சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 6: லிண்டா வெயின்மேன் - இணையத்தின் அம்மா, இணையக் கல்வி முன்னோடி!

webteam

லிண்டா வெயின்மேன் (Lynda Weinman) வெற்றிக்கதையை இரண்டு விதமாக வர்ணிக்கலாம். '35 டாலரில் துவங்கி 150 கோடி டாலடர்களை ஈட்டியவர்' என எண்ணிக்கை உதவியோடு வர்ணிக்கலாம். அல்லது, ஓர் இணையதளத்தில் இருந்து துவங்கி மிகப்பெரிய இணையக் கல்வி நிறுவனத்தை உருவாக்கியவர் என்று வர்ணிக்கலாம்.

லிண்டாவும் இரண்டாவது அறிமுகத்தையே விரும்புவார். ஏனெனில் அவர் தனது வர்த்தக வெற்றியை கோடிகளால் கணக்கிட விரும்பியதில்லை. தனது செயல் மூலம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது என்பதையே முக்கியமாக கருதுபவராக அவர் விளங்குகிறார். அதனால்தான் சில ஆண்டுகளுக்கு முன் 'லிங்க்டு இன்' நிறுவனம் அவரது லிண்டா டாட் காம் (http://lynda.com/) இணைய கல்வி நிறுவனத்தை 150 கோடி டாலருக்கு வாங்கியபோது, ஏன் எல்லோரும் எண்ணிக்கையை பெரிதாக பேசுகின்றனர் என அவர் வியப்புடன் கூறியிருக்கிறார்.

அதேநேரத்தில் அவரது வெற்றிக்கதை ஓரிரவில் உண்டானதும் இல்லை. இருபது ஆண்டுகால வளர்ச்சியின் பலனை அவர் அறுவடை செய்தார் என்றே சொல்ல வேண்டும். அது மட்டும் அல்ல, பொதுவாக ஸ்டார்ட் அப் உலகில் எதிர்பார்க்கப்படுவதுபோல, நிறுவனத்தை பெரிய தொகைக்கு விற்று செல்வந்தராக வெளியேற வேண்டும் என்பதை அவர் இலக்காக கொண்டிருந்ததில்லை. அந்த எண்ணமும் கூட அவருக்கு இருக்கவில்லை.

அது மட்டும் அல்ல, ஸ்டார்ட் அப் இலக்கணப்படி அவர் நிறுவனத்தை நடத்த நிதி முதலீட்டையும் எதிர்பார்க்கவில்லை. லாபத்தை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் எனும் அணுகுமுறையையும் பின்பற்றாமல் துவக்கம் முதலே தனது வர்த்தகத்திற்கான வருவாயை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இப்படி பலவிதங்களில் ஸ்டார்ட் அப் கலாசாரத்திற்கு நேர் எதிராக அமையும் லிண்டா டாட் காமின் வெற்றிக்கதை 1995-ல் துவங்குகிறது. லிண்டா டாட் காமின் வெற்றிக்கதையே அதன் நிறுவனரான லிண்டா வெயின்மேனின் வெற்றிக்கதையாகவும் அமைகிறது.

இணையக் கல்வியின் முன்னோடி, இணையத்தின் அம்மா என்றெல்லாம் பலவிதமான அடைமொழிகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் லிண்டாவின் வெற்றியின் அருமையை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இணையத்தின் ஆரம்ப காலத்திற்குச் செல்ல வேண்டும்.

வைய விரிவு வலை (WWW) வடிவில் விரியத் துவங்கிய இணையம் வர்த்தகமயமான ஆண்டாக கருதப்படும் 1995-ல் லிண்டா தனது பெயரில் லிண்டா டாட் காம் இணையதளத்தை துவக்கினார். இ-காமர்ஸ் சாம்ராஜ்யமான அமேசான், ஏல இணையதளமான இபே உள்ளிட்ட இணையதளங்கள் இந்த ஆண்டுதான் துவக்கப்பட்டன என்பதையும் மனதில்கொள்ள வேண்டும்.

