சிறப்புக் களம்

தேசிய அரசியலில் நுழையும் ஸ்டாலின் - வெற்றி நாயகனாக மாறுவாரா..?

தேசிய அரசியலில் நுழையும் ஸ்டாலின் - வெற்றி நாயகனாக மாறுவாரா..?

rajakannan

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கருணாநிதி, ஸ்டாலினை சந்தித்துள்ளது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக பார்க்கப்படுகிறது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி புதிய கூட்டணியை அமைக்கும் முனைப்பில் மம்தா பானர்ஜியும், சந்திர சேகர் ராவும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த முயற்சியில் திமுகவையும் இணைக்க அவர்கள் விரும்புகிறார்கள். தொடக்கம் முதலே திமுகவுக்கு இந்த அழைப்பு இருந்து வந்துள்ளது. சந்திரசேகர் ராவ் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணி குறித்து முதலில் பேசிய போது அதனை வரவேற்ற மம்தா பானர்ஜி, உடனடியாக ஸ்டாலினையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அதனால், தங்களுடைய முயற்சியில்  திமுகவுக்கு அவர்கள் முக்கியத்தும் அளிக்கிறார்கள் என்பது தெரிகிறது.

திமுகவை பொறுத்தவரை கருணாநிதி உடல் நலக் குறைவால் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் உடல் நலம் தேறி மீண்டும் அரசியல் எப்பொழுது தீவிரமாக ஈடுபடுவார் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போதையை நிலையில் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் இருந்தாலும், அவர் தான் தலைவர் போன்றவர். கட்சியின் எல்லா முக்கிய முடிவுகளையும் அவர் தான் எடுக்கிறார். இத்தகைய நிலையில், 2019 மக்களவை தேர்தலில் ஸ்டாலின் எத்தகைய பங்களிப்பை செலுத்தப் போகிறார் என்பது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், திமுக தலைவர் கருணாநிதி தன்னுடைய அரசியல் சாதுர்யத்தால் தேசிய அளவில் கூட்டணிகளை அமைத்து சாதித்துள்ளார். தற்போது ஸ்டாலினுக்கு தேசிய அரசியல் பங்களிப்பு செலுத்த முக்கியமான வாய்ப்பு கிட்டியுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்றாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இருப்பினும் அதற்கான பேச்சுகள் எழுந்தவண்ணம் உள்ளது. அப்படி இரண்டு தேர்தல்களும் ஒன்றாக வரும் பட்சத்தில் திமுக தற்போது எடுக்கும் முயற்சி இரட்டை பலனை அளிக்கும்.

ஸ்டாலின், சந்திரசேகர் ராவ் இடையிலான இந்தச் சந்திப்பில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து அவர்கள் பேசியுள்ளார். ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் சந்திரசேகர்ராவ் பேசுகையில், “என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது என்பது குறித்து நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்திய நிர்வாகத்தில் மக்களுக்குப் பயன்தரக்கூடிய மாற்றம் வேண்டும், அதே போல் தேசிய அரசியலில் மாற்றம் வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டு வருகிறது. நாங்கள் நாட்டின் பல்வேறு தலைவர்களுடன் பேசி வருகிறோம். மம்தா பானர்னஜியுடன் நாங்கள் இருவரும் தொலைபேசி வாயிலாகப் பேசினோம். மேலும் பல தலைவர்களுடனும் பேச உள்ளோம்” என்று கூறினார். தெலுங்கானாவில் மே 10ஆம் தேதி நடைபெற உள்ள விவசாயிகள் நலத்திட்ட தொடக்க விழாவிற்கு மு.க.ஸ்டாலினிற்கு அழைப்பு விடுத்ததாகவும் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு பெயரளவிலான சந்திப்பாக முடியாமல் அடுத்த கட்ட முயற்சிக்கும் வித்திட்டுள்ளார். நிச்சயம் அந்த விழாவில் ஸ்டாலின் சந்திப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறார். அதேபோல், மாநில சுயாட்சிக்கு குரல் கொடுக்கும் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கொண்டு திமுக சார்பில் விரைவில் தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என முகஸ்டாலின் கூறியுள்ளதும் முக்கியமான ஒன்று.

தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மம்தாவும், சந்திரசேகர் ராவும் தற்போது மாநில முதலமைச்சர்களாக உள்ளனர். மத்திய பாஜக அரசினால் ஏற்பட்ட பாதிப்பால் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் உருவாக்கும் புதிய அணியில் காங்கிரஸுக்கு இடம் உண்டா இல்லையா என்பதுதான். சந்திரசேகர் ராவ் வெளிப்படையாக காங்கிரஸுக்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். மம்தா அப்படி அல்ல. காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும் மனநிலையில் தான் இருக்கிறார். திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்ததாக அவரே கூறியுள்ளார்.  ஆனால், 2019 மக்களவை தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து வெளிப்படையாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை காங்கிரஸ் அல்லாமல் மிகப்பெரிய கூட்டணி அமைந்தால் அதனையும் அவர் ஏற்பார் என்றே தெரிகிறது. ஆனால், திமுக அப்படி இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அவ்வளவு எளிதில் திமுக கைவிடும் என்று சொல்ல முடியாது. தென் மாநிலங்களில் இன்றளவும் காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அதேபோல், மத்தியில் அடுத்த ஆண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்துவிட்டால் அதுவும் திமுகவுக்கு சிக்கலாக மாறிவிடும். அதனால், காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தான் திமுக ஈடுபடும். 

