சிறப்புக் களம்

'மஸ்க்ரத் டேன்ஸ்' இது புதுச்சேரியின் ஸ்ட்ரீட் ஆர்ட் 

'மஸ்க்ரத் டேன்ஸ்' இது புதுச்சேரியின் ஸ்ட்ரீட் ஆர்ட் 

EllusamyKarthik

நார்னியா படத்தில் வரும் காட்சி போல புலி, சிங்கம், சிறுத்தை, கரடி, ஆடு, மாடு, கிளி, பேய் என ஒரே நேரத்தில் விலங்குகளின் முகமூடி அணிந்து கொண்ட மனிதர்கள் சிலர் தடபுடலாக மாஸ் காட்டி ஆடுகின்ற கலை தான் மஸ்க்ரத் டேன்ஸ். 

புதுச்சேரியின் தனித்துவமிக்க அடையாளங்களில் மஸ்க்ரத் டேன்ஸும் ஒன்று என்கின்றனர் புதுச்சேரி மக்கள். 

இது தொடர்பாக மஸ்க்ரத் நடன அமைப்பாளர் அருள்ராஜிடம் பேசினோம்...

"பிரெஞ்சு மக்களோட ஒரு விதமான வழிபாடு தான் இந்த மஸ்க்ரத் நடனம். ஆரம்பத்துல மன்னர் பரம்பரைய சேர்ந்த வகையறாக்கள் பொழுது போக்குறதுக்காக பாமர மக்கள் ஆடின கலை இது. அகோர உருவங்கள் கொண்ட முகமூடிகள முகத்துல போட்டுக்கிட்டு பாக்குறவங்கள சிரிக்க வைக்க நையாண்டித் தனமான நடன அசைவுகளை செய்றது தான் இந்த கலையோட அடிப்படை. 

உலகத்துல இருக்குற எல்லா விதமான உருவங்களோட முகமூடிகளையும் இந்த கலையில பயன்படுத்தலாம். முகத்துல போட்டிருக்கிற முகமூடியோட உருவத்துக்கு ஏத்த மாதிரியான நடன அசைவுகள அப்படியே அசலா கொண்டு வந்து பார்வையாளர்கள குஷிப்படுத்தனும். 

உதாரணமா ஜோக்கர் முகமூடிய போட்டுக்கிட்டு இருந்தா கிறுக்கு தனமா அங்க, இங்க தாவியும், டைவ் அடிச்சும் பார்வையாளர்களை கவரனும். புலி வேஷம் போட்டா பாயனும், குரங்கு வேஷம் போட்டா குட்டிகரணமும் போடணும். இந்த மாதிரி ஒவ்வொரு முகமூடிக்கும் ஒவ்வொரு மூவ்மெண்ட் போட வேண்டியிருக்கும்.         

புதுச்சேரி பிரெஞ்சு நாட்டோட காலனியா இருந்தப்போ மஸ்க்ரத் டேன்ஸ் இங்க பிரபலமாகியிருக்கு. இங்கிருந்து அவங்க வெளியேறினதுக்கு அப்புறமும் அவங்க விட்டுட்டு போன அடையாளத்தோட மிச்சங்கள்ல  ஒண்ணா இந்த மஸ்க்ரத் டேன்ஸும் இருக்கு. 

ஆரம்பத்துல முக்கிய திருவிழாக்கள் நேரத்துல மட்டும் தான் இந்த கலைய பர்பார்ம் பண்ணியிருக்காங்க. 

புதுச்சேரி நகர பகுதியில இருக்குற தமிழ் மக்கள் இந்த கலையில ஈடுபட ஆரம்பிச்சதும் பரவலா எல்லா நிகழ்வுகள்ளையும் இந்த கலை இடம் பிடிச்சிருக்கு. கோவில் திருவிழாக்கள் மட்டுமில்லாம சுப நிகழ்வுகள்ளையும் அடுத்துவங்கள சிரிக்க வைக்குற கேளிக்கை கொண்டாட்ட நிகழ்வா மஸ்க்ரத் அரேங்கேற்றப்படுத்து.

கம்பளி துணிய பயன்படுத்தி தான் மஸ்க்ரத் டேன்ஸ் கலைஞர்களுக்கான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வருது. நம்ம இந்திய கிளைமேட்ல இந்த ஆடைகள போட்டாலே உடலெல்லாம் வேர்த்து சோர்வாக்கிடும். அதையெல்லாம் கண்டுக்காம பார்வையாளர்கள சிரிக்க வைக்குற குறிக்கோளோட டேன்ஸ் ஆட்டிக்கிட்டே இருப்போம். 

மொத்தமா எங்க மஸ்க்ரத் ட்ரூப்புல அம்பது பேருக்கு மேல இருக்கோம். இதுல நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள்ன்னு எல்லாருமே அடங்குவாங்க. இந்த கலைய மட்டுமே வாழ்வாதாரமா நம்பி இருந்த கலைஞர்களும் வருமானம் ஏதும் கிடைக்காததுனால, மாத்து வேலைக்கு போய்ட்டாங்க. 

இந்த கலைய உயிர்ப்போட இருக்க செய்யணும்னு விரும்புற சில இளைஞர்களோட ஒத்துழைப்புல தான் இப்போ அரங்கேற்றம் நடந்துகிட்டு வருது” என்றார்.

ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை கொண்ட முகமூடிகளை இந்த கலைஞர்கள் அணிந்து மஸ்க்ரத் நடனம்  ஆடுவது கிடையாது.

“மஸ்க்ரத் டேன்ஸுக்கு மக்கள் மத்தியில முன்னயிருந்த மாதிரி பெரிய அளவுல வரவேற்பு இல்லாததுனால புதுச்சேரி அரசாங்கத்தின் கலைபண்பாட்டுத் துறையின் மூலமாக முக்கிய அரசு விழாக்கள்ல மட்டும் தான் இந்த கலைய இப்போ அரங்கேற்றம் செய்துகிட்டு வர்றோம். அடுத்த தலைமுறையினரிடம் இதை கொண்டு போகிற விதமா இளைஞர்களுக்கு இதுல ஸ்பெஷல் டிரைனிங் கொடுத்து வர்றோம்” என நம்பிக்கை தளராமல் பேசுகிறார் மஸ்க்ரத் நடன கலைஞரான ஜோதி.

எல்லோரையும் மகிழ்வித்து வாழ நினைக்கும் மஸ்க்ரத் கலைஞர்களின் வாழ்வில் பல வலியும், சோகமும் நிறைந்ததாகவே கடந்து கொண்டிருக்க இப்போது கடந்து கொண்டிருக்கிறது.