சிறப்புக் களம்

சீனாவில் முதல் உயிரிழப்பை பதிவுசெய்த குரங்கு-பி வைரஸ் பாதிப்பில் யாருக்கு ஆபத்து அதிகம்?

நிவேதா ஜெகராஜா

உலகளவில் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் நிலையில், 'குரங்கு-பி' என்ற வைரஸின் பரவல் சீனாவில் தொடங்கியிருக்கிறது என்றும், தற்போது அதற்கு அங்கு ஓர் இறப்பு பதிவாகியுள்ளது என்றும் சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது மக்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் இந்த 'குரங்கு-பி' வைரஸ் பாதிப்பு எந்தளவுக்கு ஆபத்தானது, இது கொரோனா போல பெருந்தொற்றாக அமையுமா என்பது பற்றி இங்கு விரிவாக காணலாம்.

சீனாவில் குரங்கு-பி வைரஸின் முதல் இறப்பு: சீனாவில் பீஜிங் பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் குரங்கு–பி வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்திருக்கிறார் என்பதுதான் சமீபத்தில் வெளிவந்த அந்த செய்தி. கடந்த மே மாதத்திலேயே அவர் உயிரிழந்துவிட்ட போதிலும்கூட, தற்போதுதான் அவர் இறப்புக்கான காரணம் 'குரங்கு-பி' வைரஸ்தான் என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வாந்தி – மயக்கம் போன்ற இன்னபிற அறிகுறிகள் தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து தீவிர பாதிப்பு ஏற்பட்டு, அவர் இறந்திருக்கிறார். இடையில் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டபோதும் அவருக்கு என்ன பாதிப்பு என்பது தெரியாமலேயே இருந்துள்ளது. இதனால் உரிய சிகிச்சை அளிக்கமுடியாமல் மருத்துவர்கள் திணறியுள்ளனர். ஒருகட்டத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது அவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியதில், தற்போது அவருக்கு 'குரங்கு-பி' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் குரங்கு-பி வைரஸ்: சீனாவில் ஏற்பட்ட முதல் குரங்கு-பி வைரஸுக்கான மரணம், இதுதான் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ், கடந்த 1932-ம் ஆண்டே கண்டறியப்பட்டுவிட்டது. அப்போதிருந்து அவ்வபோது இது அதிகாரபூர்வமாக சில நாடுகளில் பதிவாகியுள்ளது என்ற போதிலும்கூட, கடந்த 2020 வரை இந்நோய்க்கு உலகளவில் மொத்தம் 50 பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் சொல்கின்றன. அவர்களில் 21 பேர் இறந்துள்ளனர் எனத் தெரிகிறது.

குரங்கு-பி வைரஸ் பரவும் விதம்: ‘மக்காக்’ (macaque) என்ற வகை குரங்குகளுக்கு ‘பி’ வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதெனில், அது மனிதர்களை கடித்தாலோ – பிராண்டினாலோ அப்போது ரத்தம் வழியாக அந்த வைரஸ் அக்குரங்கிடமிருந்து மனிதர்களின் உடலுக்குள் ஊடுருவும். மற்றபடி வேறெந்த வழியாகவும் இது பரவாது. அதேபோல மனிதர்களுக்கும் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதிகம் பரவாது. இதுவரை ஒரேயொருவருக்கு மட்டுமே அப்படி பரவியிருப்பதாக தகவல் உள்ளது. தற்போது இறந்திருக்கும் மருத்துவருடன் தொடர்பிலிருந்து அவர் குடும்பத்தினர், நண்பர்கள் என யாருக்கும்கூட இப்பாதிப்பு பரவவில்லை என்பதே இதற்கு சாட்சி.

இந்த ‘பி’ வகை வைரஸ் பாதிப்பு, பிற இன குரங்குகளுக்கும் ஏற்படலாம் என்றபோதிலும், பிறவகை குரங்குகள் (சிப்பான்சி & கபுசின் உள்ளிட்டவை) இந்த வைரஸால் தாக்கப்படும்போது எளிதில் இறந்துவிடும் அபாயம் அதிகம். ஆகவே பரவும் விகிதம் அங்கேயே தடுக்கப்பட்டுவிடும். இந்த மக்காக் வகை குரங்குகளுக்கு மட்டும், பி வகை வைரஸ் பாதிப்பு ரொம்பவும் சாதாரணமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிகபட்சம் மிதமான காய்ச்சலை மட்டுமே இது அவற்றுக்குத் தரும்.