1995-ல் துவங்கப்பட்ட அமேசானும், இபேவும் மாபெரும் இணைய சாம்ராஜ்ஜியங்களாக உருவானாலும் கூட, லிண்டா தனது இணையதளத்தை அத்தகைய வர்த்தக இலக்குகள் எதுவும் இல்லாமல்தான் துவக்கினார். உண்மையில் லிண்டா டாட் காம் தளத்தை அவர் துவக்கியதில் அந்தக் கால இணையத்தின் அப்பாவித்தன்மை கலந்திருந்தது. லிண்டாவுக்கு தனது பெயரில் சொந்த இணையதளம் நிறுவ வேண்டும் எனற எண்ணமும் இருக்கவில்லை. அப்போது, டெப்பி@டெப்பி.காம் எனும் பெயரில் வந்து சேர்ந்த இமெயில் ஒன்றே அவரை அப்படி யோசிக்க வைத்தது.

இமெயில் அனுப்பியவர் டெப்பி.காம் என தனது பெயரில் இணையதளம் கொண்டிருந்ததை பார்த்தவர் தனது பெயரில் இணைய முகவரி இருக்குமா என பார்க்க விரும்பினார். ஆச்சர்யப்படும் வகையில் லிண்டா.காம் இணைய முகவரி கிடைக்கவே 35 டாலர் கொடுத்து அதை வாங்கி தனது இணையதளத்தை அமைத்துக்கொண்டார். ஆனால், இந்த இணையதளத்தை அமைத்தபோது லிண்டா சாதாரண நபராக இருக்கவில்லை. இணைய தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் ஆசிரியராக இருந்தார். அதோடு அவருக்கு என அபிமான மாணவர்களும் இருந்தனர்.

இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிய காலத்துக்குச் செல்ல வேண்டும். 1980களில் ஆப்பிள் கம்ப்யூட்டர் அறிமுகமாகி பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சியை துவக்கி வைத்திருந்த காலம். அப்போது லிண்டா மார்க்கெட் ஒன்றில் ஆப்பிளின் மாகிண்டாஷ் கம்ப்யூட்டரை பார்த்ததும் அதை வாங்கிப் பயன்படுத்த துவங்கினார். அதே காலத்தில் அவரது காதலர், கம்ப்யூட்டரை பயன்படுத்துவதில் தனக்கு உதவ முடியுமா என கேட்டிருக்கிறார்.

காதலருக்கு உதவுவதற்காக கம்ப்யூட்டருடன் கொடுக்கப்பட்ட வழிகாட்டி கையேட்டை படித்துப் பார்த்தவரால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தொழில்நுட்பத்தில் பரிச்சயம் உள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருந்த அந்த கையேட்டை தூக்கி வீசிவிட்டு, கம்ப்யூட்டரை இயக்கிப் பார்ப்பதன் மூலம் முட்டி மோதி தானே அதன் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். மென்பொருள்களின் சூட்சமத்தையும் கற்றுக்கொண்டார்.

கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக்கொண்டதோடு, அவற்றை எளிதாக மற்றவர்களுக்கு புரியவைக்கும் ஆற்றலும் அவருக்கு இருந்தது. எனவே, நட்பு வட்டத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பவராக அறியப்பட்டார்.

அதன்பிறகு லிண்டாவுக்கு திருமணம் ஆனது. அவருக்கு கம்ப்யூட்டர் வரைகலையிலும் ஆர்வம் இருந்தது. 1993-ல் அவர் வடிவமைப்புக் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் வரைகலை பாடம் நடத்திக்கொண்டிருந்தார். வலை பொதுமக்களுக்கு அறிமுகமான ஆண்டு அது என்பது குறிப்பிடத்தக்கது. வைய விரிவு வலை, மொசைக் பிரவுசரின் வாயிலாக லிண்டாவுக்கும் அறிமுகமானபோது அவர் வலைக்குள் விழுந்துவிட்டார்.

புதிய இணையதளங்களை வடிவமைக்கும் நுணுக்கத்தில் ஆர்வம் கொண்டவர் தனது மாணவர்களுக்கு இதைக் கற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணத்தில் வலைதள வடிவமைப்பு தொடர்பான புத்தகத்தை தேடிச் சென்றார். புத்தக கடைகளாக ஏறி இறங்கினாலும், ஒரு புத்தகம் கூட கிடைக்கவில்லை. எச்.டி.எம்.எல் மொழி தொடர்பாக இருந்த புத்தகங்களோ புரோகிராமிங் புலிகளுக்காக எழுதப்பட்டிருந்தன. ஒன்றும் தெரியாதவர்கள் அவற்றைப் படித்து எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலை.

