சிறப்புக் களம்

'பத்திரிகையாளர்களும் முன்களப்பணியாளர்களே' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பயன்கள் என்னென்ன?

நிவேதா ஜெகராஜா

'கொரோனாவுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே' என தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 4) அறிவித்திருந்தார். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள் - சலுகைகள் என்னென்ன என்பதை நமக்கு விளக்குகிறார் மருத்துவ செயற்பாட்டாளர் சாந்தி ரவீந்திரநாத்.

முன்கள பணியாளர்களாக பத்திரிகையாளர்களை அறிவிப்பது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ''மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்'' என கூறியிருந்தார். தமிழகத்தில் மட்டுமன்றி குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா உட்பட பல மாநில அரசுகளும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தன. மாநில அரசுகள் தொடர்ந்து அதிகரித்து வரும்போதிலும், மத்திய அரசு சார்பில் இப்படியான எந்த அறிவிப்பும் வரவில்லை.

இதுபற்றி மருத்துவச் செயற்பாட்டாளர் சாந்தி பேசும்போது, "முன்களப் பணியாளர்கள் என்ற பார்வையின்கீழ், தடுப்பூசி போடுவதில் இனி பத்திரிகையாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படக்கூடும். அடுத்தபடியாக, கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பத்துக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படும்.

இவை இரண்டும்தான் முன்களப் பணியாளர்களுக்கான பாதுகாப்பீடு. இழப்பீட்டை பொறுத்தவரை, மத்திய அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக சேர்க்கவில்லை என்பதால், அவர்கள் அறிவித்திருக்கும் 50 லட்ச ரூபாய், இழப்பீடு தொகையாக குடும்பங்களுக்குக் கிடைக்காது. மாறாக மாநில அரசு ஒதுக்கீடு செய்யும் இழப்பீடுதான் வழங்கப்படும். தமிழகத்தில் இந்தத் தொகை ரூ.25 லட்சம் என்றிருக்கிறது. ஆகவே அதுதான் கிடைக்கும்.

இதுவொரு பக்கம் இருந்தாலும், கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் இறப்புகள் அதிகம் நிகழ்ந்து வருவதால் கொரோனாவால் உயிரிழக்கும் நிறைய மருத்துவர்களின் குடும்பத்துக்கே இழப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஆகவே, இனிவரும் முன்களப் பணியாளர்களுக்கும் முழுமையாக கிடைக்குமா, அதுவும் உடனே கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இந்த இரண்டையும் தாண்டி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஊடகவியலாளர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவமனைகளில் தனி வார்டுகளை உருவாக்கிட வேண்டும் என்பது மருத்துவர்கள் நல சங்கம் சார்பாக நான் வைக்க விரும்பும் கோரிக்கை.

இதைக் குறிப்பிட்டு சொல்லக் காரணம், இப்போது பரவும் உருமாறிய கொரோனா வகை, மிகவும் வேகமாகவும் தீவிரமாகவும் பரவிவருகிறது. அப்படியான சூழலில், நம் முன்களப் பணியாளர்கள் மத்தியில் நோய்த் தடுப்பு மற்றும் அவர்களை இறப்பை தடுப்பு ஆகிய இலக்கை நோக்கியே நாம் இப்போது செயல்பட வேண்டும். அதற்கே முக்கியத்துவம் தரவேண்டும். எங்களுடைய இந்தக் கோரிக்கை, முன்களப் பணியாளர்கள் உயிரோடு இருக்கும்போதே, அவர்கள் கோவிட் பாசிடிவ் ஆகும்போது, அவர்களின் நலன்காக்க உதவும் என்பதால், அரசு இதை ஏற்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு சலுகைகளிலுமே மத்திய அரசின் கோட்பாட்டின் கீழ் பத்திரிகையாளர்கள் வரமாட்டார்கள். ஆகவே அவர்கள் இந்த விஷயத்தில் மத்திய அரசிடமிருந்து எதையும் எதிர்ப்பார்க்கமுடியாது. மத்திய அரசு, விரைவில் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்" என்றார்.

அதேவேளையில், முழு ஊரடங்கு காலங்களிலும், கடும் கட்டுப்பாட்டுச் சூழலிலும் பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளை தனிமனித இடைவெளியுடன் சுதந்திரமாக செய்வதற்கு முன்களப்பணியாளர்கள் என்ற நிலை உறுதுணைபுரிகிறது.