எனைநோக்கிப் பாயும் தோட்டா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா. தனது “மறுவார்த்தை பேசாதே” பாடலின் மூலம் மிகப்பெரிய தாக்கத்தை இசையுலகில் ஏற்படுத்தியவர். இசையமைப்பாளரான தர்புகா சிவா தனது முதல் சினிமாவை இயக்கியிருக்கிறார். ‘முதல் நீ முடிவும் நீ’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சினிமா ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஒப்பற்ற விசயங்களின் ஒன்று நினைவுகளை அசைப்போடுவது. எல்லோருக்கும் நமது பதின்பருவ நாள்களை அசைபோட்டுப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. அப்படியாக 90கால கட்டத்தின் பள்ளி நாள்களை இனிமையாக கோர்த்து சினிமாவாக்கியிருக்கிறார் தர்புகா சிவா.
விநோத், அனு, கேத்தரின், சைனீஸ், ரிச்சர்ட் இவர்கள் எல்லோரும் இக்கதையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள். ஒரே பள்ளியில் படிக்கும் இவர்களது பள்ளிநாள்கள் நமக்கு திரைவிருந்தாக கிடைக்கிறது. பொதுவாக இதுபோன்ற கதைகளில் புதுமையான காட்சிகள் இடம்பெறுவது கடினம். காரணம் கிட்டத்தட்ட எல்லோருடைய பள்ளி நாள்களிலும் நட்பும் காதலுமே நிறைந்து இருக்கும். முதல் நீ முடிவும் நீ அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் இதுபோல நாஸ்டாலஜி வகை கதைகளை அந்தந்த இயக்குநர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் வீச்சு முடிவாகிறது. அழகி ஒரு ரகம் என்றால் ஆட்டோகிராப் இன்னொரு ரகம்.
இதில் முதல் நீ முடிவும் நீ எங்கு வேறு படுகிறது என்றால். மிகப் பெரிய சோக வயலினை இப்படம் வாசிக்கவில்லை. அதுவே இப்படத்தின் முதல் பலம் ஆறுதலும் கூட. டீ சீரிஸ் கேஸட்டில் பாடல் பதிவு செய்வது. சட்டையில் இங்க் தெளிப்பது. போன்ற எதார்த்த விசயங்களே காட்சிகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. அனு, விநோத் ஜோடி நல்ல தேர்வு. 90களின் அசல் முகமாக அனைவருமே இருக்கிறார்கள். முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள், காட்சிகள் இல்லாமல் மயிலிறகு போல மென்மையாக காட்சிகளை நகர்த்தியிருக்கிறார் தர்புகா சிவா.
முதல் பாதி இப்படி மயிலிறகு போல வருடினாலும் இரண்டாம் பாதி நம்மை கொஞ்சம் சோதிக்கிறது. மாணவர் மறுகூடுகை காட்சிகளின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை வளர்ந்தவர்களாக இரண்டாம் பாதியில் காட்டியிருக்கிறார் இயக்குநர். நல்வாய்ப்பாக அனைவருக்கும் ஒப்பனை சரியாக பொறுந்தி இருக்கிறது. பட்டாம் பூச்சி போல பாடித் திரிந்த அவர்களது வாழ்க்கையில் தனித்தனியே சொல்ல சில சோகக் கதைகளும் சேர்ந்து கொள்கின்றன.
பால்யகாலத்தில் நடந்த சின்ன காதல் முறிவு., ஒரே ஒரு வார்த்தையில் முடிந்து போயிருக்க வேண்டிய விசயம் அது. அம்முறிவு எப்படி பெரிய மன பாரத்தை அவர்களது மனதில் ஏற்றி விடுகிறது எனக் காட்டியிருக்கிறார்கள். விநோத்தாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் ரொம்பவே பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மாணவ பருவத்திலும் சரி ஒரு குடும்பஸ்தனாக மாறிய பிறகும் சரி நடிப்பில் நல்ல உழைப்பு தெரிகிறது. அனுவாக வரும் அம்ரிதாவும் பாராட்டக்குறியவராக நடிப்பை வழங்கியிருக்கிறார்.
ரிச்சர்ட், சைனீஸ் போன்ற பாத்திரங்கள் எல்லா வகுப்புகளிலும் உண்டு. அது தர்புகாவின் வகுப்பறையிலும் இருக்கிறது. தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த முறையான பதிவையும் இப்படம் செய்திருக்கிறது. அதற்கென ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் தர்க்க நியாயங்களை விவாதிப்பதில் இப்படம் இன்னுமே தனித்துவம் பெறுகிறது.
90களின் கால கட்டத்தை மிகப் பொறுத்தமான ஒளியமைப்புடன் வழங்கியிருக்கிறார் சுஜித் சரங். மன்மதன் கதாபாத்திரம் மூலம் இருவேறு கதை முடிவுகளை கொடுத்திருப்பது நாஸ்டாலஜி வகை கதைகளில் புதுமையான அணுகுமுறை. படத்தின் பிற்பாதியில் இன்னுமே நிறைய சுவாரஸ்யங்களைச் சேர்த்து ரசிகர்களை எங்கேஜ் செய்திருக்கலாம் என்றாலும் அது ஒரு குறையாகப் படவில்லை. பின்னனி இசை இதம்.
கதை, திரைக்கதை, பாத்திரங்களுக்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டிருக்கும் முகங்கள், ஒளிப்பதிவு, இசை என எல்லாமே முடிந்த வரை சரியாகவே அமைந்திருக்கிறது. ‘முதல் நீ முடிவும் நீ’ நல்ல முயற்சி. உள்ளங்கைக்குள் ஒரு ஸ்பூன் தேனை ஊற்றி உறிஞ்சுவது போல இனிப்பான சினிமா.