சிறப்புக் களம்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மதுரை மாநகராட்சி !

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மதுரை மாநகராட்சி !

webteam

தமிழகம்  முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மதுரை மாநகராட்சியையும் விட்டுவைக்கவில்லை இந்த குடிநீர் பஞ்சம். கடும் வறட்சியினால் நிலவும் குடிநீர் பற்றாக்குறையினால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கும், பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுக்கும் நிலைக்கும் ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இத்தகைய இன்னலை போக்க மதுரை மாநகராட்சியின் 55  வார்டுகுட்பட்ட  ஐராவதநல்லூர் பகுதியில் 2 சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு இந்த வார்டில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு டோக்கனை கொண்டுவந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எடுத்து செல்வதற்கான கட்டமைப்பை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 

   55 வது வார்டுக்குட்பட்ட கிருபானந்த வாரியார் நகர் மற்றும் அந்தோனியார் கோவில் சாலை ஆகிய இரண்டு இடங்களில் இரு  சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கிருபானந்தா வாரியார் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் மாலை 4  மணி முதல் 7 மணி வரையிலும் நாள்தோறும் ஒரு முறையும்,  அந்தோனியார் கோவில் சாலை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் என நாள்தோறும் இரண்டு முறையும் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நாள் ஒன்றிற்கு ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில்  ஸ்மார்ட் கார்டு உள்ள குடும்பத்தினருக்கும் ஸ்மார்ட் கார்டு இல்லாத குடும்பங்களுக்கு குடும்ப தலைவரின் ஆதார் கார்டு ஆவணமாக கொண்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. போர்வெல் மூலமாக கிடைக்கும் நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து தரமானதாக உள்ளதா என முன்னதாக சோதனை செய்த பின்னரே பொதுமக்களுக்கு குடிநீர் விநோயோகம் செய்யப்படுவதாகவும் தற்பொழுது குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் குடிநீர் எடுக்க வரும் மக்களிடம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தி வருவதாகவும் மாநகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். சில வீடுகளில் சுப காரியங்கள் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு கூடுதலாக குடிநீர் தேவைப்பட்டால் பொதுமக்களின் அனுமதியோடு அவர்களுக்கு குடிநீர் கூடுதலாக வழங்கப்படுகிறது. சுத்திகரிப்பு நிலையம் பழுதாகிவிடக் கூடாது என்பதற்காக வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவததில்லை.

ஏழ்மையான நிலையில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வரும்  தங்களுக்கு நாள்தோறும் இரண்டு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருவதும் மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும் எந்தவித சிரமும் இல்லாமல் எளிமையான முறையில் தங்களுக்கு வழங்கியுள்ள டோக்கனை கொண்டு வந்து குடிநீரை எடுத்து செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் இப்பகுதி மக்கள். குடிநீர் தட்டுப்பட்டால் ஒவ்வொரு குடும்பமும்  நாள்தோறும் 50  ரூபாய் வரை செலவு செய்து குடிநீரை பெற்று வரும் நிலையில் தங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ள இந்த திட்டத்தால் பணம் மிச்சமாவதுடன்  நேரமும் வீணாவது தவிர்க்கப்பட்டு எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஒழுங்கு படுத்தப்பட்ட முறையில் குடிநீர் எடுத்து செல்வதாகவும் கூறுகின்றனர்

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்பதால் தூய்மையானதாகவும், சுகாதாரமான குடிநீராகவும் இருப்பதாக கூறும் பொதுமக்கள் இங்குள்ள குடியிருப்பு வாசிகள் மட்டுமல்லாமல் கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளிகள், விவசாயிகள் என பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப குடிநீர் இலவசமாக வழங்கப்படுவதாகவும் பெருமிதம் கொள்கின்றனர்.

ஒரு வேலை டோக்கன் அட்டையை மறந்து வைத்திவிட்டு வந்தாலும் டோக்கனில் உள்ள வரிசை என்னை தெரிவித்தால் குடிநீர் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வழங்கப்படும் எனவும் கூறுகின்றனர். வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இல்லாமல் தவித்து வரும் வயது முதிர்ந்த முதியவர்கள் இந்த திட்டத்தால் மிகவும் பயன்பெருவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.