"Let's go to school
So we never retire
I will never look my back
Pick up your shoes
Pull up your socks and go..."
சமீபத்தில் திரும்பத் திரும்ப மனதில் அலைபாய்ந்து கேட்கத்தூண்டிய இந்த பாடல், வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. கூடவே சமூக அக்கறையும் இந்தப் பாடல்ல உண்டு. அப்படியென்னங்க அந்தப் பாடல்ல இருக்குனு நீங்க கேட்கலாம். ஆக்சுவலி, இந்தப் பாடல் முழுவதும் சின்ன சின்ன குழந்தைகள், பள்ளி சுட்டீஸ் பலரும் சந்தோஷமாகவும், குதூகலமாகவும் ஆட்டம் போடுவாங்க. இந்த ஒரு பாடல்ல மட்டுமில்ல. இவங்க எல்லோரும் இணைஞ்சு, பல பாடல்களுக்கு நடனம் ஆடியிருக்காங்க.
கொரோனா தொற்று தொடங்கியபோது, உலகமே தன்னை லாக்டவுனுக்காக வீட்டிற்குள் முடக்கிக் கொண்டது, எல்லோருக்கும் நினைவிருக்கும். வீடுகள் மட்டுமன்றி, பள்ளிகளும் இந்த காலகட்டத்தில் மூடப்பட்டன. வீடுகள் மூடப்பட்டபோதும், மொபைல் ஃபோன் எதுவும் மூடப்படவில்லை. அதனாலேயே உலகம் ஆன்லைன் வழியாக விரிவடையத் தொடங்கியது. குழந்தைகளுக்கு ஆன்லைன் வழி கற்றல் தொடங்கியது. அப்போதுதான் ஆப்ரிக்காவைச் சேர்ந்த அந்தக் குழந்தைகளுக்கு ஒரு யோசனை பிறந்தது. `அட நாம ஏன் நடனம் மூலமா விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடாது..?’ என்பதுதான் அந்த யோசனை. நடனம் மட்டும் பத்தாது, அது மூலமா சமூகத்தில் மாற்றத்தையும் ஏற்படுத்தனும் என்று முடிவு செய்தது அந்தக் குழந்தைகள் குழு.
அப்படி அவர்கள் அன்று தொடங்கியதுதான், இன்று தொற்று குறையத்தொடங்கியதும், குறிப்பாக மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பமானவுடன், லாக்டவுனில் இருந்த குழந்தைகள் மீண்டும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் பள்ளிக்குச் செல்லும் வகையிலான ஊக்கப்படுத்தும் வீடியோக்கள் உருவாகக் காரணமாக அமைந்துள்ளது.
யூ-ட்யூப்பில் மட்டும், கிட்டத்தட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ் இருக்கும் நிலையில், இவர்களுடைய பேஸ்புக், இன்ஸ்டா பக்கம் விசிட் அடித்து பார்த்தால், அங்கேயும் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கொட்டிக்கிடக்கிறார்கள். அப்படி என்னதான் இந்தச் சுட்டிகளிடம் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ள, இவர்களின் பிற வீடியோக்களையும் தேடிப்போய் பார்த்தோம். இவர்களின் தனி சிறப்பே அந்த நடனமும், நடனத்துடன் முகத்தில் அரும்பும் மழலை மாறா சிரிப்பும் தான்.
கண் இமைக்கும் நேரத்தில் பல ஸ்டெப்ஸை அசால்டாக போடும் இந்த மழலைகள், மைக்கேல் ஜாக்சன் தொடங்கி பிரபுதேவா வரை நடன ஜாம்பவான்களின் அசாத்திய நடனத்தை நமக்கு நினைவில் கொண்டு வந்துவிடுகின்றனர். அட யார்தான்பா இந்த கிட்ஸ் என்று இன்னும் இன்னும் தேடினோம். அப்போ எங்களுக்கு தெரிஞ்ச, அவர்களோட உலகத்தை உங்களோட பகிர்ந்துக்கிறோம், வாங்க!
