சிறப்புக் களம்

மாமனிதன்… நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்! - திரைவிமர்சனம்

மாமனிதன்… நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்! - திரைவிமர்சனம்

subramani

நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீண்ட எதிர் பார்ப்புக்கு பிறகு வெளியான திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது இந்த சினிமா.

பண்ணைபுரம் எனும் சின்ன கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநராக வாழ்கிறார் ராதாகிருஷ்ணனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி. நேர்மையும் அன்பும் கொண்ட அந்த மனிதனது வாழ்வில் நடந்த திருப்புமுனைகளே கதை. ராதாகிருஷ்ணன் ஒரு எளிய மனிதர். அவர் ஒரு ஆட்டோ ஓட்டுநராக வாழ்ந்து வருகிறார். அவரது வாழ்வில் வந்து சேர்கிறார் காயத்ரி. அழகான, அன்பான குடும்பமாக வாழ்ந்து வரும் ராதாகிருஷ்ணனின் வாழ்வில் எதிர்பாராமல் நுழைந்த துன்பமும் அதன் நீட்சியுமே திரைக்கதை.

துரோகத்தால் குடும்பத்தை விட்டு விட்டு ஓடிப் போகும் ராதாகிருஷணனின் கதாபாத்திர வடிவமைப்பு பலம். ஆனால் அந்த கதாபாத்திரத்திரத்திற்கான நியாயங்கள் ரொம்பவே குறைவாக உள்ளன. கேரளாவில் ராதாகிருஷ்ணன் தங்கி இருக்கும் இடத்தின் எதிரில் இருக்கும் பெண்ணுக்கும் ராதா கிருஷ்ணனுக்குமான உறவு அழகானது. அதனை வலுப்படுத்த அவசியமான காட்சிகள் எதுவும் இல்லை. அதே போல துரோகம் செய்த ஷாஜிக்கு விஜய் சேதுபதி உணவளிக்கும் காட்சியும் முக்கியமானது ஆனால் அந்தக் காட்சியிலும் முறையான ஷாட் கம்போஸிம்ங் மிஸ்ஸிங்.

எம்.சுகுமாரின் ஒளிப்பதிவில் காட்சிகள் இதம். யுவன் சங்கர்ராஜாவின் இசையும் பண்ணைபுரத்தின் இசையை இதமாக இசைக்கத் தவறவில்லை.

படத்தின் முதல் பாதி கமல்ஹாசன் நடித்த மகாநதியின் சாயலில் இருந்தாலும் இரண்டாம் பாதியில் வெவ்வேறு நிலப்பகுதி சார்ந்த காட்சி அமைப்புகளால் அதனை மாற்றி ஒப்பேற்றி இருக்கிறார் சீனு ராமசாமி. ஆனாலும், ஒரு அழகான கதையினை சுமாரான திரைக்கதையால் மோசமான திரைமொழியால் காயப்படுத்திவிட்டார் சீனு ராமசாமி என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. காசியிலிருந்து பணம் அனுப்பிய ரசீதை கையில் வைத்துக் கொண்டு மகள் பேசும் காட்சியில் பாயம்மாவை ஓவர்லேப் இல்லாமல் கொஞ்சம் சேர்த்து கம்போஸ் செய்திருக்கலாம்.

விஜய் சேதுபதிக்கு இது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம். அழகானதும் கூட. ஒரு ஞானியின் சாயலிலான கதாபாத்திரம். ஆனால் அதனை அவர் முழுமையாக உள்வாங்கி நடிக்கவில்லை. கஞ்சா கருப்பு அவசியமற்ற கதாபாத்திரம். குரு சோமசுந்தரத்தின் நடிப்பு கவனிக்கத்தக்கது.

சமீபத்திய பிரம்மாண்ட சினிமா மிரட்டல்களுக்கு இடையே அலட்டிக் கொள்ளாத அழகான கிராமத்து கதை சொல்லியான சீனு ராமசாமி போன்றவர்களின் கதைகளும் தேவையாக உள்ளன. ஆனால் அவை சினிமாவாக இல்லாமல் சினிமா மொழிக்கு நியாயம் செய்யாமல் இருப்பதே கவலை.

மாமனிதன் நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்!

.

சத்யா சுப்ரமணி