நடிகவேள் என இன்றைய தலைமுறையாலும் கொண்டாடப்படும் சாலச் சிறந்த கலைஞன் எம்.ஆர். ராதா. அவரது 38-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
எம்.ஆர். ராதா நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், சிறைச்சாலைக் கைதி எனப் பண்முகம் கொண்ட கலைஞர். எல்லா கருப்பு வெள்ளை கால கலைஞர்களையும்போல நாடக உலகில் இருந்து தனது கலைப்பயணத்தை தொடங்கினாலும், எல்லாவற்றிலும் ஏதோ ஒரு புதுமையைப் புகுத்தி வெகு விரைவிலேயே சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் போற்றப்பட்டவர்.
"உலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்" எனும் வசனத்தோடு தொடங்கும் எம்.ஆர்.ராதாவின் நாடகங்கள் பார்வையாளர்களுக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தின. தொடர்ந்து பெரியாரியத்தையும் மேடை வழியாகவே மக்களுக்குப் புகட்டினார் இவர். அதற்காக அவரை பெரியார் பலமுறை பாராட்டவும் செய்திருக்கிறார்.
1937-ல் வெளியான ராஜசேகரன் திரைப்படத்தில் தொடங்கி பஞ்சாமிர்தம் வரை 118 படங்களில் நடித்திருந்தாலும், எப்போதும் எம்.ஆர்.ராதாவுக்கான அடையாளம் 'ரத்தக் கண்ணீர்' திரைப்படம். பகடியும், எள்ளலும் காட்சிக்கு காட்சி கரை புரண்டோடிய அந்தப் படத்தை வெறும் திரைப்படமாக மட்டுமே நாம் கடந்து விட முடியாது.
எம்.ஆர்.ராதா இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் கொண்டாடப்படும் கலைஞராக இருப்பார். ஏனென்றால், வாழ்க்கை முழுக்க நடித்து கொண்டேயிருந்தாலும் ஒருபோதும் இயல்பில் அரிதாரம் பூசாத ராஜாவாக வலம் வந்தவர் எம்.ஆர்.ராதா.