ஈரப்பதமான இடத்தில் இவ்வகை வைரஸ் அதிக நேரம் வாழும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

குரங்கு-பி வைரஸ் இறப்பு விகிதம்: மக்காக் வகை குரங்குகள்தான் மனிதர்கள் மீதான வைரஸ் பரவலுக்கு அதிக காரணமாக இருக்கிறது என்பதால் இந்த வகை குரங்குகளை ஆபத்தானவை என 1987 – 88 ஆண்டுகளில் ஆய்வறிக்கை ஒன்று சொன்னது. குரங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களில், இதுமட்டுமே மிக மோசமான பாதிப்பு உருவாக்குவதாக உள்ளது. இதன் இறப்பு விகிதம் 70-80% என்றுள்ளது.

குரங்கு-பி வைரஸின் அறிகுறியும் தீவிரமும்: இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தொற்று உடலுக்குள் ஏற்பட்டு மூன்று முதல் ஏழு நாட்களுக்குள்ளோ அதிகபட்சமாக ஒரு மாதத்துக்குள்ளோ முதல் கட்ட அறிகுறிகள் தெரிந்துவிடும். சாதாரண சளி காய்ச்சலுக்கு உண்டான உடல் சோர்வு, தசைவலி, உடல் உஷ்ணம், தலைவலி போன்றவைதான் இந்தத் தொற்றுக்கான முதல்நிலை அறிகுறிகள். பின் தொடர்ச்சியாக மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், இடுப்பு வலி, அதிகப்படியான விக்கல் போன்றவை தெரியவரும்.

முறையான சிகிச்சை எடுக்காதபட்சத்தில் ஒருகட்டத்தில் நரம்பியல் பிரச்னைகள், அழற்சி போன்றவை ஏற்பட்டு, தசை சார்ந்த தீவிர சிக்கல் (தசைகளை அசைக்கமுடியாமை) ஏற்படலாம் என அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடுக் கழகம் கூறியுள்ளது. மூளை மற்றும் நரம்பியல் பிரச்னைகள் ஏற்பட்டு, இறுதியில் இறப்பும் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

குரங்கு-பி வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பு யாருக்கு அதிகம்? - தற்போது இந்த வைரஸால் இறந்திருக்கும் இந்நபர், கால்நடை அறுவைசிகிச்சை மருத்துவர் என்பதால் தனது பணியின் ஓர் அங்கமாக பாதிக்கப்பட்ட ஒரு குரங்குக்கு அவர் அறுவைசிகிச்சை செய்திருக்கிறார். அறுவைசிகிச்சையின்போது குரங்கின் ரத்தம் வழியாக அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இப்படியான கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள், கால்நடைகளின் மாதிரிகளை பரிசோதிக்கும் ஆய்வகங்களை சேர்ந்தவர்கள், குரங்குகளின் சடலங்களை சுமப்பவர்கள் போன்றவர்களுக்குத்தான் இந்த குரங்கு-பி வைரஸ் நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

1997-ல், ஆய்வாளர் ஒருவர் இந்த குரங்கு-பி வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு குரங்கின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியை பரிசோதித்தபோது, அவர் கண்ணில் அந்த மாதிரி தெறித்துவிட்டது. இதனால் தொற்றுக்கு உள்ளான அவர், பின்னாட்களில் இறந்தும்விட்டார். இப்படியான முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே இந்த பாதிப்புக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கு தடுப்பூசி ஏதுமில்லை என்பதால், இதை தடுப்பதற்கு வழியேதுமில்லை.

மனிதர்களிடமிருந்து மனிதருக்கு இது அதிகம் பரவுவதில்லை என்பதால், மக்கள் இதுபற்றி அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேபோல, இது காற்றில் பரவும் வைரஸ் தொற்றும் இல்லை என்பதால் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு இது பரவும் என்றும் கிடையாது. குரங்குகள் சார்ந்து இயங்கும் முன்களப் பணியாளர்கள் மட்டும் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுடன் இருந்தால் இந்த நோய்ப்பரவலை எளிதாக தடுக்கலாம்.

தகவல் உறுதுணை: CDC