சிறப்புக் களம்

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை கைலாச நாட்டில் நடத்த அனுமதிகோரி வாலிபர் கடிதம்..!

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டியை கைலாச நாட்டில் நடத்த அனுமதிகோரி வாலிபர் கடிதம்..!

kaleelrahman

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை 2021 ஆம் ஆண்டு நித்தியானந்தாவின் கைலாச நாட்டில் நடத்த அனமதி கோரி மதுரையைச் சேர்ந்த இளைஞர் கடிதம் எழுதியுள்ளார்.


மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த இளைஞர் வீரராம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், வீர விளையாட்டுகள் மீது கொண்ட ஆர்வத்தால் அவரது வீட்டில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இத்துடன் வருடந்தோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் இவரது காளைகள் பங்கேற்று வருகின்றன.


 சமீபத்தில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். தலைமறைவாக உள்ள அவர் தனது கைலாச நாட்டில் குடியேற விரும்புவோர்கள் இ-பாஸ்புக் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில் பல்வேறு கிளைகள் கொண்ட மதுரை டெம்பிள் சிட்டி உணவகத்தின் கிளையை கைலாசாவில் துவங்குவதற்கு அனுமதி கேட்டு அதன் உரிமையாளர் குமார் என்பவர் நித்தியனந்தாவிற்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதைத்தொடர்ந்து கைலாச நாட்டில் விவசாயம் செய்ய அனுமதி கேட்டு விவசாயி பாண்டித்துரை என்பவரும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.


இந்த வரிசையில் தற்போது மதுரையை சேர்ந்த வீரராம் என்பவர் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த, மதுரையின் வீரமரபு வீர விளையாட்டுக் கழகம் சார்பில் அனுமதி கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


இதுகுறித்து இளைஞர் வீரராமை தொடர்பு கொண்டு கேட்டபோது... உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துள்ளதால் கோவில் விழாக்கள் மற்றும் வீர விளையாட்டு களை நடத்துவது சவாலாக உள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு காளைகள் இறைச்சிக்காக விற்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


தை பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு காளைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது அந்த விற்பனை குறைந்துள்ளது. ஆகவே கொரோனா நோய்த் தொற்றின் தாக்கமே இல்லாத கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நித்தியானந்தாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார்.