உத்தரப் பிரதேச தேர்தலில் தனித்து களம் காணப்போவதாக அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, 2007-ல் வெற்றிபெற்றது போல் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றும் வியூகங்களில் ஒன்றாக பிராமண சார்பு கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சற்றே விரிவாகப் பார்ப்போம்.
உத்தரப் பிரதேசத்தில் 2007-ல் பகுஜன் சமாஜ் ஆட்சியை பிடித்ததில் முக்கிய பங்கு மாநிலத்தில் 10 - 12 சதவிகிதம் உள்ள பிராமணர்கள். அதன்பின் பிராமணர்கள் தங்கள் கவனத்தை பாஜக பக்கம் திருப்ப, பகுஜன் சமாஜின் எழுச்சி என்பது இல்லாமல் போனது. வரவிருக்கும் தேர்தலில் அப்படி நடக்கக் கூடாது என்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களை குறிவைத்து 2007 ஃபார்முலாவை மீண்டும் செயல்படுத்த தொடங்கியிருக்கிறார்.
பிராமணர்கள் வாக்குக்காக பகுஜன் சமாஜ் மீண்டும் பிராமணர்களிடையே தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. இதற்கு பிஎஸ்பி தலைவர் மாயாவதியின் நெருங்கிய உதவியாளர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா தலைமை தாங்குகிறார். சதீஷ் சந்திர மிஸ்ரா, ஒரு பிராமணர். 2007-ல் ஆட்சியை பிடித்தபோது பிராமணர் வாக்குகளை பெற்றதில் முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. இப்போது மீண்டும் மாயவதிக்காக அவர் தனது தந்திரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
முதலாவதாக பிரபுத் கூட்டமைப்புகள் எனப்படும் அறிவொளி பேரணிகள், பைச்சாரா எனப்படும் கூட்டங்களை நடத்தி வருகிறது. லக்னோவில் நடந்த கூட்டத்தில் மாயாவதி பிராமணர்கள் சந்தித்துவரும் பிரச்னைகளின் முக்கியத்துவத்தை, அவர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதேபோல் அயோத்தியில் நடந்த கூட்டத்தில் பேசிய சதீஷ் மிஸ்ரா, மாநிலத்தில் பிராமணர்கள் மீது நடத்தப்பட்ட துன்புறுத்தல்கள், ராமர் கோவில் கட்டுவதில் தாமதம் மற்றும் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட அமர் துபேயின் மனைவி குஷி துபே கைது செய்யப்பட்டது போன்ற பிரச்னைகளை முன்வைத்து பேசினார்.
``பாஜக ஆட்சியில் பிராமண சமூகம் ஒடுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறது. பிராமணர்கள் ஆதரவு கொடுக்கும்போது, அனைத்து சமூகங்களும் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் பாஜக தனது குறுகிய மனப்பான்மை கொண்ட மனதால் கடவுள் ராமரை தங்களுக்கு சொந்தமானவர் என்று நினைத்துக்கொள்கிறார்கள். கடவுள் ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். அவர்கள் ராமரை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும்போது நாங்கள் வருந்துகிறோம்" என்று சதீஷ் மிஸ்ரா காட்டமாக பேசினார். இதேபோல் மாயாவதியும் ராம் மந்திரங்களை எழுப்பியும், சம்ஸ்கிருத மந்திரங்களையும் சொல்லியும் பேசினார்.
யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பிராமணர்களிடையே ஓர் அதிருப்தி இருப்பதாக பகுஜன் சமாஜ் நினைக்கிறது. மேலும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு மாற்று கட்சியாக தங்களை முன்னிறுத்த இந்த விஷயங்களை எழுப்பி வருகிறது. 15 வருடங்களுக்கு முன்பு போன்று பிராமண அரசியல் இன்றைய சூழலில் வெற்றிபெறுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால், முன்பு வட இந்தியா மண்டல் கமிஷன் தொடர்பாக கொந்தளிப்பில் இருந்தது. அப்போது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் அரசியல் ஆதிக்கத்தால் உயர் சாதியினர், குறிப்பாக பிராமணர்கள் ஒருவித அச்சத்தை எதிர்கொள்ளும் உணர்வில் இருந்தனர்.
