சிறப்புக் களம்

மகா சிவராத்திரியும் அதன் மகத்துவங்களும்..!

webteam

மகா சிவராத்திரியின் மகத்துவங்கள்

இன்று மகா சிவராத்திரி . சிவனுக்கு மிகவும் உகந்த நாள். இன்று இரவு முழுக்க கண்விழித்து சிவன் கோவில்களில் நடக்கும் நான்கு கால பூஜைகளிலும் கலந்துக்கொண்டு சிவனை வழிபட்டால், நாம் விரும்பியதை பெறலாம். பெருமாளுக்கு எப்படி துளசி உகந்ததோ அதேப் போல் சிவனுக்கு வில்வம் மிகவும் உகந்தது.

சிவனைப்போல் கொடுப்பார் எவரும் இலர், என்பர். ஆம் நாம் வேண்டிய வரத்தை தாமதிக்காமல் உடனடியாக கொடுப்பதில் சிவபெருமானுக்கு நிகர் எவரும் இல்லை. இப்படி பட்ட சிவபெருமானுக்கு உகந்த நாள் தான் மகா சிவராத்திரி. இது ஆண்டுக்கு ஒருமுறை மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் வரும். இந்த ஒரு நாள் விரதம் , ஒருவருட விரதமிருந்த பலனை கொடுக்கவல்லது.

சிவராத்திரியின் சிறப்பு

ஒருமுறை அமுதத்திற்காக பாற்கடலை கடைய வேண்டி தேவர்களும், அசுரர்களும் முடிவெடுத்தார்கள். அதற்காக மந்திர மலையை மத்தாகவும், சிவபெருமானின் கழுத்தில் நாகாபரணமாக இருக்கும் வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அவ்வாறு பாற்கடலை கடைந்தபொழுது வாசுகி பாம்பானது வலி பொருக்காமல் ஆலகால விஷத்தை கக்கியது.

அது அமுதத்துடன் கலந்தால் அனைவரும் மடிவது உறுதி என்பதால், சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை தானே உண்டார். இதை கண்ட பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை பிடித்ததால் அவ்விஷமானது அவரின் கழுத்திலேயே தங்கிவிட்டதாக புராணத்தில் ஒரு கதை உண்டு. அதனால் தான் சிவபெருமானுக்கு நீலகண்டன் என்ற பெயரும் ஏற்பட்டது. அத்தகைய நிகழ்வு நடந்த தினம் இந்த சிவராத்திரியில் தான்.


ஒரு சமயம் விளையாட்டாக அன்னை உமாதேவி சிவபெருமானின் கண்களை பொத்தினாள். அச்சமயம் உலகப் பிரளயம் ஏற்பட்டு உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. இந்த நிலையில் அன்னை உமாதேவி அண்டங்கள் மறுபடி தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அதுவும் நடந்தேரியது சிவராத்திரி நன்நாளில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன.

அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றார்.
அதேபோல பிரம்மாவுக்கும் விஷ்ணுவிற்கும் நடந்த போட்டியில் இருவருக்கும் பாடம் கற்பிக்க அடி முடி தெரியா ஒளிப்பிழம்ப்பாய் காட்சி தந்ததும் இந்த சிவராத்திரி நன்நாளில் தான். அர்ஜுனன் பாசுபதா அஸ்திரத்தை பெற்றது , கண்ணப்பர் சிவனிடத்தில் கொண்ட அன்பினால் தனது கண்களை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் , மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்ததும் மகாசிவராத்திரி நன்நாளில் தான்.

சரி கோவில்களில் நடக்கும் 4 கால பூஜைக்கும் எந்தெந்த பொருட்களால் அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்வது சிறந்தது என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம்.

முதல் காலம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - சோமாஸ்கந்தர்
அபிஷேகம் - பஞ்சகவ்யம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை, அலரி
நிவேதனம் - பால் அன்னம், சக்கரைபொங்கல்
பழம் - வில்வம்
வஸ்திரம் - செம்பட்டு
மந்திரம் - இருக்கு வேதம், சிவபுராணம்

திரவியம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
தூபம் - சாம்பிராணி, சந்தணக்கட்டை
தீபம் - புட்பதீபம்

இரண்டாம் காலம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - தென்முகக் கடவுள்
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரைப் பொங்கல்
பழம் - பலா
வஸ்திரம் - மஞ்சள் பட்டு
மந்திரம் - யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
திரவியம் - அகில், சந்தனம்
தூபம் - சாம்பிராணி, குங்குமம்
தீபம்- நட்சத்திரதீபம்

மூன்றாம் காலம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - இலிங்கோற்பவர்
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
நிவேதனம் - எள்அன்னம்
பழம் - மாதுளம்
வஸ்திரம் - வெண் பட்டு
மந்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
திரவியம் - கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
தூபம் - மேகம், கருங் குங்கிலியம்
தீபம்- ஐதுமுக தீபம்

நான்காம் காலம்
வழிபட வேண்டிய மூர்த்தம் - சந்திரசேகரர்
அபிஷேகம் - கருப்பஞ்சாறு, வாசனை நீர்
அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பழம் - நானாவித பழங்கள்
வஸ்திரம் - நீலப் பட்டு
மந்திரம் - அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
திரவியம் - புணுகு சேர்ந்த சந்தணம்
தூபம் - கர்ப்பூரம், இலவங்கம்
தீபம்- மூன்று முக தீபம்

சிவ ராத்திரி விரதம் இருந்து சிவபெருமானின் அருளைப்பெற்றவனைக் கண்டு யமனும் அஞ்சுவார் என்பது மார்கண்டேயன் கதையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். எல்லா யாகங்கள், யக்ஞங்களை விட சிவராத்திரி மிகவும் விசேஷமானது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆகயால் இன்று கண்விழித்து ஆலயம் சென்று “ஓம் நமச்சிவாய” மந்திரத்தை ஜபித்து, சிவனை அருளை பெற்று வளமுடன் வாழலாம்.

- ஜெயஸ்ரீ அனந்த்