கிழக்கு ஆப்பிரிக்கா பகுதியில் உள்ள உகாண்டாவில் அமைந்துள்ளது மசாக்கா(Masaka) நகரம். சுமார் 4.57 கோடி மக்கள் வசிக்கும் உகாண்டாவில் 18 சதவிகித மக்கள் கடும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, 2021ம் ஆண்டு கணக்குப்படி 28 சதவிகித மக்கள் கடுமையான வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் மிகவும் ஏழையான நாடுகளின் பட்டியலிலும் உகாண்டா உள்ளது. போரினாலும், நோய் தொற்றினாலும், வறுமையின் காரணமாகவும் தங்கள் தாய், தந்தையை இழந்து வாடும் பிள்ளைகளுக்கென, பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களும் செயல்பட்டு வருகின்றன. இப்படி செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக்க முயற்சி செய்து வருகின்றனர் அங்கிருக்கும் சில சிறுவர்கள் (யெஸ், நம்ம மேல சொன்ன அதே சுட்டீஸ்தான்). இதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள மிகப்பெரிய ஆயுதம், பாடல் மற்றும் நடனம்.
தங்கள் பெற்றோருடன் குட்டி குட்டி குடிசை வீடுகளில் வசிக்கும் இந்தக் குழந்தைகள், தங்களுக்கு கிடைக்கும் பணத்தை வைத்து மசாக்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றை மையமாக வைத்து, தங்களைப் போன்ற பிற குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். பாடுவதிலும், நடத்திலும் திறமை வாய்ந்த சிறுவர்கள் பலர் இணைந்து தங்களுக்கென உருவாக்கியதே `மசாக்கா கிட்ஸ் ஆஃப்ரிகானா' குழு. இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் யூ-டியூப் சேனலை தொடங்கினர். 'DANCE, RISE & SHINE'என்பதே இவர்களின் மோட்டோ.
இந்த குழுவில் இரண்டு வயது குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வரையிலான அனைத்து சிறாரும் தங்களின் பங்கை கொடுத்து வருகின்றனர். `படிப்பை மட்டும் கைவிட்றாத சிதம்பரம்’ என அசுரன் படத்தில் தனுஷ் சொல்வதை, இந்த சின்ன வயதில் நிஜ வாழ்க்கையில் பிறருக்கும் சொல்லி, அதற்கான எடுத்துக்காட்டாக தாங்களும் திகழ்ந்து வரும் இந்த சுட்டீஸ், தங்களுடைய ஒவ்வொரு வீடியோவிலும் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நடத்தின் மூலமாக விழிப்புணர்வு வீடியோவாக பதிவு செய்கின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் பணத்தை, அதாவது ஒவ்வொரு ரூபாயையும், இவர்களைப் போன்ற ஆப்பிரிக்க குழந்தைகளின் கல்வி, உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி மற்றும் உடைக்காக செலவழிக்கின்றனர்.
பல்வேறு இசைக்கலைஞர்களின் பாடல்களுக்கு நடனமாடி தங்கள் யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 2020ம் ஆண்டில் 8-வது வருடமாக நடத்தப்பட்ட AFRIMMA – African Muzik Magazine Awards-ல் சிறந்த ஆப்பிரிக்க நடனக் கலைஞர்கள் குழுவிற்கு இந்த சுட்டீஸ் பரிந்துரை செய்யப்பட்டனர். அதேபோல் உகாண்டாவைச் சேர்ந்த யூ-டியூப் பிரபலங்களில் இரண்டாவதாக கோல்டன் க்ரையேட்டர் விருதை பெற்றவர்களும் இவர்களே. இவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும், பார்வையாளர்களின் முகத்தில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துவிட்டு, அரங்கம் அதிரும் வகையில் கைத்தட்டல்களை பெற்றுச் செல்கின்றனர். இவர்களின் பல்வேறு வீடியோக்கள் மில்லியன் வியூஸ் தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.
ஒருபக்கம் `இந்தக் கால குழந்தைகளை இண்டர்நெட்தான் கெடுக்கிறது, இந்த வயசுல இவ்வளவு சோஷியல்மீடியா எக்ஸ்போஷரா...’ என்றெல்லாம் நாம் நம் குழந்தைகளிடம் கேட்டுக்கொண்டு, மற்றொருபக்கம் அவர்களின் க்யூட் விஷயங்களை மொபைல் முன்னே செய்ய வைக்கும் நிலையில் நாம் எல்லோரும் வாழ்ந்துகொண்டிருக்கும் இதே உலகின் இன்னொரு மூலையில், `எங்க வாழ்க்கையையே மாத்துறது, இந்த இணையதளம்தான். எதையும் சரியா உபயோகிச்சா, நம்ம வாழ்க்கையே மாறும்’ என்று நமக்கு மொபைல் வழியே பாடமெடுக்கின்றனர் இந்தக் குட்டீஸ். அவர்கள் சொல்வதும் சரிதானே! இனியாச்சும் இண்டர்நெட்டை நல்ல விஷயத்துக்கும் சரியான விஷயத்துக்கும் பயன்படுத்துவோம்!