இந்த அச்சத்தின் காரணமாக, உத்தரப் பிரதேச பிராமணர்கள், அப்போது பிறப்படுத்தப்பட்ட சமூகங்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டு வந்த முலாயம் சிங் யாதவின் செல்வாக்கை தடுக்க, பட்டியலின மற்றும் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் ரைஸிங் ஸ்டாராக இருந்த மாயாவதி பக்கம் திரும்பினர். இந்த நேரத்தில் பாஜகவும், காங்கிரஸும், முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது சமாஜ்வாதி கட்சியை எதிர்கொள்ள மாயாவதிக்கு மறைமுக ஆதரவு கொடுத்தனர் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆதரவு காரணமாக 2007-ல் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தார் மாயாவதி.
ஆனால், இன்று நிலைமை மிகவும் மாறுபட்டு உள்ளது. மாயாவதியை பின்பற்றுவதில் ஜாதவ் அல்லாத பட்டியலின மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வெகுவாக குறைந்து விட்டனர். ஜாதவ் போன்ற சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இப்போது பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போன்ற தலைவர்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டனர். கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உத்தரப் பிரதேசத் தேர்தலின்போது முஸ்லிம்கள் மத்தியில் மாயாவதிக்கு நிறைய ஆதரவு இருந்தது.
ஆனால், அவர்களும் இப்போது மாயாவதிக்கு ஆதரவு கொடுப்பார்களா என்பது தெளிவில்லை. இதனை உணர்ந்தே பிராமண ஆதரவை கையிலெடுத்துள்ளது பகுஜன் சமாஜ். லக்னோவை சேர்ந்த மூத்த பிராமண அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, ``யோகி ஆதித்யநாத் வெளிப்படையாக தாகூர்களுக்கு ஆதரவளித்து, கட்சியின் முக்கிய பிராமண தளத்தை கைவிட்டுவிட்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிராமணர்களில் ஒரு பிரிவினர் பாஜகவுக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினாலும், அவர்கள் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது சமாஜ்வாடி பக்கம் செல்லாமல், மாயாவதியை நோக்கி சாய்ந்திருக்க வாய்ப்பிருக்குமா என்பது போகப்போக தான் தெரியும்" என்று 'தி குவின்ட்' தளத்துக்கு பேசியிருக்கிறார்.
என்றாலும், மாயாவதியின் இந்த பிராமண சார்பு அவரின் முக்கிய வாக்கு வங்கியான பட்டியலின மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் உள்ள முக்கிய பட்டியலின ஆர்வலர் ஒருவர், ``மாயாவதி உடன் தலித்துகளிடையே அதிகரித்து வரும் விரக்தி, சதீஷ் மிஸ்ரா தலைமையிலான பிராமண கூட்டங்களுக்கு பிறகு இன்னும் ஆழமாக வளர வாய்ப்புள்ளது. கன்ஷி ராமால் உருவாக்கப்பட்ட பகுஜன் சமாஜ் தனது தலித் சித்தாந்தத்திலிருந்து விலகிச் செல்வதாகவும், சதீஷ் மிஸ்ரா பெஹென்ஜியை (மாயாவதி) தவறாக வழிநடத்தி வருவதாகவும் தலித் மக்கள் மத்தியில் ஒருவித உணர்வு ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இதுபோன்ற காரணங்களால் மாயாவதியின் பிராமண சமூக ஆதரவு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.
- மலையரசு
தகவல் உறுதுணை: The Quint, The Print
| தொடர்புடைய செய்திக் கட்டுரை: சமூகப் பிரதிநிதித்துவம், நேரடி அணுகுமுறை... பிரியங்காவின் உ.பி. தேர்தல் கள வியூகங்கள்! |