தான் தேடிய புத்தகம் கிடைக்காத நிலையில், அப்படி ஒரு புத்தகத்தை தானே எழுத தீர்மானித்தார். கற்பித்தலில் தனக்கு இருந்த ஆர்வம், தொழில்நுட்ப சங்கதிகளை எளிதாக விளக்கும் ஆற்றல் ஆகிய அம்சங்கள் தனக்கு கைகொடுக்கும் என நம்பினார்.

ஆனால், இந்தப் புத்தகத்தை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. அவருக்கோ, புத்தகம் எழுத முன்பணம் தேவைப்பட்டது. விளைவாக, பத்திரிகை ஒன்றில் புத்தகத்தின் உள்ளடக்கத்தை தொடராக எழுதத் துவங்கினார். இதனிடையே வலை வடிவமைப்பு தொடர்பான ஆய்வு மற்றும் கற்றலையும் மேற்கொண்டு, புத்தகத்தின் பகுதிகளை உற்சாகமாக எழுதினார்.

இந்தக் கட்டுரைகளை படித்துவிட்டுதான் டெப்பி என்பவர் அவரை தொடர்புகொண்டார். அவரது இணைய முகவரியை பார்த்து உந்துதலில் லிண்டா தனது பெயரில் இணையதளத்தை அமைத்துக்கொண்டார். இணையதளமும் அவரது கற்றலுக்கான சாதனமாக அமைந்தது.

டிசைனிங் வெப் கிராபிக்ஸ் (Designing Web Graphics) எனும் பெயரில் வெளியான அந்தப் புத்தகம் இணைய ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இணைய வழிகாட்டி புத்தகங்களும், வீடியோக்களும் இன்று அநேகம் இருந்தாலும் அந்த காலகட்டத்தில் இணைய வடிவமைப்பு தொடர்பாக வெளிவந்த முதல் புத்தகமாக அமைந்தது. அதன் காரணமாகவே நல்ல வரவேற்பை பெற்றது.

புதிய இணையதளங்களின் உருவாக்கத்தால் வலை மெள்ள மெள்ள வளரத் துவங்கியிருந்த சூழலில் பலருக்கும் இணைய வடிவமைப்பு தொடர்பான வழிகாட்டுதல் தேவைப்பட்டது. அவர்கள் எல்லாம் லிண்டா புத்தகத்தை ஆர்வத்துடன் படித்தனர்.

லிண்டாவின் புத்தகம் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல், உலகின் மற்ற நாடுகளிலும் பரபரப்பாக விற்பனையானது. வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாசகர்கள் அவரை இமெயில் மூலம் தொடர்புகொண்டு பேசினர். இந்தப் புத்தகத்தின் வெற்றி லிண்டாவுக்கு வர்த்தக நோக்கிலும் அள்ளிக்கொடுத்தது.

புத்தக வருமானத்தின் மூலம் கலிபோர்னியாவின் வெளிப்புறப் பகுதியில் சொந்த வீடு வாங்கியதோடு லிண்டாவும், கணவரும் வேலையை விட்டுவிட்டு வடிவமைப்பு வகுப்புகளை நடத்தத் துவங்கினர்.

வடிவமைப்பு வகுப்புகளை நடத்தலாம் எனும் ஐடியாவை லிண்டாவின் கணவர்தான் கூறினார். வீட்டின் அருகாமையில் இருந்த பள்ளி கம்ப்யூட்டர் வகுப்பறையை வாடகைக்கு எடுத்து, ஒரு வார கால பாடத்தை அறிவித்தனர். அதுவரை லிண்டா புத்தகம் பற்றிய தகவல்களை பகிரவும், வாசகர்களுடன் தொடர்பு கொள்ளவும் தனது இணையதளத்தை பயன்படுத்தி வந்தார். இப்போது இணைய வடிவமைப்பு தொடர்பான தகவலை இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்த வகுப்பிற்கு எத்தனை பேர் வருவார்கள் என அவர்கள் படபடப்புடன் காத்திருந்த நிலையில் வகுப்பறை மாணவர்களால் நிரம்பியதோடு, ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் இருந்தும் ஒருவர் பறந்து வந்திருந்தார். இந்த ஏகோபித்த ஆதரவு லிண்டாவை திகைக்க வைத்தது. "இணையதளத்தில் வெளியான விளம்பரத்தை பார்த்துவிட்டு உலக நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வந்தது திகைப்பாக இருந்தது" என பேட்டி ஒன்றில் லிண்டா கூறியுள்ளார்.

