சிறப்புக் களம்

"மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான்" - கமல் அரசியலின் புதுக்கணக்கு என்ன?

Veeramani

மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான், தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான். எம்ஜிஆரை பற்றி பேசுவதுபோலவே, தேவைப்படும் இடங்களில் கருணாநிதியையும் முன்வைத்து பேசுவேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் செய்து பரப்புரை செய்துவருகிறார். இந்த பரப்புரையில், ஆரம்பம் முதலே எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் நான், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு நான் என்றெல்லாம் கமல் கூறியது பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகளை உருவாக்கியது. இந்த சூழலில்தான் இன்று திருச்சியில் பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யமும் திராவிடக்கட்சிதான், தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள்தான். எம்ஜிஆரை பற்றி பேசுவதுபோலவே, தேவைப்படும் இடங்களில் கருணாநிதியையும் முன்வைத்து பேசுவேன் என்று கூறினார்.

இதனிடையே சென்டரிசம் எனப்படும் மையவாத கொள்கையுடன் கட்சியை நடத்தும் கமல்ஹாசன், தற்போது தங்களுடையதும் திராவிடக்கட்சிதான் என்று கூறியதை அக்கட்சியினரும், அவரின் ஆதரவாளர்களும் எப்படி பார்ப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் இந்த திடீர் பேச்சு, கட்சியின் சுயத்தை பாதிக்குமா என்பதெல்லாம் போகப்போகத் தெரியும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

இதுபற்றி பேசிய மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன் “ அரசியல் ரீதியாக தனக்கென்று எந்த அடையாளமும் இல்லாததால், பிறரின் அடையாளங்களை மோசடியாக கையகப்படுத்த கமல் முனைகிறார். ஏற்கெனவே எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடியவர், தற்போது கருணாநிதியையும் சொந்தம் கொண்டாடத் துடிக்கிறார். மக்கள் பழையபடி ஏமாறத் தயாராக இல்லை, அதனால் அவர்கள் ஏமாறமாட்டார்கள்” எனத் தெரிவித்தார்

இதுபற்றி பேசிய சினேகன் “ எல்லோரின் நன்மைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் எம்ஜிஆரையும், கருணாநிதியையும் முன்வைக்கிறோம். மற்றபடி எந்த தலைவரையும் அபகரித்து கட்சி நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதனால் எங்கள் கட்சியின் சுயம் பாதிக்கப்படாது” என்று கூறினார்

எம்ஜிஆர் மற்றும் கருணாநிதியை முன்வைத்து பேசுவதால் அதிமுக, திமுக கட்சிகளின் வாக்குகள் கமலுக்கு கிடைக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.