சிறப்புக் களம்

உயிரைக் குடிக்கும் கந்து வட்டி

உயிரைக் குடிக்கும் கந்து வட்டி

webteam

கந்து வட்டிக் கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டில் பரவலாக உலாவும் கொடிய நோய்.. உயிரைக் குடிக்கும் இந்த நோய்க்காக யாரும் போய் அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற முடியாது. அரசு அலுவலகத்தின் முன் நீதி கேட்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் இன்று நடந்துள்ளது. .நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் 4 பேர் தீக்குளித்தனர். அதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 
இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் கந்து வட்டி தொடர்பாக புகார் தெரிவிப்பதற்காக தனி எண்களை அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த ஏழைக் குடும்பத்தினரின் உயிர் திரும்ப கிடைத்து விடப்போவதில்லை. 
தற்கொலை செய்து கொள்வது சட்டத்திற்கு எதிரானது. ஆனால் ஏழையை உயிருடன் வாழ வைக்க இந்த சட்டம் எந்த அளவுக்கு உதவுகிறது என்பது கேள்விக்குறிதான். சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இங்கே மலையளவு வித்தியாசம். தமிழகத்தில் விஷம் போல் வளர்ந்துள்ள இந்தக் கந்து வட்டிக்கு பல்வேறு  வடிவங்கள் உள்ளன.

நாள் வட்டி
காலையில் கடனாகப் பெறும் 900 ரூபாயை 100 ரூபாய் வட்டியுடன் 1000 ரூபாயாக மாலையில் திருப்பிக் கொடுப்பது நாள் வட்டி எனப்படும். 
ராக்கெட் வட்டி
1000 ரூபாய் கடன் வாங்கி, தினமும் 100 ரூபாய் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாயை திருப்பிச் செலுத்துவது ராக்கெட் வட்டி. அதாவது ஆயிரம் ரூபாய்க்கு பத்தே நாளுக்கு ஆயிரம் ரூபாய் வட்டி.
வாரவட்டி
கடன் தொகையில் 15 சதவிகிதத்தை முன்கூட்டியே பிடித்தம் செய்து கொண்டு கொடுப்பது வார வட்டி. 10000 ரூபாய் கடன் பெறும் ஒருவருக்கு ரூ.1500 பிடித்துக் கொண்டு ரூ8500 கொடுக்கப்படும். அவர் வாரம் ஒரு முறை ஆயிரம் ரூபாய் வீதம் 10 வாரத்தில் கடனை செலுத்த வேண்டும். 
கம்ப்யூட்டர் வட்டி
வாங்கிய 8 ஆயிரம் ரூபாயை 10 ஆயிரம் ரூபாயாக ஒரு வாரத்துக்குள் திரும்பச் செலுத்துவது கம்ப்யூட்டர் வட்டியாகும். அதாவது 8 ஆயிரம் ரூபாய்க்கு வாரத்திற்கு ரூ.2000 வட்டி.
மீட்டர் வட்டி
நடுத்தர மக்கள் அதிகம் வாங்குவது மீட்டர் வட்டி. ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால், 85 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். கடன் பெற்றவர், வாரம் 10 ஆயிரம் ரூபாய் வீதம், 10 வாரங்கள் செலுத்த வேண்டும். தவறினால், வட்டி கூடிக் கொண்டே போகும். 
ரன்வட்டி
மணிக்கணக்கில் தரப்படும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. காலை 6 மணிக்கு பணம் வாங்கினால், 4 மணி நேரத்தில் 15 சதவீத வட்டியுடன் பணத்தைத் திருப்பி தந்து விட வேண்டும். தவறினால், வாடகைக்கார் வெயிட்டிங்கின்போது மீட்டர் ஏறுவதைப்போல மணிக்கு மணி வட்டி ஏறிக்கொண்டே போகும். இதிலேயே ஹவர் வட்டியும் உண்டு. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் வட்டியை கணக்கிட்டு வசூலிக்கும் வட்டி இது. 
நீண்ட கால வட்டி
சொத்து பத்திரங்களை வைத்து ஒப்பந்த ஆவணத்தில் கையெழுத்துப் போட்டு வாங்கும் மாதவட்டி எனும் நீண்டகால வட்டியும் உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மொத்த கடன் தொகையையும் செலுத்தாவிட்டால் சொத்துகளை இழக்கும் அபாயம் இதில் உண்டு.