங்களில் நடிப்பது ஆண்களை இப்படி மோசமான வார்த்தைகளில் திட்டுவதற்கான சுதந்திரம் ஆகுமா? என்றும் விமர்சிக்கிறனர்.
இவை ஒருபக்கம் இருந்தாலும், ஏதேனும் ஒரு சர்ச்சை இருந்தால்தான் படம் வெற்றி பெறும் என்ற மனநிலைக்கு திரைத்துறை வந்துவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. சமூக வலைத்தளங்களில் டீசரை வெளியிட தணிக்கைச் சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை. ‘நாச்சியார்’ திரைப்படம் தணிக்கைக்கு சென்றால் அந்த ஆட்சேபனைக்குரிய வார்த்தைக்கு அனுமதி இருக்காது. கட்டாயம் ‘பீப்’ சத்தம்தான் என்கிறார்கள் சினிமாத்துறை சம்மந்தப்பட்டவர்கள். இருந்தாலும், இப்படி ஒரு டீசரை வெளியிடக் காரணம் அனைவரும் அதைப்பற்றி பேச வேண்டும்; அப்படி படத்தில் என்னதான் இருக்கிறது என்று பார்க்க செய்ய வேண்டும் என்பதுதான் என்று பலர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கிவிட்டனர்.
‘மெர்சல்’ படம் கூட ஒரு சாதாரண படமாக கடந்திருக்க வேண்டிய படம்தான். அப்படத்துக்கு ஏற்பட்ட சர்ச்சைகளே படத்தை மாபெரும் வெற்றியடையவும், வசூலை வாரிக் குவிக்கவும் வைத்தது என்று பலதரப்பினராலும் பேசப்படுகிறது. அதன் விளைவு உதயநிதி ஸ்டாலின், பலூன் படத்தின் இயக்குனர் ஆகியோர் தங்கள் படத்தை புரொமோஷன் செய்து கொடுக்கும்படி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கேட்டனர். அவர்கள் விளையாட்டாக கேட்டிருந்தாலும், ‘நாச்சியார்’ டீசரைப் பார்க்கும்போது சர்ச்சையை எதிர்பார்த்தே இப்படிப்பட்ட காட்சிகளும், வசனங்களும் உண்டாக்கப்படுகின்றனவா? என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
இந்த உத்தியை 10 ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடித்தவர் நடிகர் சிம்பு. தான் நடித்து இயக்கிய ‘வல்லவன்’ படத்தில் நயன்தாராவில் உதட்டை கட்டித்து இழுப்பது போன்ற புகைப்படத்தை சுவரொட்டியாக அடித்து நகரம் முழுக்க ஒட்டச் செய்தார். சிம்புவின் இந்த செயல் மாபெரும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்தது. ஆனால் இந்த சர்ச்சைகளே அப்படத்தை பெரும் வெற்றியடைய செய்தது குறிப்பிடத்தக்கது.