இந்த வரவேற்பை அடுத்து வார பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து நடத்தினர். மேலும், பல பாடங்களை அறிமுகம் செய்தனர். வகுப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, முன்கூட்டியே இருக்கைகள் நிரம்பத் துவங்கின. இதனால் ஆர்வம் காட்டிய பலரை வகுப்பில் சேர்த்துக்கொள்ள முடியாத நிலையும் உண்டானது.

நேரடி வகுப்புகளோடு, மாணவர்களுக்கான வழிகாட்டி வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடத் துவங்கினர். லிண்டாவின் புத்தகம் மற்றும் இணையதளம் வாயிலாக புதிய மாணவர்கள் தேடி வந்தனர். 1997-ல் முறைப்படி பயிற்சி பள்ளியை நிறுவினர். 1990-களின் பிற்பகுதியில் டாட் காம் என குறிப்பிடப்பட்ட இணைய நிறுவனங்கள் கொடி கட்டி பறந்தாலும், 1990களின் இறுதியில் டாட் காம் குமிழ் வெடித்தது. மற்ற இணைய நிறுவனங்கள் போல வெளி நிதியை நம்பியிராமல், மாணவர்கள் மூலமான கட்டண வருவாயை அடிப்படையாக கொண்டு இயங்கியதால் லிண்டா டாட் காம் நிறுவனம் டாட் காம் அலையால் பாதிக்கப்படாமல் தப்பியது.

எனினும், நிறுவனம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில், 2001-ல் அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுர தாக்குதல் பாதிப்பை உண்டாக்கியது. ஊழியர்களில் பலரை பணியில் இருந்து நீக்க வேண்டிய நெருக்கடி உண்டானது. அமெரிக்காவில் நிலவிய அசாதாரண சூழலில் பயண ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்டதால், வகுப்புகளுக்கு நேரடியாக வருகை தருபவர்கள் எண்ணிக்கையும் குறைந்தது.

வளர்ச்சிப் பாதையில் இருந்த நிறுவனம் சோதனைக்கு உள்ளான நிலையில், லிண்டாவும் அவரது கணவரும் சில கடினமான முடிவுகளை மேற்கொண்டனர். நேரடி வகுப்புகளை ரத்து செய்து, எல்லாவற்றையும் ஆன்லைனுக்கு கொண்டு சென்றனர். லிண்டா.காம் இணையதளத்தில் பயிற்சி வீடியோக்களை பதிவேற்றினர். நேரடி வகுப்பு மாணவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வீடியோக்கள் கைகொடுத்தன.

முழுவதும் இணைய வகுப்புகளுக்கு மாறிய நிலையில், லிண்டா டாட் காம் எதையும் இலவசமாக வழங்காமல் கட்டணச் சேவை முறையை பின்பற்றியது. இணையதளத்தில் உள்ள பயிற்சி வீடியோக்களை அணுக விரும்புகிறவர்கள் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். அதன் பிறகு அவர்கள் விரும்பிய பயிற்சி வீடியோக்களைப் பார்க்கலாம்.

கம்ப்யூட்டர் மூலம் கற்பது மற்றும் இணைய வீடியோக்களை பார்ப்பது என்பது இன்னமும் பரவலாகத் துவங்காத காலத்தில் லிண்டா தனது தளத்தில் வீடியோ பாடங்களுக்கான கட்டணச் சேவையை துவக்கினார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் நம்ப முடியாமல் இருக்கும். இணைய வீடியோ என்றதும் நினைவுக்கு வரும் யூடியூப் இணைய சேவை அறிமுகம் ஆக இன்னும் சில ஆண்டுகள் இருந்தது!

