சிறப்புக் களம்

கொரோனா பரவல் எதிரொலி: தள்ளிவைக்கப்படும் மாஸ் ஹீரோக்களின் பிரம்மாண்ட படங்கள்

சங்கீதா

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பல்வேறு திரைப்படங்கள், ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதில் மாஸ் ஹீரோக்களின் படங்களும் தப்பிக்கவில்லை. 

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், இரண்டு வருடங்களாக மக்களின் இயல்பு வாழ்கைகையை புரட்டிப் போட்டுள்ளது. கொரோனாவால் பல்வேறு துறைகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

இதில் சினிமா துறையையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. சினிமா துறையை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடப்பதிலேயே, கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள காரணங்களால் பெரும் சவால்களை உலக அளவில் சினிமா துறை சந்தித்து வருகின்றது.

இந்த சவால்களை முறியடித்து வெற்றிக்கரமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டாலும், திரையரங்கிளில் வெளியிடுவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சமாளிக்க அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓ.டி.டி தளங்களில் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பெரும் பொருட்செலவில், மாஸ் ஹீரோக்கள் நடித்த திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்படுவதையே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. கொரோனா பரவல் சற்று ஓய்ந்த நிலையில் 2022-ம் ஆண்டு துவக்கத்திலேயே பல்வேறு திரைப்படங்கள் வெளியாக இருந்ததால், இந்திய திரைப்பட உலகம் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால் ஒமைக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலால், மீண்டும் கடும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கு காரணமாக இந்தியாவில் திரைப்படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இதுகுறித்து சிறு தொகுப்பை இங்கு காணலாம்.

ஆர்ஆர்ஆர் : எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஜனவரி 7-ம் தேதி வெளியாக திட்டமிட்டப்பட்டிருந்தது. இந்தத் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். பிரம்மாண்ட இயக்குநர், ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்ததால் இந்த திரைப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்தது.

ராதே ஷ்யாம் : ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்தப்படம் ஒத்திவைப்பதாக யுவி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிரித்விராஜ் : அக்ஷய் குமார் மற்றும் மனுஷி சில்லர் நடித்துள்ள 'பிரித்விராஜ்' திரைப்படம், ஜனவரி 21 அன்று வெளியாகும் என்று கூறப்பட்டது. வரலாற்று சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. ஆனால் இந்தப்படமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெர்சி : இதேபோல் ஷாகித் கபூர் மற்றும் மிருணால் தாக்கூரின் நடிப்பில் வெளியாக இருந்த 'ஜெர்சி' திரைப்படமும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி வெளியாவதாக அறிவித்தநிலையில், திரையரங்குகளில் முன்பதிவுகளும் துவங்கின. ஆனால் இந்த திரைப்படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வலிமை : ஹெச்.வினோத்குமார் இயக்கத்தில் இரண்டாவது முறையாக அஜித் நடித்துள்ள திரைப்படம் 'வலிமை'. பெரும் எதிர்பார்ப்பு நிலவிவரும் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படம் தற்போது அறிவித்தப்படி திரையரங்குகளில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனெனில் தமிழகத்திலும் கொரோனா பரவல்கள் அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகின்றார். இதனால் திட்டமிட்டப்படி 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுமா என்று பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியவரும்.

வீரமே வாகை சூடும் : விஷாலின் 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் ஜனவரி 26-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தொற்று காரணமாக இந்த திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலால் இந்த திரைப்படமும் ஒத்திவைக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

- சங்கீதா