சிறப்புக் களம்

தமிழக அரசியலில் நள்ளிரவுகளில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்

தமிழக அரசியலில் நள்ளிரவுகளில் அரங்கேறிய முக்கிய நிகழ்வுகள்

Rasus

கடந்த ஐந்து மாதங்களா‌க தமிழக அரசியலை புரட்டிப்போடும் முக்கிய திருப்பங்கள் பெரும்பாலானவை நள்ளிரவிலேயே அரங்கேறி வருகின்றன. அப்படிப்பட்ட இரவு நேர திருப்பங்களை திரும்பி பார்ப்போம்...

* முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி ‌இரவு 10.15 மணிக்கு திடீர் உடல்நலக்குறைவால் ‌ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இதுதான் அண்மைக்கால அரசியல் சூழலுக்கு வித்திட்ட தொடக்கப்புள்ளியாக இருந்தது.

* 75 நாட்கள் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். மாலை 4 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரின் மரண செய்தி குறித்து வ‌தந்திகள் பரவின. ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்ததாக அதிகா‌ரபூர்வ அறிவிப்பு வெளியானது இரவு 12.30 மணிக்கு தான்.

* ஜெயலலிதா காலமான நேரத்தில் இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே நள்ளிரவு கடந்து 1.30 மணிக்கு‌ ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.

* டிசம்பர் 31-ஆம்‌ தேதி அதிமுக பொதுச்செயலாளராக ‌சசிகலா பதவியேற்ற நிலையில் அதிமுக சட்டமன்றத் குழு தலைவராக பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினமே முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். பிப்ரவரி 7-ஆம்தேதி இரவு 9 மணி அளவில் மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அவர் தியானம் செய்த 45 நிமிடங்கள், இன்னொரு திருப்பத்தை ஏற்படுத்தியது. கட்டாயப்படுத்தி ராஜினாமா பெறப்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார்.

*‌அன்றைய தினம் நள்ளிரவில் அதிமுக பொதுச்செய‌லாளர் சசிகலா ஆவேசமாக பேசி, ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

* இதையடுத்து பல திருப்பங்கள் நடந்தேற, ஆர்கே நகர் இடைத்தேர்தல் நெருங்கிய நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்திற்கு உரிமை கோரின. இந்தச்சூழலில் ‌மார்ச் 22-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்படுவதாக அறிவித்தது தேர்தல் ஆணையம்.

* இரட்டை இலைச்சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில், அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் தினகரனுக்கு கடந்த 19-ஆம் தேதி ‌இரவு 10 40 மணிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர்.

*டெல்லியில் 4 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், ஏப்ரல் 25-ஆம்தேதி இரவு 11 மணி அளவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார் தினகரன்.

* இந்த நிகழ்வுகள் ஒருபுறம் எனில் அதிமுகவின் இரு அணிகளின்‌ இணைப்பு பேச்சுவார்த்தையும் 25-ஆம் தேதி நள்ளிரவே நடந்துள்ளது. மொத்தத்தில் செப்டம்பர் 22-ஆம் தேதியின் இரவுக்குப் பிறகு பல்வேறு திருப்பங்களும் இரவு நேரத்திலேயே நடந்தேறியிருக்கின்றன.