துவக்கத்தில் 1,000 கட்டண உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். புதிய உறுப்பினர் சேர்க்கை குறைவாகவே இருந்தது. ஆனால், லிண்டா மனம் தளரவில்லை. இணைய வளர்ச்சியில் பொறுமை தேவை என நினைத்தார். இணையக் கல்வியில் அப்போது போட்டி அதிகம் இருக்கவில்லை. இணைய வடிவமைப்பு உள்ளிட்ட வளரும் தொழில்நுட்பங்கள் தொடர்பான எளிதான வீடியோ பாடங்கள் கற்றலில் ஆர்வம் கொண்டவர்களை கவர்ந்தது. மேலும், புதிதாக அறிமுகம் ஆன தொழில்நுட்பங்கள், புரோகிராமிங் மொழிகள் தொடர்பான வீடியோ வழிகாட்டிகள் தொடர்ச்சியாக உருவாக்கி பதிவேற்றப்பட்டன. இதன் காரணமாக பதிவு செய்த உறுப்பினர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, 2006-ம் ஆண்டு 10 மடங்கு அதிகரித்தது. இதனிடையே ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது.

உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டதும், நிறுவனத்தின் 150 ஊழியர்களையும் டிஸ்னிலாந்துக்கு அழைத்துச்சென்று கொண்டாடினார். தொடர்ந்து நிறுவனம் வளர்ச்சி கண்டு இணையக் கல்விக்காக அறியப்பட்டது. எளிய பயிற்சி வகுப்புகளை அளித்த லிண்டா 'இணையத்தின் அம்மா' என கொண்டாடப்பட்டார். சத்தமே இல்லாமல், நிறுவனம் இணைய வெற்றிக்கதைகளில் ஒன்றாக உருவாகி இருந்தது.

நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்தபோது, தொழில்முறை சி.இ.ஓ ஒருவர் நியமிக்கப்பட்டார். 2010-களில், இணையம் மூலம் பாடம் நடத்த வழிசெய்யும் பொதுவெளியிலான இணைய பாடத்திட்டங்கள் (MOOC) கருத்தாக்கம் அறிமுகமாகி பரவலான கவனத்தை பெற்றது. இதற்கு மத்தியில் லிண்டா டாட் காம் தனது பயிற்சி வீடியோக்களை விரிவாக்கியது. 20 வீடியோக்களுடன் துவக்கப்பட்ட நிறுவனம் ஒரு கட்டத்தில் 6,000-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடியோ பாடங்கள் என வளர்ச்சி அடைந்திருந்தது.

கற்றல் வீடியோக்களுக்காக உறுப்பினராகி, விரும்பிய பாடத்திட்டங்களை தேர்வு செய்து கற்கலாம் எனும் முறை லிண்டா டாட் காமின் பலமாக அமைந்தது. ஒரு பக்கம் மூக் அலை வீசினாலும், லிண்டா டாட் காம் லட்சக்கணக்கான உறுப்பினர்களை ஈர்த்த தனக்கென ஒரு பரப்பை கொண்டிருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் தொழில்முறை வலைப்பின்னல் தளமான 'லின்க்டு இன்' நிறுவனம் லிண்டா டாட் காம் நிறுவனத்தை 1.5 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனம், 'லிங்க்டு இன்' தளத்தை விலைக்கு வாங்குவதற்கு முன் இது நிகழ்ந்தது. தொழில்முறை வலைப்பின்னல் சேவையான 'லின்க்டு இன்' தனது மேடையின் பயன்பாட்டுத் தன்மையை கற்றல் மேடையான லிண்டா டாட் காம் மேம்படுத்தும் என உறுதியாக நம்பியது.

'லின்க்டு இன்' தேடி வந்தபோது லிண்டாவுக்கு 60 வயதாகி இருந்தது. நிறுவனத்தை விற்று காசாக்கும் எண்ணம் அவருக்கு இருக்கவில்லை. ஆனால், தொழில்முறை மேடையான 'லிங்க்டு இன்' தனது கற்றல் தளத்திற்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தவர், இந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார்.

லிண்டா டாட் காம் நிறுவனத்திற்கு 'லின்க்டு இன்' அளித்த விலை பெரும்பாலானோரை வியக்கை வைத்தது. எல்லோரும் விலை பற்றியே பேசினர். ஆனால், லிண்டாவோ, விலையில் கவனம் செலுத்தவில்லை, இதன்மூலமான பெரிய தாக்கத்தையே முக்கியமாக நினைத்தோம் என்று கூறியிருந்தார். ஆம், தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் ஆர்வமே லிண்டா டாட் காமின் வெற்றிக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.