ஆனால், இந்த இடத்தில் மற்றொரு முக்கியமான விஷயமாக ஸ்டானின் கரிஷ்மேடிக் தலைமையும் எந்த அளவில் உள்ளது என்று பார்க்க வேண்டியுள்ளது. கொள்கை ரீதியிலான விஷயங்களில் ஸ்டாலின் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கிறாரா? என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. திராவிட நாடு குறித்த பேச்சு அடிபட்ட போது, முதல் நாள் அவர் அளித்த பேட்டிக்கும், இரண்டாம் நாள் அவர் அளித்த பேட்டிக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது. அதில் ஒரு தடுமாற்றம், உறுதியின்மை தெரிந்தது. சமீபத்தில் திருச்சியில் திக சார்பில் நடைபெற்ற நாத்திக மாநாட்டில் பேசிய கனிமொழி, “கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியல் அருகே எப்போதும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால், அவரே உண்டியலை பாதுகாப்பாரே? ஏன் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிக்கிறார்கள்?. கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் கடவுளை நம்புகிறார்களா?” எனப் பேசி இருந்தார். இப்படியொரு கொள்கை ரீதியிலான பேச்சை ஸ்டாலின் ஒருபோதும் பேசியதில்லை. இதுபோன்ற விவகாரங்களில் ஸ்டாலின் தொடர்ந்து மவுனம் காக்கிறார் அல்லது தடுமாறுகிறார். 

திமுகவின் பலமே அதன் கொள்கை தான். அதில் தனக்கு வசதியாக மாநில சுயாட்சியை மட்டும் ஸ்டாலின் எடுத்துக் கொள்கிறார். அதுமட்டும் ஒருபோதும் போதாது. திமுகவின் கொள்கைகளை ஸ்வீகரித்து முழுமையான தலைவராக மாறினால் மட்டுமே தேசிய அளவில் ஸ்டாலினால் புதிய தலைவராக உருவெடுக்க முடியும். ஏனெனில் மம்தாவோ, சந்திரசேகர் ராவோ தங்களது கட்சியின் தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்கள். ஆனால் ஸ்டாலின் அப்படியல்ல. அவர் கடந்த ஓராண்டாக தான் திமுகவில் கருணாநிதி இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறார். அவருக்கு இது ஆரம்ப காலம். அவர் இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைவே இருக்கிறது. அதற்கு முதல் மற்றும் முக்கியமான தேர்வாக வருகின்ற மக்களவை தேர்தல் உள்ளது. 

தமிழக அரசியலை பொருத்தவரை எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தாலும், அவரை சுற்றியே அரசியல் நகர்ந்து வருகிறது. ஒரு எதிர்க்கட்சி தலைவராக பல்வேறு பிரச்னைகளை அவர் முன்னெடுத்து வருகிறார். ஆனால், ஸ்டாலின் எடுக்கும் ஒவ்வொரு அரசியல் நகர்வையும் உற்று நோக்கினால், பெரும்பாலனவை காமடியாகவே மாறிவிடுகிறது. அதற்கு சட்டசபையில் திமுக நடத்திய அமளி ஒரு உதாரணம். தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்காக முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆரோக்கியமான அரசியலை முன்னெடுத்தார். ஆனால் அந்த முயற்சியும் நீண்ட நாட்கள்  நீடிக்கவில்லை. 

காவிரி விவகாரத்தில் அண்ணா சாலை மற்றும் மெரினாவில் ஸ்டாலின் ஒருங்கிணைத்த போராட்டம் தான் ஒரளவுக்கு வெற்றி பெற்ற போராட்டமாக பார்க்கப்படுகிறது. அதன்பிறகு ஸ்டாலின் மேற்கொண்ட நடைபயணம் திமுகவுக்கு பலன் அளிக்கலாம், ஆனல் ஒரு அரசியல் வெற்றியாக மாறியதா என்பது சந்தேகம் தான். இருப்பினும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைந்து தொடர்ச்சியாக அவர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் தன்னை தொடர்ந்து அவர் நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.

ஆனால், எல்லாவற்றையும் விட தேர்தல் என்பது மிகவும் முக்கியம். செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். அந்தத் தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் டெபாசிஸ்ட்டும் இழந்தது. இது திமுகவுக்கு அதன் வரலாற்றில் மிகப்பெரிய அடி. திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பாப்புகள் நிலவிய நிலையில் படுதோல்வி அடைந்தது ஸ்டாலினுக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்துவிட்டதாக பேசப்பட்டது. 

அதனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து எத்தனை போராட்டங்களை ஸ்டாலின் நடத்தினாலும் தேர்தல் நேரத்தில் எப்படி செயல்பட்டு திமுகவை வெற்றி பெற செய்யப்போகிறார் என்பதுதான் முக்கியமானது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளதால் பொறுத்திருந்து தான் அதனை பார்க்க வேண்டியுள்ளது.