மறைந்த இயக்குநர் தாமிரா இயக்கிய சினிமா மெஹர். 2015ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சிப் படமான இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கிறது. கவிஞர் ராஜாத்தி சல்மா, பிரகதீஸ்வரன், பவா செல்லத்துரை ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
தமிழ் இஸ்லாமியர்களின் வாழ்வியலை யதார்த்தமாக பதிவு செய்த சினிமாக்கள் ரொம்பவே குறைவு. மெஹர் அப்படியொரு பதிவை செய்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய ‘பாயம்மா’ எனும் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்த சினிமா எடுக்கப்பட்டிருக்கிறது.
கணவனை இழந்த நிலையிலிருக்கும் மெஹர் மாமி கதாபாத்திரத்தில் சல்மா நடித்திருக்கிறார். மகன் ரஷீத் உள்ளூரில் சின்ன நகைக்கடையில் வேலை செய்கிறார். திருமண வயதிலிருக்கும் மகள் யாஸ்மினுக்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறார் மெஹர். குடும்ப வறுமையும், வரதட்சணை முறையும் எப்படி மெஹர் குடும்பத்தில் சிரமங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நோக்கி நகர்கிறது திரைக்கதை.
இஸ்லாமியர்களின் வழக்கப்படி மணமகனே மணமகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பதிவு செய்கிறது இந்த சினிமா. ஆனால் காலச் சூழலில் அம்மதத்தைச் சேர்ந்த சிலர் மார்கத்திற்கு மாறாக எப்படி பெண்வீட்டாரின் உழைப்பை வரதட்சணையாக கோருகிறார்கள் என இந்த சினிமா விவாதிக்கிறது.
நேர்மையான மகனாக இருக்கும் ரஷீத் தனது சகோதரியின் திருமணத்திற்காக பணம் சேகரிக்க எடுக்கும் முடிவுகளும் அதனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் என நீள்கிறது கதை.
ஒரு கதையாக மெஹர் முன்னெடுக்கும் விவாதங்கள் சரி என வைத்துக் கொள்வோம். ஆனால் இது சினிமாவாக மாறியிருக்கிறதா என்றால் சந்தேகம் தான். பாத்திரங்களின் செயற்கையான நடிப்பும், வசன உச்சரிப்பும் ரசிக்கும் படியாக இல்லை. ஆனால் எந்த கதாபாத்திரமும் வெறுமனே திரையினை நிரப்ப உருவாக்கப்படவில்லை. எல்லா கதாபாத்திரத்திற்கும் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது.
இந்த சினிமாவில், யாஸ்மின் தன் தோழியிடம் பேசும் காட்சி முக்கியமானது. யாஸ்மினின் தோழி கேட்கிறாள் “ஏன் யாஸ்மின் உனக்கு எப்டி மாப்பிள்ளை வேணும்...” யாஸ்மின் “எனக்கு அது பத்தி எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. கல்யாணம் ஆனா வெளியுலகத்த பார்க்கலாம். இந்த சிறையிலிருந்து வெளிய போகலாம். பாட்டு கேட்கலாம்.” என்கிறார். தன் வீடே சிறையாக இருக்கும் பல இளம்பெண்களின் குரலாக யாஸ்மினின் சொற்கள் நம்மை வந்தடைகின்றன.
விவாதிக்கத் தேவையான கதை. கொஞ்சம் செயற்கைத் தனங்களை தவிர்த்திருந்தால் நல்ல சினிமாவாக வந்திருக்கும். ஆனால் மெஹர் பேசும் நியாயங்களுக்காக ஒரு முறை பார்க்கலாம்.