David Willey
David Willey pt desk
சிறப்புக் களம்

”ஏமாற்றமாக இருக்கிறது” கடைசி போட்டியில் ஆட்ட நாயகன்: அசத்தல் பெர்ஃபாமன்ஸோடு விடைபெற்ற டேவிட் வில்லி!

PT WEB

போட்டி 44: இங்கிலாந்து vs பாகிஸ்தான்

முடிவு: 93 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து: 337/9

பாகிஸ்தான்: 244 ஆல் அவுட் (43.3 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: டேவிட் வில்லி (10-0-56-3 & 5 பந்துகளில் 15 ரன்கள்)

David Willey

தன் கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீசக் களமிறங்கிய வில்லி, பெரும் தாக்கம் ஏற்படுத்தத் தேவைப்பட்டது வெறும் 2 பந்துகள் தான். இடது கை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வலது கை பேட்ஸ்மேன்கள் எப்படி அவுட் ஆவார்களோ அதேபோன்றதொரு டிஸ்மிசல் தான் அது. வெளியே பிட்சாகி உள்நோக்கி வந்த பந்தை ஆடத் தவறி LBW ஆகி வெளியேறினார் அப்துல்லா ஷஃபீக். அவரது அடுத்த விக்கெட்டோ இன்னும் பெரியதாக அமைந்தது. கடந்த சில போட்டிகளாக முரட்டு அடி அடித்துக்கொண்டிருக்கும் ஃபகர் ஜமானை தன் இரண்டாவது ஓவரில் வெளியேற்றினார் வில்லி.

மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்ததால் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சற்று நெருக்கடியோடு தான் இருந்தார்கள். வழக்கமாக முதல் 4 ஓவர்களை கடந்துவிட்டு அதிரடி காட்ட நினைக்கும் ஜமான், இந்த முறை வில்லியால் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார். தன் இரண்டாவது ஓவரின் முதல் 3 பந்துகளிலுமே தொடர்ச்சியாக வேரியேஷன்கள் காட்டினார் வில்லி. அந்த 3 பந்துகளில் ஒன்றில் கூட ஜமானால் ரன் எடுக்க முடியவில்லை. நல்ல ஷாட் கூட ஃபீல்டரின் கைக்கு தான் சென்றது. அதனால் சற்று பொறுமை இழந்த அவர், நான்காவது பந்தை இறங்கி வந்து தூக்கி அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து பேட்டில் நன்றாகப் படாமல் மிட் ஆன் திசையில் நின்றிருந்த பென் ஸ்டோக்ஸ் கையில் விழுந்தது. கடந்த இரு போட்டிகளிலும் ஒவ்வொரு பௌலரையும் பதம் பார்த்த ஜமானை வெறும் ஒரேயொரு ரன்னுக்கு வெளியேற்றினார் வில்லி!

PAK vs ENG

அடுத்தடுத்த விக்கெட்டுகள் ஏற்படுத்திய நெருக்கடியால் பாபர் ஆசம், முகமது ரிஸ்வான் இருவரும் பொறுமையாகவே விளையாடினார்கள். அதனால் வில்லியின் முதல் ஸ்பெல் மிக அற்புதமாக முடிந்தது. 5 ஓவர்களில் வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். தன் இரண்டாவது ஸ்பெல்லிலுமே ஒரு தாக்கம் ஏற்படுத்தினார் அவர். நன்கு ஆடி அரைசதம் அடித்திருந்த அகா சல்மானை தன் ஏழாவது ஓவரில் வெளியேற்றினார் அவர். இது ஒருநாள் அரங்கில் அவருடைய 100வது விக்கெட்டாக அமைந்தது!

ஜாஸ் பட்லர் இம்முறையும் அவரை தொடர்ந்து 5 ஓவர்கள் பந்துவீசச் செய்தார். கடைசி இரு ஓவர்களில் ஹாரிஸ் ராஃப், முகமது வசீம் ஆகியோர் பௌண்டரிகள் அடித்ததால், இவரது எகானமி அதிகமாகிவிட்டது. மற்றபடி ஒரு பெர்ஃபெக்டான பெர்ஃபாமன்ஸோடு சர்வதேச அரங்கிலிருந்து வெளியேறியிருக்கிறார் வில்லி.

England

முன்னதாக, பேட்டிங்கிலுமே வில்லி தன் திறமையை வெளிப்படுத்தினார். முதல் பந்தையே ஃபைன் லெக் திசையில் தூக்கி அடித்து சிக்ஸராக மாற்றியவர், 5 பந்துகளில் 15 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர் நாங்கள் நினைத்தது போல செல்லவில்லை. அது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்பட்டு என்னுடைய கடைசி போட்டியில் 100வது விக்கெட்டையும் கைப்பற்றியது சிறந்த விஷயம். இப்படி முடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்கள் டிரஸ்ஸிங் ரூமைப் பாருங்கள். அங்கு திறமை கொட்டிக் கிடக்கிறது. நாங்கள் இந்தத் தொடரில் எங்கள் திறமையை வெளிக்காட்டவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது" - டேவிட் வில்லி.

David Willey

டேவிட் வில்லி கரியர்

ஒருநாள் போட்டிகள்

போட்டிகள்: 73

ஓவர்கள்: 538.2

விக்கெட்டுகள்: 100

சராசரி: 29.75

எகானமி: 5.52

ஸ்டிரைக் ரேட்: 32.3

சிறந்த பந்துவீச்சு: 5/30

சர்வதேச டி20 போட்டிகள்

போட்டிகள்: 43

ஓவர்கள்: 144.1

விக்கெட்டுகள்: 51

சராசரி: 23.13

எகானமி: 8.18

ஸ்டிரைக் ரேட்: 16.9

சிறந்த பந்துவீச்சு: 4/7